கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 22, 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (4) - பேரா. சுப. வீ





நெடுமாறனின் அறிக்கைகள் - அன்றும் ,இன்றும்


ஜி. பார்த்தசாரதி, நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில்,கீழ்வரும் இன்னொரு செய்தியையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

"தெளிவாகப் பேச இயலாத நிலையிலும், விடுதலைப் புலிகள், இந்தியாவின் பொறுமைக்கான எல்லையைத் தாண்டி விட்டனர் என்று எம்.ஜி.ஆர். உறுதி செய்தார். தமிழ்நாட்டில் மீதமுள்ள புலிகள் உறுப்பினர்களை ஓடுக்குமாறும்தன் அரசுக்கு அவர் உத்தரவிட்டார்."

(" Despite impairment in his speech, MGR acknowledged that LTTE had crossed the threshold of India's forbearance. He instructed his Government to crack down on its remaining cadres in Tamilnadu")


மேற்காணும் செய்திகள் சில உண்மைகளை நமக்கு உறுதிப்படுத்துகின்றன.இந்திய அமைதிப் படை ஈழம் சென்ற பிறகு, எம்.ஜி.ஆர் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.அல்லது, முதலமைச்சராக இருக்கும் ஒருவர் அவ்வாறுதான் பேச முடியும் என்பதாகவும் இருக்கலாம்.ஆனால் இது குறித்துத் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படவில்லை. இதனால் எம்.ஜி.ஆர். புலிகளுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும் எவரும் கூறவில்லை. இதனைக் கலைஞர் முதலமைச்சராக இருந்து கூறியிருந்தால் , தமிழகத்தில் உள்ள நம் ஈழ ஆதரவுத் தலைவர்கள், எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.


எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்துவதற்காக இவற்றை இங்கு குறிப்பிடவில்லை.அவர் புலிகளுக்குச் செய்திருக்கும் உதவிகளை நாம் என்றும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். அதே வேளையில், நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் மறைக்கத் தேவையில்லை என்பதற்காகவும், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது சில கட்டுப்பாடுகளுக்கும்,வரையறைகளுக்கும் உட்பட்டுத்தான் யார் ஒருவரும் பேச முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவுமே இவற்றை இங்கு எடுத்துக்காட்ட நேர்ந்தது.

இன்னொன்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஈழ ஆதரவு என்பது எல்லாக் காலங்களிலும் ஒரே நிலையில் இருந்ததில்லை. அதனை நாம் கீழ்வருமாறு பிரித்துப் பார்க்கலாம்.
1956-82 - முதல் காலகட்டம்
1983-87 - இரண்டாம் காலகட்டம்
1987-91 - மூன்றாம் காலகட்டம்
1991-95 - நான்காம் காலகட்டம்
1996-01 - ஐந்தாம் காலகட்டம்
2001-06 - ஆறாம் காலகட்டம்
2006-09 - ஏழாம் காலகட்டம்
2009-இன்று வரை - எட்டாம் காலகட்ட்டம்

முதல் காலகட்டத்தில் ஈழப் போராட்டத்திற்குத்தமிழ்நாட்டில் பரவலான ஆதரவு இருந்தது. இரண்டாம் காலகட்டத்தில்மிகப் பெரிய ஆதரவு அலை வீசியது. அக் கட்டத்தில், மத்திய ரசு, மாநில அரசு, எதிர்க்கட்சிகள்,ஊடகங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஓர் அணியில் நின்றனர்.

1987 ஜூலையில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, சிறு மாற்றங்கள் இங்கு ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். நிலையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மேலே கண்டோம். பொதுமக்கள், ஊடகங்கள் ஆதரவும் சற்று அடங்கியே இருந்தது. எனினும், ஈழ ஆதரவும், புலிகள் ஆதரவாளர்களும்இன்னொரு புறத்தில் கூடியதும் இக்கால கட்டத்தில்தான்.

ஆனால்1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, நிலைமை பெரும் அளவிற்கு மாற்றம் பெற்றது. அப்போது மத்தியில் நரசிம்ம ராவும், தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தனர். இருவரும் ஈழ ஆதரவை ஒடுக்குவதில் பெரும் பங்கு வகித்தனர். தடா சட்டம் படாத பாடு படுத்தியது. அய்யா நெடுமாறன், பாவலரேறு பெருஞ்சித்திரனார்உள்ளிட்ட பலர் அச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டனர். ஈழம், புலி என்று பேசினாலே சிறைதான். அப்போது சிறை செல்லாத ஈழ ஆதரவாளர்களே இல்லை என்று சொல்லலாம். புலிகளை ஆதரித்துப் பொதுக்கூட்டங்களில் பேசினேன் என்னும் ஒரே காரணத்திற்காக, அந்த ஐந்து ஆண்டுகளில் நானும் நான்கு முறை சிறைப் படுத்தப்பட்டேன்.

அடுத்தடுத்த கட்டங்களைப் பார்ப்பதற்கு முன், முதலிரு கால கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இப்போது வெளி வந்து கொண்டிருக்கும் சில முக்கியமான விமர்சனங்கள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சில வாரங்களுக்கு முந்திய ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் திரு நெடுமாறன் பல செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார். போராளிகளுக்குள் சகோதரச் சண்டையைத் தொடக்கி வைத்தவரே கருணாநிதிதான் என்பது அவரது குற்றச்சாட்டு. அவருடைய பேட்டியிலிருந்து சில பகுதிகளை முதலில் காண்போம்:


"1984 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளியானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்."

மேற்காணும் கூற்று குறித்து முதலில் சில செய்திகளைப் பார்த்துவிடலாம். 1984 ஆம் ஆண்டே, ஈரோஸ், ஈ.பி .ஆர்.எல்.எப்., டெலோ ஆகிய மூன்று அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டணியை அமைத்தன. 1985 ஏப்ரல் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதில் இணைய, ஈ.என்.எல்.எப் (ENLF - Eelam National Liberation Front) என்னும் புதிய கூட்டணி உருவாயிற்று. நான்கு அணிகளின் தலைவர்களும் கை கோத்து நிற்கும் புகைப்படம் எல்லா நாளேடுகளிலும் வெளியாயிற்று. அதனை வரவேற்று, 'புதிய திருப்பம்' என்று தலைப்பிட்டு முரசொலி முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
 

இன்று கலைஞரைத் தாக்கிப் பேட்டி அளித்துள்ள நெடுமாறன், நான்கு அணிகளும் ஒருங்கிணைந்துகூட்டணி உருவான நேரத்தில் தி.மு..வுடன் நெருக்கமாக இருந்தார் என்பதோடு மட்டுமின்றித் தி.மு..வின் செயல்பாடுகளை ஆதரித்தும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசைக் கண்டித்தும் பேட்டி அளித்திருந்தார் என்பதே உண்மை. அவர் அளித்த பத்திரிகைப் பேட்டிகளைக் கீழே காணலாம்:


                அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் சகோதரச் சண்டையைத் தொடக்கி வைத்தார் என்றும் முற்றிலும் நேர் மாறாக இன்று பேட்டி தருகின்றார். சகோதரச் சண்டையைத் தொடக்கி வைத்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?

.தி.மு.. அரசு துரோகம் இழைக்கிறது என்னும் தலைப்பின் கீழ் உள்ள பேட்டியின் கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.. போராட்டம் நடத்த உள்ளதே?

நெடுமாறன் விடை : அதை வரவேற்கிறேன்.அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.

எந்த 1984-85 ஆம் ஆண்டுகளில், போராளிகளிடம் தி.மு.. சகோதரச் சண்டையை ஆரம்பித்தது என்று இப்போது நெடுமாறன் பேட்டி அளிக்கிறாரோ, அதே ஆண்டில் அவர் கொடுத்த பேட்டியில், தி.மு.. தன் பணியைச் செய்வதாகவும்,அதனைத் தான் வரவேற்பதாகவும்கூறுகின்றார். அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு..வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார்.எல்லாவற்றையும் தாண்டித் தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.

இன்று தி.மு..வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத்துரோகம் இழைப்பதாகவும், தி.மு.. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.. கூட்டணியில் இருந்தார்.1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு..வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.

அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. ஆனால் பழனித் தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன என்பது தெளிவாகின்றது.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்ட குட்டி மணியைப் பிடித்து இலங்கைக்கு அனுப்பியது கருணாநிதிதான் என்றும் அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார். அது எவ்வளவு தூரம் உண்மைக்கு மாறானது என்பதையும் ஆதாரங்களுடன் தொடர்ந்து பார்க்கலாம்.