ஏழை மக்களுக்கு நல திட்டங்கள் தொடர மீண்டும் திமுக ஆட்சி வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக் கூட்டம் 05.04.2011 அன்று நடந்தது. கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணி மாநிலங்களின் வரிசையில் உள்ளது. தமிழகத்தில் ஜவுளி, சர்க்கரை, ஆட்டோமொபைல், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்கள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் தமிழகம் மிகச் சிறந்து விளங்குகிறது. மக்களுக்கு நலத்திட்டங்களை தருவதில் முன்னுதாரணமாக தமிழக அரசு திகழ்கிறது. மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம், கர்ப்பிணிகளுக்கு உதவித் திட்டம், அங்கன்வாடி திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தந்து இந்தியாவிலேயே ஒரு உதாரண மாநிலமாக தமிழகத்தை மாற்றியவர் முதல்வர் கருணாநிதி.
தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இந்த மாநிலம் செய்யும் உதவிகளையும் திட்டங்களையும் மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. எல்லா சாதனைகளையும் சாத்தியமாக்க முடியும் என்ற வகையில் தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் இந்த சாதனைகளுக்கு மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங்கின் ஒத்துழைப்பு முக்கியமானதாகும். கடந்த 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றபோது மாநிலத்தின் ஆண்டுத் திட்ட மதிப்பு ஸி9,675கோடியாக இருந்தது. ஆனால், அந்த திட்ட மதிப்பு 2010&11ல் ஸி17,500கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மார்ச் மாதத்துடன் திமுக அரசு ஐந்து ஆண்டுகளை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. முதல்வர் சொன்ன வாக்குறுதிகளை செயல்படுத்தி உள்ளார். மீண்டும் உங்களிடையே வாக்குறுதிகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். அவர் சொல்லும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். அதை செயல்படுத்த அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவார். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக் களின் சம உரிமைகளுக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும், அவர் களின் பணிப் பாதுகாப்புக்காகவும், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காகவும் திமுக அரசும் மத்திய அரசும் செயல்பட்டு வருகின்றன.
எனவேதான் முதல்வர் கருணாநிதியுடன் நாங்களும் இணைந்து செயல்படுகிறோம். சமீப காலமாக அண்டை நாடுகளின் பிரச்னைகளை நாம் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்காக ஏராளமான நிதி உதவிகளை அந்த நாட்டுக்கு கொடுத்திருக்கிறோம். அந்த மக்களின் மேன்மைக்கான நடவடிக்கைகள் தொடரும்.
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சம உரிமை பெறும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் வகையில், அந்த நாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வரும் சம்பவம் இனிமேல் நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான இந்த கூட்டணி தொடர வேண்டும். தமிழக மக்களுக்காக அயராது பாடுபடும் திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும்.
அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள முதல்வர் கருணாநிதிக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார். 6வது முறையாக கருணாநிதிதான் முதல்வர் - கூட்டணி தலைவர்கள் பேச்சு :
சென்னை தீவுத்திடலில் 05.04.2011 அன்று நடந்த தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசியதாவது:
தங்கபாலு(தமிழக காங்கிரஸ் தலைவர்):
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இதே மேடையில் தான் சோனியா & முதல்வர் கருணாநிதியும் வாக்கு சேகரித்தார்கள். இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதுபோல இப்போது முதல்வர் கருணாநிதி 6வது முறையாக முதல்வராக அமர்வதற்காக சோனியா காந்தி வாக்கு சேகரிக்க வந்துள்ளார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் :
ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான் முற்போக்கு கூட்டணி. எதிரணியில் உள்ள கூட்டணி ஒரு பிற்போக்கு கூட்டணி. 2006&2011ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேச நேரம் இல்லை. நாம் வெற்றி பெறுவோம். தமிழக முதல்வராக மீண்டும் 6வது முறையாக தலைவர் கருணாநிதி வருவார்.
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):
இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக அரியணை ஏற பிரசாரம் செய்ய, சோனியா காந்தி இங்கு வந்துள்ளார். இதுதான் இங்கிருப்பவர்களின் விருப்பமும் நோக்கமும்.
பெஸ்ட் ராமசாமி(கொ.மு.க. தலைவர்):
அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இது சமூக நீதி கூட்டணி. தமிழகத்தில் திருப்பூர் தொழில் வளம் மிக்க பகுதி. இங்கு பனியன் தொழிற்சாலை, சாய தொழிற்சாலை மற்றும் பல உப தொழில்கள் உள்ளன. முதல்வர் கருணாநிதி, அடுத்து ஆட்சியில் அமர்ந்ததும் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு இந்த தொழிலில் உள்ள பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார். அவரை நம்புவோம். நமக்கு நல்வழி காட்டுவார்.
காதர் மொய்தீன்( இந்திய யூனியன் முஸ்லீம் லீக்):
முதல்வர் கருணாநிதி தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி தந்துள்ளார். எனவே இப்போது அறிவித்துள்ள திட்டங்களையும் அவர் மீண்டும் முதல்வராக அமர்ந்து நிறைவேற்றி தருவார்.
வேட்பாளர்கள் அறிமுகம்:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னைத் தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களின் ஒவ்வொரு பெயர்களையும் குறிப்பிட்டு மேடைக்கு வரும்படி, தங்கபாலு அழைத்தார். ஒவ்வொரு வேட்பாளர்களும் மேடைக்கு வந்து, சோனியாகாந்தியிடம் வாழ்த்துப் பெற்றனர். பின்னர், வேட்பாளர்கள் அனைவரையும் சோனியாகாந்தி வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
தலைவர்கள் கட்அவுட்:
காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, குலாம்நபி ஆசாத், முதல்வர் கருணாநிதி, தங்கபாலு, ராமதாஸ், திருமாவளவன், பெஸ்ட் ராமசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களின் கட்& அவுட்கள் ஒரே அளவில் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தது.
தமிழில் பேசிய சோனியா:
கூட்டத்தில் சோனியாகாந்தி தனது பேச்சின் தொடக்கத்தில் ‘சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என்றும், முடிவில் நன்றி, வணக்கம் என்றும் அழுத்தம் திருத்தமாக தமிழில் கூறினார். அவர் இவ்வாறு தமிழில் தெரிவித்த போது கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
வட்டமடித்த ஹெலிகாப்டர்
பொதுக்கூட்டத்தில், சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். அவர்களின் பேச்சை மக்கள் கவனித்து கொண்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தை ஒரு முறை வலம் வந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment