கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி வரக்கூடாது - வாக்காளர்களுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்




மதுரையில் 06.04.2011 அன்று நடந்த திமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
மதுரை மண்டலத்தில் கட்சியை வளர்க்கும் தானைத்தலைவராக மறைந்த மேயர் முத்து செயல்பட்டார். அண்ணாவின் தளபதிகளில் மிகச்சிறந்த தளபதியாக விளங்கினார். அந்த காலத்தில், முத்துவோடு மதுரை மண்டலத்தில் ஆற்றிய பணிகள், இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது.
அழகிரி, தென்மண்டல அமைப்பு செயலாளர் மட்டுமல்ல, அவரை அஞ்சாநெஞ்சன் என்று அழைக்கும் போது என்னை இந்த இயக்கத்தில் ஆளாக்கிய பட்டுக்கோட்டை அழகிரி பெயர் தான் நினைவுக்கு வரும். அவர்தான், என்னை திராவிட இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவராக உலவவிட்டார். அதுபோலவே, அவரது நம்பிக்கையை நான் காப்பாற்றுவது போல அஞ்சா நெஞ்சனும் அவரது வழித் தோன்றலாய் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
மதுரை மண்டலத்தில் திமுகவை வளர்க்க நானும் மேயர் முத்துவும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மதுரையில் 1949ம் ஆண்டு உருவான இந்த திராவிட முன்னேற்ற கழகத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதுரையில், 100 இடங்களில் திமுக கொடியை ஏற்றுவது என்று நானும் மதுரை முத்துவும் திட்டமிட்டு கொடி ஏற்றினோம். அப்படி அந்த கொடியை ஏற்றும் போது முத்து கொடியின் கயிற்றை எடுத்து என்னிடம் கொடுப்பார். கொடியை ஏற்றும்போதே அந்த கயிற்றின் மீது அரிவாள், கத்தி வந்து விழும். அதில், அந்த கயிறு அறுந்து விழும். அப்போது என் கையிலும், முத்துவின் கையிலும் ரத்தம் கொட்டும். அந்த ரத்தத்தை துண்டில் ஏந்தியபடி தொண்டர்கள் எங்களை மருத்துவ மனைக்கு எடுத்து செல்வார்கள். அத்துடன் கொடி ஏற்றும் நிகழச்சி முடிந்துவிடாது. அடுத்த கொடியை ஏற்றுவோம்.
இப்படி அடுத்து அடுத்து கொடிகளை ஏற்றியதால் இன்று விண்முட்ட கழக கொடிகளை மதுரையில் காண முடிகிறது. இந்த மதுரையில் தான் திராவிட இயக்கத்தின் மாநாடு நடந்தது. மாநாட்டை கலைக்க வேண்டும் என்பதற்காக தீவைத்து கொளுத்தி, சீரழித்து தொண்டர்களை, தலைவர்களை அடித்து நொறுக்கினார்கள். அதனால் கார்களுக்கு அடியிலும், கிடைத்த இடங்களில் பதுங்கியும், வண்டிகளிலும் ஏறியும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் ஓடுவார்கள். அப்படி அந்த மாநாட்டின் கொடுமை நாடறிந்த ஒன்றாக இருந்தது.
இந்த இயக்கத்தை வளர்த்த எத்தனையோ பேர் இன்று இந்த மேடையில் இல்லை. ஆனால் அவர்கள் செய்த தொண்டு உணர்வு இன்று நம்மிடையே உள்ளது. அதற்கு சாட்சியாக பொன் முத்துராமலிங்கம், அழகிரி போன்றவர்களின் உருவில் காண்கிறோம். யாரும் எதிர்க்க முடியாத, எதற்கும் கட்டுப்படாத இயற்கை, அதற்கு பலியான அவர்களுக்கு கண்ணீரால் அபிஷேகம் செய்யாமல் இருக்கவும் முடியாது.
இந்த மாசி வீதியில் நான் அன்று பேசிய நினைவு வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் நான் இருப்பேன் என்று எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. ஆண்டவனுக்கு தெரியும் என்று சொல்ல மாட்டேன். ஆண்டவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அன்று என்னோடு கூட்டங்களில் பேசிய, இயக்கத்தை வளர்த்த தோழர்கள், வீரர்கள், வீராங்கனைகள் பெயர்களை சொல்லக் காரணம் என்னுடைய சுயசரிதத்தில் மறையாமல் இருக்கும் என்பதற்காக இந்த கைமாறு. அதனால் அவற்றை பதிய வைக்கிறேன்.
நீங்கள் ஆசைப்படுவது போல் நான் 6&வது முறையாக முதல்வராக வந்தாலும், வராவிட்டாலும்... ஏன் சந்தேகம் என்று அழகிரி கேட்பது புரிகிறது. நாம் செய்ய வேண்டிய மிகமுக்கிய காரியங்கள், நம் கட்சியினருக்காக அல்ல. நாம் ஆற்ற வேண்டிய உதவிகளை விட, புரிய வேண்டிய பெரும் சாதனை நாட்டிற்கு, மொழிக்கு, நாம் செய்தாக வேண்டும். எனவே, யார் வந்து சொல்வார்களோ, சொல்ல மாட்டார்களோ... இதை நான் சொல்லுகிறேன்.
இதுதான், என்னுடைய குறிக்கோள். இப்போது என்னை சிலர் திட்டுகிறார்களே... அவர்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகாத காலத்திலேயே... நான் மதுரையில் அரசியல் நடத்தியவன். அடி, உதை பட்டவன். மதுரையில் சிறையில் இருந்தவன். அத்தகைய திட்டு எனக்கு உரமாக இருக்கும். 1971ல் திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி உருவாயிற்று. நகராட்சி தலைவராக இருந்த முத்துவை மேயர் ஆக்கி அதற்கான பதக்கத்தை அணிவித்த காட்சி இன்னும் என் நெஞ்சில் நிழல் ஆடுகிறது.
மதுரையிலே மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். ரூ. 8 கோடி செலவில் வைகை ஆற்றின் கரைகள் சீரமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். மதுரையில் தியாகி விஸ்வநாததாசுக்கு நினைவுச் சின்னம் ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும் இந்த கருணாநிதியால்தான்.
தும்பைப்பட்டியில் ரூ. 25 லட்சம் செலவில் தியாகி கக்கனுக்கு நினைவாலயம் 28.2.01ல் கட்டி திறந்து வைத்ததும் திமுக ஆட்சியில்தான். மதுரையில் தியாகி கக்கனுக்கு திருவுருவச் சிலையை 31.8.97ல் திறந்து வைத்ததும் திமுக ஆட்சியில்தான். இதையெல்லாம் சொல்லக் காரணம் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தோம் என்பதற்காக அல்ல.
இங்கே நீதிமன்றத்துக்கு அடிக்கல் நாட்டி அதை திறந்துவைத்ததும் திமுக ஆட்சியில்தான். மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளை தேவை என்று கோரிக்கையை நிறைவேற்றியதும் இந்த ஆட்சியில்தான். இதையெல்லாம் பட்டியலிட்டு சொல்லக் காரணம், இன்றைக்கு தேர்தல் கூட்டங்களிலே வாக்குகளை கேட்கிறார்களே. நாம் என்ன சொல்லி வாக்கு கேட்கிறோம். என்னைப்போல, அல்லது நம்முடைய நண்பர்களைப்போல, அல்லது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைப்போல சாதனைகளைச் சொல்லி, இன்னும் சாதனைகள் தொடர வேண்டும் என்று சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால், மாற்றார், அப்படிக்கூடச் சொல்ல மாட்டேன், எதிரணியைச் சேர்ந்த நண்பர்கள், கருணாநிதி திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவன் என்று சொல்லி எனக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்.
கருணாநிதி திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தார் என்று புகழாரம்சூட்டி வருகின்றனர். பதிலுக்கு பதில் நானும் சொல்ல முடியும். அப்படி சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்னது போல என்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் அதைப்பற்றி கவலை இல்லை. என் இயக்கத்தை பற்றிச் சொன்னாலும், நான் என் வேலையை செய்து கொண்டே போவேன். என் ஆட்சியைப் பற்றி சொன்னாலும் கவலை இல்லை.
நபிகள் நாயகம் ஒவ்வொரு நாளும் தெருவில் செல்லும் போது ஒரு அம்மையார், ஒரு வீட்டில் மாடியில் இருந்து குப்பையை அவர் தலையில் கொட்டி விடுவார். அவரும் அதைப் பார்த்து தட்டிவிட்டு போய்விடுவாராம். ஒரு நாள் அந்த தெருவில் நபிகள் வரும்போது தினமும் குப்பை கொட்டும் அந்த அம்மையாரைக் காணவில்லை. பக்கத்துவீட்டு காரரிடம் நபிகள் கேட்டபோது அந்த அம்மையாருக்கு உடல் நலம் சரியில்லை. கடுமையான காய்ச்சல் அதனால் அவர் குப்பை கொட்டவில்லை என்று தெரிவித்தார். நபிகள் பதறிப்போய் அந்த அம்மையாரை போய் பார்த்தார். அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு வந்தார். அந்த அம்மையாருக்கு வெட்கமாக போய்விட்டது. அதுவரை நபிகள் நாயகத்தை எதிர்த்தவர் அவரது வழியை ஏற்றார் என்பது வரலாறு.
அது போல குப்பையை கொட்டக் கொட்ட, அந்த குப்பை வெளியில் வர வர கொட்டுவோர் கைகள்தான் அலுத்துப்போகும். நான் குப்பைகளை பற்றி கவலைப்படவில்லை. பொறுத்தார் பூமி ஆள்வார். ஓராண்டு அல்ல, ஈராண்டல்ல பல ஆண்டுகள் பொறுத்துக் கொண்டு நாம் பூமியை ஆண்டுகொண்டு இருக்கிறோம்.
ஆனால் அந்த அம்மையார்ஜெயலலிதா அங்கே போய் அமர ஆசைப்படுகிறார். போகிற இடம் எல்லாம் என்மீது பழி போடுகிறார். என்மீது குற்றம் சாட்டுகிறார். அப்படி என்ன குற்றம் செய்துவிட்டேன். நான் செய்த ஒரே குற்றம் தமிழ் படித்ததுதான், நான் தமிழனாக பிறந்ததே குற்றம். இன்னொரு குற்றம் தமிழனை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணியது தான்.
ஜெயலலிதா போன்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள், தமிழ்நாட்டில் இவன் பிறந்திருக்க கூடாது. இவன் பிறந்ததால் பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோரின் கொள்கைகளை பின்பற்றி நடக்கிறான் என்பதுதான். நான் 1957ல் குளித்தலை தொகுதியில் நின்று சட்ட மன்றத்துக்கு சென்றேன். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தாள்களை எடுத்துப் பார்க்கிறேன். அதிலே, பல ஜாதி பெயர்களின் பட்டியல் இருந்தது. ஐயர், ஐயங்கார் என்றும் வண்ணான், மருத்துவன், கருமான் என்றும் இருந்தது. உடனே, நான் அமைச்சர் கக்கனைப் பார்த்து, சந்தேகத்தைக் கேட்டேன். ஐயருக்கும், ஐயர், ஐயங்கர் என்றும் போட்டிருக்கிறது.
வண்ணான், மருத்துவன் என்று இன் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் வண்ணார், மருத்துவர் என்று ‘ர்’ போடத்தான் மறந்து விட்டீர்களா என்று கேட்டேன். உடனே காமராஜர் கக்கனைப் பார்த்து கோபப்பட்டார். மறுநாள், இது மாற்றப்பட்டது. இந்த வரலாற்றை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால். இன்று கூட நீங்கள் சட்டமன்ற பதிவேட்டை எடுத்துப் பார்க்கலாம். இந்த உணர்வு, இளமையிலேயே வந்த உணர்வு. நேற்றைய தினம் தீவுத்திடலில் நடந்த கூட்டத்தில் கூட என்ன கோரிக்கை வைத்தேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்கித் தாருங்கள். நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துங்கள், முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என்றுதானே கேட்டேனே தவிர, என் வாழ்வுக்காக, என் சுகத்துக்காக ஏதாவது கேட்டிருந்தால், நான் பாளையங்கோட்டையை பார்த்திருக்க மாட்டேன். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்க மாட்டேன்.
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த என் தம்பி கருணாநிதி என்று என்னை கட்டிப்பிடித்து, பாளையங்கோட்டை சிறையில் என் தம்பி இருக்கிற இடம்தான், யாத்திரை தளம் என்றார் அண்ணா. அது எனக்கு கிடைத்த பாக்கியம். சில பேர் சிறைச்சாலையை சூட்டிங்கில் பார்க்கிறார்கள். நான் உங்களுக்காக வாழக்கூடியவன். எந்த தியாகத்தையும் செய்யக் கூடியவன். என்னை பற்றி யார் எதைச் சொன்னாலும், கவலைப்பட வேண்டியதில்லை.
நான் இவற்றை எல்லாம் சொல்வதற்கு காரணம், நான் கற்ற பாடங்களை புத்தகங்களாக வெளியிடுவேன். ஒருவர் பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணத்தை உங்களுக்கு தர முடியும். பெருமக்களின் மனதை கவர பவுடர் பூசிக் கொண்டா, இல்லை. தமிழ் மக்களின் மனதை கவர, உள்ள பகுத்தறிவை நிலை நாட்ட வேண்டும். நாம் வகுத்த காரியத்தை எக்கு உள்ளத்தோடு சாதிக்க வேண்டும். மக்களுடைய எதிர்கால வாழ்வு உயர, நாம் பாடுபடவேண்டும். அந்த உணர்வை யாரும் அழிக்க முடியாது. நம்மை எவரும் வெல்ல முடியாது. தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி வந்து விடக் கூடாது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஆறாவது முறையும் கருணாநிதிதான் முதல்வர் - கூட்டணி கட்சியினர் பேச்சு :
மதுரையில் 06.04.2011 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கூட்டணி கட்சியினர் பேசியதாவது:
சந்தானம்(பா.பிளாக்):
வாடிப்பட்டியில் ஜவுளிப்பூங்கா, மேலூர் கிரானைட் தொழிற்சாலை, மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் என்று பல்வேறு திட்டங்கள் மதுரைக்கு திமுக ஆட்சியில்தான் கிடைத்தது. ஒரு போன் செய்ததும் 108 ஆம்புலன்ஸ் வீட்டுக்கே வந்து நோயாளியை ஏற்றிச் சென்று சிகிச்சை தருகிறது. இப்படி பல திட்டங்கள் தொடர்ந்து பெற கருணாநிதியை 6வது முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏற்ற வேண்டும்.
தெய்வநாயகம் (நகர் காங், தலைவர்):
காங்கிரஸ்& திமுக கூட்டணியை உருவாக்கிய பெருமை மு.க.அழகிரியை சேரும். 6வது முறை முதல்வராக கருணாநிதி வருவது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
ராம்பாபு (காங்., முன்னாள் எம்பி):
கூட்டணி இயக்கங்களை மதிக்காமல் மேடையில் அமர்வதை இழிவாக எதிரணியில் இருப் போர் நினைக்கின்றனர். ஆனால் சோனியாவின் நம்பிக்கைக்குரியவராக, கூட்டணி இயக்கத்தின் பிதாவாக கருணாநிதி இருக்கிறார். தமிழக முதல்வர் அளித்துள்ள தேர்தல் அறிக்கை, இந்தியா முழுவதும் இருப்போர் தர வேண்டிய அறிக்கையாக பலருக்கும் வழிகாட்டும் அகராதியாக இருக்கிறது.
பஷீர் அகமது (தேசிய லீக்):
பொது சிவில் சட்டம், ஆடுகோழி தடை, மதமாற்ற தடை சட்டங்கள், எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் என மக்களை பாதிக்கும் சட்டங்களை ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் அனுபவித்தனர். பல்வேறு கணிப்புகளை எழுதிவந்த பத்திரிகைகள் இப்போது கழக ஆட்சிதான் வருமென்று எழுத ஆரம்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி திட்ட மென மக்கள் தாகம் போக்கியவர் கருணாநிதி. சிறு பான்மை மக்களுக்கு ஆதர வான இத்தலைவரை நாம் ஆதரிப்பது அவசியம்.
கம்பம் செல்வேந்திரன் (திமுக தமிழக டெல்லி பிரதிநிதி):
மதுரை சித்திரைத்திருவிழா, கும்பகோ ணம் மகாமகம், திருவண்ணாமலை தீபத் திருவிழா கூட்டத்தை பார்க்கிறேன். இக்கூட்டம் சத்தியத்திற்கு சாட்சி சொல்கிறது. அது 6ம் முறையாக தலைவர் கருணா நிதி முதல்வராவார் என் பதைக் காட்டுகிறது. முதல் வர் கருணாநிதி ஆட்சியில் தாயின் மடியில் இருக்கும் குழந்தையைப் போல் தமிழ்நாடு அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது தாயின் மடியில் உள்ள தமிழகத்தை பிடுங்கி பேயின் மடியில் அமரவைக்க நினைக் கிறார்கள். அதை முறியடிக் கும் கடமை அனைவருக்கும் உண்டு.
பொன் முத்துராமலிங்கம் (திமுக தீர்மானக்குழு தலைவர்):
அழகிரி தென்மாவட்ட வெற்றியை உறுதி செய்திருக்கிறார். முடிவுகளில் கம்ப்யூட்டர் தோற்கும், அழகிரி தோற்க மாட்டார். அந்தளவு அரசியல் நுண்ணறிவு கொண்டவர். இத்தேர்தலில் ஒரு புது மையை தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டிருக்கிறது. தனித்த அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் அவ்வளவுதான். ஆனால் மக்களை அச்சுறுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. அதை அரசியல் சட்டம் தெரிவிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம், காவல்துறை எல்லையற்ற வரம்பற்ற கட்டுப்பாடுகள், சோதனைகள் செய்கின்றன. மக்களை அச்சுறுத்துவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைக்கின்றனர். இது எதிர்விளைவையே உருவாக்கும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

அலைகடலென திரண்ட கூட்டம் :

மதுரையில் 06.04.2011 அன்று நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியின் பேச்சை கேட்க அலைகடலென மக் கள் கூட்டம் திரண்டது.
* முதல்வர் கருணாநிதி ஐம்பது நிமிட நேரம் பேசி முடித்ததும் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது ஒவ்வொரு வேட்பாளரிடமும் வெற்றி வாய்ப்பு குறித்து அவர் கேட்டறிந்தார்.
* பிரசார கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தலைமை வகித்தார். கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி முடிக்கும் போது இரவு 9.10 மணி ஆனதால் முதல்வர் கருணாநிதியை பேசும்படி அழைத்தனர். அவர் மு.க.அழகிரியி டம், ‘நீ பேசவில்லையா?’ என்றார். அதற்கு அவர் ‘நீங் கள் நீண்ட நேரம் பேசுங்கள்’ என்றார்.
* முதல்வர் கருணாநிதி பேசும் போது மு.க.அழ கிரியை குறிப்பிட்டு யாருக் கும் அஞ்சா நெஞ்சன் என் றார். அப்போது கூட்டத்தில் பலத்த ஆரவாரம் எழுந்தது. தொடர்ந்து அவர் பேசும் போது ‘எனக்கு மட்டும் அஞ்சும் நெஞ்சன்’ என்றார். அப்போது சிரிப்பொலி எழுந்தது.
* முதல்வர் கருணாநிதியின் பிரசார கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. முஸ் லிம் லீக் உள்ளிட்ட கூட் டணி கட்சிகளின் கொடிகளுடன் தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதோடு மதிமுக கொடி யுடன் ஒரு தொண்டர் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
* முதல்வர் கருணாநிதி பேச்சை கேட்க மாலை 5 மணி முதல் கூட்டம் வரத்தொடங்கியது. கருணாநிதி இரவு 8 மணி அளவில் மே டைக்கு வந்தார். அப்போது பலத்த ஆரவாரம் எழுந்தது. 9.10 மணி அளவில் பேசத் தொடங்கிய கருணாநிதி சரியாக 10 மணிக்கு பேச்சை முடித்தார். அவரது பேச்சை கேட்க மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி, கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ஆகிய மூன்று பெரிய வீதிகளிலும் மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர். வடக்கு வெளிவீதி உள்பட அப்பகுதிகளில் உள்ள சிறிய வீதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் முடிந்ததும் மக்கள் கலைந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.


No comments:

Post a Comment