திமுகவை பழி வாங்க ஜெயலலிதா எடுத்துள்ள தவறான ஆயுதம் இரு புறமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதமாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 27.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொய் வழக்கு போடுவதில் ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமே இல்லை. அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக தனக்கு பிடிக்காதவர்கள் மீது காவல் துறையை ஏவி விட்டு பொய் வழக்கு புனைந்து நடவடிக்கை எடுக்க தவற மாட்டார்.
உதாரணமாக, காஞ்சி சங்கராச்சாரியார்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள். அவர்களே தங்கள் மீது அ.தி.மு.க ஆட்சியினரால் 2004ம் ஆண்டு போடப்பட்டது பொய் வழக்கு என்று நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வழக்கு செங்கல்பட்டு நீதி மன்றத்தில் இருந்து பாண்டிச்சேரி நீதி மன்றத்துக்கு உச்ச நீதிமன்றமே மாற்றியதாகும். மாற்றும்போது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.சி. லகோதி, ஜி.பி. மாத்தூர் ஆகியோர் என்ன சொன்னார்கள்?
�தமிழக அரசு இதில் தேவையற்ற ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர எந்த அளவிற்கும் செல்ல தயாராக உள்ளது. இந்த வழக்கு தொடர்பான செய்திகள் அல்லது பேட்டிகளை வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை அச்சுறுத்த தமிழக அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும் பல்வேறு தடைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது� என கூறி அந்த செய்தி 27&10&05 அன்று வெளியானது.
சங்கராச்சாரியார்கள் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் என்பதை அப்போதே சில ஏடுகள் வெளியிட்டன. சென்னை புறநகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையை கையகப்படுத்துவது குறித்து ஜெயலலிதாவுக்கு சங்கராச்சாரியார்கள் மீது பகை இருந்ததாகவும், அதுதான் கைது அளவுக்கு நடவடிக்கை எடுக்க காரணம் என்றும் எழுதியிருந்தன.
சங்கராச்சாரியார்கள் மீதே இந்த நடவடிக்கை என்றால் அரசியல்வாதிகள் அவருக்குஎம்மாத்திரம்? ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவக காப்பாளர் முத்து, உயர் நீதிமன்ற நீதியரசரின் மருமகன் ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாகவும் வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் வைத்திருந்ததாகவும், மதுரையை சேர்ந்த செரினா கஞ்சா வைத்திருந்ததாகவும் பொய் வழக்குகள் போட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 29&6&01ல் நள்ளிரவில் என் படுக்கை அறை வரை காவல்துறையினரை நுழைய செய்து, என்னை தாக்கி, கைது செய்வதாக கூறி என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்று சொல்லாமலே இழுத்துச் சென்ற கொடுமையை செய்தது யார்? நான் செய்த குற்றம் என்ன? சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் தவறு என்று கூறினார்களே என்ன ஆயிற்று அந்த வழக்கு? நிரூபிக்க முடிந்ததா? பொய் வழக்குதானே அது? என் மீது குற்றப் பத்திரிகையாவது தாக்கல் செய்ய முடிந்ததா?
இதே மேம்பாலங்களை காட்டி சென்னை மாநகர மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் மீதும் பொய் வழக்கு சுமத்தி கைது செய்யவில்லையா? நான் கைது செய்யப்பட்ட அன்றே மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டார்கள். மதுரை மாநகரில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க. அழகிரி போன்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் பழி வாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் அல்லவா?
ராணி மேரி கல்லூரி மாணவிகள் அவர்களுடைய கல்லூரியை இடித்து விட்டு, தலைமைச் செயலகம் கட்டப் போவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களை சமாதானப்படுத்த சென்ற மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினரே கல்லூரிக்குள் அனுமதித்து அவர்களும் மாணவிகளிடம் ஆதரவு தெரிவித்து திரும்பிய பிறகு, நள்ளிரவில் காவல்துறையினரை இல்லங்களுக்கு அனுப்பி அவர்களை கைது செய்து, அவர்கள் கல்லூரி கேட்டை உடைத்து உள்ளே சென்றதாக வழக்கு போட்டதோடு சிறையிலும் அடைத்தார்கள்.
டான்சி ஊழலில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அனுமதியளித்தார் என்பதற்காக கவர்னருக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஜெயலலிதா வழக்கு தொடுத்ததோடு, சென்னா ரெட்டியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார்.
ஜெயலலிதா பதவியேற்ற மறுநாளே திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீது ஜான் பாண்டியனை தாக்கியதாக கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். ஆனால் உண்மையில் தாக்கப்பட்டவர் பரிதிதான். திமுக பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியின் தம்பி, திருப் போரூர் பரசுராமன், புரசை ரங்கநாதன், திருவில்லிபுத்து�ர் தாமரைக்கனி, நீலங்கரை வி. எட்டியப்பன், ரவி, வெங்கட்ராமன், எஸ்.கே. ரவி ஆகியோர் மீது அ.தி.மு.க .வினர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பொய் வழக்கு தொடர்ந்து அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவின் பழிவாங்கும் நாடகம் என்ற தலைப்புடனும், போயஸ் தோட்டத்தை விட தமிழ்நாடு பெரியது என்பதை எப்போது ஜெயா உணரப் போகிறார்? என்ற தலைப்புடனும் பத்திரிகைகள் தலையங்கம் எழுதின.
ஸீ100 கோடி செலவில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுதாகரன் திடீரென்று கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டார்; அவருடைய தந்தை விவேகானந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுதாகரன் கைதாகி செல்லும்போது, தன்னை திட்டம் போட்டு சதி செய்து உள்ளே தள்ளுகிறார்கள் என்று கூறினார்.
இவ்வாறு எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு கொடுமைப்படுத்துவது என்பது ஜெயலலிதாவிடம் ஆழமாக ஊன்றி விட்ட பழக்கமாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போதும் நில அபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தை காட்டி அதிலும் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிலே கூட இந்த ஐந்தாண்டுகளில் அவருடைய கட்சிக்காரர்கள் செய்த தவறுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சியினரை பழிவாங்கி குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்த வகையில்தான் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மதுரை தளபதி மற்றும் திமுக முன்னணியினர் மீது பொய் வழக்குகளை போட்டு விசாரணை என்ற பெயரால் இழுத்தடிக்கிறார்கள்.
திமுகவை பழிவாங்கத் தவறான ஆயுதத்தை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். அது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம். பொய் வழக்குகள் புனைவதில் அவர் கைதேர்ந்தவர். பொய் வழக்குகளில் ஒருவகை சுகம் காண்பவர் என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.