போரில் இரண்டு வகை உண்டு. எதிரி எதிரியாகவே நின்று நம்முடன் போரிடுவது முதல் வகை. எதிரியும் நம்மைப்போலவே வேடம் பூண்டு போருக்கு வருவது இரண்டாவது வகை. யார் நம்மவர், யார் மாற்றார் என்று அடையாளம் தெரியாமல் அனைவரையும் குழப்ப வேண்டும் என்பதே இரண்டாவது வகைப் போரின் நோக்கம்.
அந்த நோக்கத்தோடுதான், அ.தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தி.மு.க.வை விட ஒரு படி மேலே போய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறது. ஆனாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். எவ்வளவு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன என்பது முக்கியமன்று. வாக்குறுதிகளை யார் வழங்குகின்றனர் என்பதே முக்கியம். ஜெயலலிதா சொல்வார், செய்ய மாட்டார். கலைஞரோ சொன்னதைச் செய்வார், சொன்னவற்றிற்கு மேலேயும் செய்வார்.
இரண்டு பேரைப் பற்றியும் நாம் இவ்வாறு கூறுவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அப்போது வெளியிட்ட அவரது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினாரா, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், அப்போது வெளியிட்ட அவரது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றாமல் விட்டாரா என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே நமக்கு உண்மை தெரியும்.
எடுத்துக்காட்டாக, 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் மானாவாரி பூமியாக இருக்கும் 55 இலட்சம் யஹக்டேர் நிலத்தில், ‘ புன்செய் புரட்சி’ நடத்தப் போவதாகவும், பழத்தோட்டப் பண்ணைகளை உருவாக்கப் போவதாகவும் அறிக்கை கூறுகிறது.
அப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? புன்செய் புரட்சிக்கான ஒரேயயாரு திட்டமாவது அவர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதா?
நெடுஞ்சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் உயிரினைக் காக்க, 50 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற வகையில், நெடுஞ்சாலைகளையயாட்டி மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. எந்த நெடுஞ்சாலையிலாவது, அப்படி ஒரு மருத்துவமனை அவரது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதா? அதற்கான முயற்சிகளாவது மேற்கொள்ளப்பட்டனவா?
சென்னை அருகே திருமுல்லைவாயிலில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில், தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. அறிக்கை உறுதியளித்துள்ளதே... ஏதேனும் நடந்ததா?
சேதுக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறது அறிக்கை. “இராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில், கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்திக் கால்வாய் அமைப்பது” பற்றிப் பேசும் அறிக்கைக்கும், ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா நடந்துகொண்ட விதத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
மணல் மேடுகள், பாறைகள் என்று அறிக்கையில் சொல்லி விட்டுப் பிறகு,‘ராமர் பாலத்தை இடித்து இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தலாமா?’ என்று கேட்ட ஜெயலலிதாவை எப்படி நம்புவது?
‘பேசும் நா இரண்டுடையாய் போற்றி’ என்று, அறிஞர் அண்ணா, ஆரிய மாயையில் கூறுவது எவ்வளவு பொருத்தமாக உள்ளது !
இன்னொரு வேடிக்கையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 2001ஆம் ஆண்டு, அ.தி.மு.க. தன் அறிக்கையில் கூறிய பலவற்றை, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் கலைஞர் செய்து முடித் துள்ளார் என்பதுதான் அது.
தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என மத்திய அரசை அறிவிக்க வைப்போம் என்கிறது அ.தி.மு.க. அறிக்கை. ஆனால் அதனைச் செய்தவர் கலைஞர்.
உயிர்காக்கும் மருத்துவமனைகளை நெடுஞ்சாலைகளில் உருவாக்குவோம் என்றார் ஜெயலலிதா. நோயர் ஊர்தி 108 மூலம் அதனைச் செய்து, உயிர் காக்கும் உன்னதத் தலைவராக விளங்குகின்றார் கலைஞர்.
மென்பொருள் பூங்கா போன்ற பெரிய நிறுவனங்களை ஏற்படுத்துவோம் என்று அ.தி.மு.க. அறிக்கை சொன்னது. சென்னை, அடையாறு பகுதியில் அந்த நிறுவனத்தை (TIDEL PARK ) ஏற்படுத்தியவர் கலைஞர்.
சேதுக்கால்வாய்த் திட்டத்தை அறிக்கையில் ஆதரித்துவிட்டு, நடைமுறையில் எதிர்த்தவர் ஜெயலலிதா. சேதுக்கால்வாய்த் திட்டத்திற்காகச் செயல்பட்டவரும், இன்றும் அதற்காகக் குரல் கொடுத்து வருபவரும் கலைஞர்.
இந்த உண்மைகளை எல்லாம் மக்கள் உணர்ந்தே உள்ளனர். சொல்பவர் ஜெயலலிதா, செய்பவர் கலைஞர் என்னும் வேறுபாட்டை அறிந்தே உள்ளனர்.
நகர்ப்புறத்து மக்களை ஊடகங்கள் குழப்புகின்றன. ஆனால் சிற்றூர் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். தி.மு.க.விற்குப் பெண்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது.
எனவே தி.மு.க.ஆட்சியே மீண்டும் மலரும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்கான ஆதரவு அலைகளைத் தமிழகமெங்கும் பார்க்க முடிகிறது.
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்
No comments:
Post a Comment