திமுகவை வீழ்த்துவதற்காக எதிரணி பல்வேறு சூழ்ச்சிகளை கையாள்கிறது. எந்த சூழ்ச்சியும் திமுக கூட்டணியிடம் பலிக்காது என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:
6வது முறையாக முதல்வர் கருணாநிதி, அவரால் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவையில் பதவியேற்பார். தொடர்ந்து செய்து வரும் சாதனை திட்டங்களால் தான் 19 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து வந்துள்ளார்.
திமுகவினர் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனர். உப்பு சப்பில்லாத குறைகளை கூறியே எதிர்க்கட்சியினர் வாக்கு சேகரிக்கின்றனர்.
எஸ்டேட் பங்களாவை விட்டு வெளியே வர நேரமில்லாமல் இருந்த ஜெயலலிதா தேர்தல் வந்தவுடன், மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறிக்கொண்டு உலா வருகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்வதில் குறியாக இருக்கிறார். அவரது செயலுக்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கிறது.
திமுகவை வீழ்த்துவதற்காக எதிரணி பல்வேறு சூழ்ச்சிகளை கையாள்கிறது. எந்த சூழ்ச்சியும் திமுக கூட்டணியிடம் பலிக்காது. கர்ப்பிணி, முதியோர், விதவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கியவர் முதல்வர் கருணாநிதி. 2001&2006 வரை ஜெயலலிதா அடித்த கொள்ளையை உலகம் அறியும். எப்போதும் உச்சியில் இருப்பது உதயசூரியன், உதிர்வது தான் இரட்டை இலை.
நான் திமுகவுக்காக மட்டுமே பேசுவதாக கூறுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எனது சகோதரர்.
அவரது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பேசுவேன். பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மரியாதைக்குரிய தலைவர், அவரது வேட்பாளருக்கு ஆதரவாகவும் பேசுவேன். திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. அதிமுக கூட்டணி பணத்திற்காக அமைந்த கூட்டணி.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் உடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து நடிகை குஷ்பு பேசினார்.
No comments:
Post a Comment