கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு !


மூட்டைப் பூச்சியை அழிக்க வீட்டைக் கொளுத்துவதா என்று சொல்வார்கள். தேர்தல் ஆணையம் காட்டிவரும கெடுபிடிகள், நமக்கு இந்தச் சொல்லாடலை நினைவுபடுத்துகின்றன.

அறிஞர் அண்ணா அவர்கள், தன் கட்சியின் சின்னமாக உதய சூரியனைக் கேட்டுப் பெற்றார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசின் சின்னம் காளைமாடுகள். அண்ணா சொல்வார், “எதிர்க்கட்சியினர் சுவர்களில் ஓரிரு காளைமாடுகளை வரைவதற்குள், என் தம்பிகள் ஓராயிரம் உதய சூரியன்களை உதிக்கச் செய்துவிடுவார்கள் ” என்று ! ஆனால் இன்றோ, சின்னங்களை வரைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடி ஏற்றக்கூடாது, சின்னங்களை வரையக் கூடாது, தலைவர்களின் சிலைகளை மூடிவிட வேண்டும் என்றெல்லாம் சொல்வது என்ன வகையான ஜனநாயகம் என்று நமக்குப் புரியவில்லை.

ஒரே கட்சியினராக இருந்தாலும், ஆளுக்கொரு முகமும், ஆளுக்கொரு பெயருமாகத் தானே இருக்கும் ! எனினும் அனைவரும் ஒரே கட்சியினர் என்று காட்டுவதற்குத்தான் சின்னம் என்ற ஒன்றே உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையே இன்று அடிபட்டுப் போய்விட்டது. எந்தக் கட்சியினரும் தங்கள் சின்னங்களை மக்கள் நெஞ்சில் பதிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய கட்சிகளின் சின்னங்களாவது, ஏற்கனவே நன்கு அறிமுகமானவை. புதிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சின்னங்களை அந்த வேட்பாளர்கள் எப்படி அறிமுகப்படுத்துவார்கள்? பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் என்றாலும், படிக்கத் தெரியாத மக்கள் என்ன செய்வார்கள்?

சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில் மேடையில் வழங்கப்படும் தேநீர் கூடக் கணக்கில் கொள்ளப்பட்டு, அதற்கென ஒரு தொகை வேட்பாளர் கணக்கில் ஏற்றப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் 3000 வீடியோ புகைப்படக்காரர்களைத் தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளது. ஏராளமான மகிழுந்துகளும், வாகனங்களும் தேர்தலுக்காக நடமாடுகின்றன. ஆக, வேட்பாளர்கள் செய்யும் செலவைக் கட்டுப்படுத்தி, ஆணையத்தின் செலவு அதிகமாகிவிடும் போல் தெரிகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது... தேர்தல் ஆணையம் எடுக்கும் ஒளிப்படங்கள், ஜெயா தொலைக்காட்சிக்கு எப்படிச் செல்கின்றன என்பதுதான் ! மேனாள் அமைச்சர் கே.பி.பி.சாமி இது தொடர்பாகத் தொடுத்திருக்கும் வழக்கு, பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாக்களிப்பதற்காகப் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், ‘ வாக்காளர்களே, பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் ’ என்று பேசுகின்றனர், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பணம் வாங்கத் தூண்டுவது மட்டும் குற்றமில்லையா? அது குறித்துத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன என்பதும் பெரிய கேள்விக்குரியாக உள்ளது.

இவற்றையயல்லாம் தேர்தல் ஆணையம் தன் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் என்று நம்புகின்றோம் !

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

No comments:

Post a Comment