கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கும் அறிவாலயமும் அவமதிக்கும் அ.தி.மு.க.வும்


தமிழகத் தேர்தல் வரலாற்றில் பல கட்சிகளோடு கூட்டணி வைத்துத் தேர்தலை முதலில் சந்தித்தவர் அறிஞர் அண்ணாதான் என்று பலரும் தவறாக ஒரு செய்தியைக் கூறிக்கொண்டுள்ளனர். 1952ஆம் ஆண்டு முதன் முதலில் கூட்டணி அரசை அமைத்தவர் ராஜாஜிதான். எனினும் 67க்குப் பிறகு, தேர்தலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இன்றுவரை நிலைத்துவிட்டது. நம்மைப் பொறுத்தளவில், எல்லாக் கட்சிகளும் தனித்தனியாக நின்று தேர்தலைச் சந்திப்பதே சரி என்று கருதுகிறோம். அப்போதுதான் ஒவ்வொரு கட்சியின் உண்மையான வலிமை என்னவென்பதை மக்கள் அறிய முடியும். ஏன், அப்போதுதான் அவர்களேகூட தங்கள் செல்வாக்கை அறிந்துகொள்ள முடியும். அந்த நாள் இப்போதைக்குக் கண்ணில் படவில்லை. எனவே இப்போது இருக்கிற கூட்டணிகள் எவ்வாறு இருக்கின்றன, பெரிய கட்சிகள் பிற கட்சிகளை எப்படி நடத்துகின்றன என்று மட்டும் பார்க்கலாம்.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் அன்றிலிருந்து இன்றுவரைக் கூட்டணிக் கட்சிகளை மிகுந்த தோழமையோடு நடத்தி வருவதை நாடறியும். எதிர்க்கட்சிகளே கூட இதனை மறுக்க முடியாது. இன்றும் அந்தப் பண்பாடு தொடர்வதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அறிவாலய வாசலில் காத்துக் கிடந்ததாய் எந்தப் பத்திரிகையும் இதுவரை எழுதியதில்லை. பிரிந்து போன கட்சிகள் கூட அப்படி ஒரு குற்றச் சாட்டை ஒரு நாளும் வைத்ததில்லை. ஒரு சிறிய கட்சியின் தலைவரால் கூட, முதலமைச்சராக இருக்கும் வேளைகளிலும் கலைஞரை எளிதில் சந்தித்து விட முடியும். தொலைபேசியிலேயே அவரோடு பேச முடியும்.

ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன, எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பதெல்லாம் வேறு. ஆனால் மதிப்புக் குறைவாய் அவர்கள் என்றும் ஒதுக்கப்படுவ தில்லை.

இதற்கு நேர்மாறான காட்சிகளை போயஸ் தோட்டத்தில் நாம் பார்க்கிறோம். இன்னாரை மதிப்பது, இன்னாரை மதிப்பதில்லை என்கிற வேறுபாடெல்லாம் அங்கு கிடையாது. எவரையும் மதிப்பதில்லை என்பதுதான் அங்கு ஒரே விதி. அந்த விதி இந்தத் தேர்தலிலும் விதிவிலக்கில்லாமல் நிகழ்ந்து கொண்டிருப்பதை ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் தா.பாண்டியன், நடிகர் விஜயகாந்தை அ.தி.மு.க. அணிக்குள் வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் என்ன நடந்தது என்றால், விஜயகாந்த் கூட்டணிக்குள்ளே போய்விட்டார். பாவம், தா.பாண்டியன் பரிதாபமாய் வெளியில் நின்றார். அதற்குப் பிறகு வழக்கம் போல் 10 இடங்களை வாங்கிக் கொண்டு கூட்டணியில் இடம் பிடித்தார்.

18 இடங்களைக் கேட்ட எங்களுக்கு 11 இடங்கள்தான் தருவதாய் அ.தி.மு.க. சொல்கிறது. இது எங்கள் தன்மானத்திற்கு இழுக்கு என்று வீரமுழக்கமிட்ட சி.பி.எம். கட்சியினர், 12 இடங்கள் கிடைத்தவுடன், தன்மானப் பிரச்சினையைத் தவற விட்டுவிட்டனர். தன்மானம் என்னும் சொல்லே, போயஸ் தோட்டத்திற்குப் பிடிக்காத சொல் என்பதைப் போகப் போக அவர்கள் அறிந்துகொள்ளக் கூடும்.

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின் நிலைமையோ இன்னும் மோசம். இரண்டு இடங்களுக்கு ஒப்புதல் தெரிவித்துக் கையயழுத்துப் போட்டுவிட்டு, பிறகு 9 இடங்கள் வேண்டுமென்று ஓர் அறிக்கை விட்டார். தோட்டத்திலிருந்து என்ன மிரட்டல் வந்ததோ தெரியாது, அதன் பிறகு அது குறித்து அவர் பேசவே இல்லை. கடைசியில் அந்த இரண்டு தொகுதிகள் எவைஎவை என்பதையாவது சொல்லுங்கள் என்று அவர் கேட்டுப் பார்த்ததாகவும், அதையயல்லாம் எஸ்.எம்.எஸ்.சில் அனுப்புவதாக அவர்கள் பதில் சொல்லிவிட்ட தாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இப்போதே எஸ்.எம்.எஸ். என்றால், தேர்தல் முடிந்த பிறகு அவருக்கு ‘மிஸ்டு கால் ’ கொடுப்பார்களோ என்னவோ!

பிப்ரவரி 15ஆம் தேதி நடிகர் கார்த்திக்கின் வெளிப்படையான பேட்டி வெளியாகி யுள்ளது.

‘55 நாட்களுக்கு முன்னால், அவர்களாகத்தான் எங்களை அழைத்து ஆதரவு கேட்டார்கள். பிறகு யாரும் எங்களோடு பேசவேயில்லை. எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கடைசிவரையில் எந்த அழைப்பும் வரவில்லை. படிப்படியாக அவமானங்கள்தான் வந்தன. இப்போதே இப்படி என்றால், ஆட்சிக்கெல்லாம் வந்துவிட்டால் எப்படி நடந்து கொள்ளுவார்கள், நம்மை எப்படி நடத்து வார்கள் என்பதை எங்கள் கட்சியினர் அனைவரும் உணர்ந்துவிட்டோம் ’ என்று தொலைக் காட்சிகளில் தொடர்ந்து அவர் பலவாறாகப் புலம்பினார்.

அவரால் வெளிப்படையாகவாவது புலம்ப முடிகிறது. வைகோவால் அதுவும் முடியவில்லை என்பதுதான் பெரிய சோகம். கடந்த ஐந்தாண்டுகளாகத் தன் தொண்டைத் தண்ணீர் வற்ற அ.தி.மு.க.வுக்காக எவ்வளவு பேசியிருப்பார் அவர். சென்ற தேர்தலில் 35 தொகுதிகளைக் கொடுத்த அ.தி.மு.க., இப்போது 8 தொகுதிகள் போதுமா என்று அவரைப் பார்த்துக் கேட்பது எவ்வளவு கொடுமையானது. அவமானப்ப டுத்துவதற் கென்றே அவரை இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதா தன் பக்கத்தில் வைத்திருந்தாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. கணக்கிலடங்கா கூட்டங்களில் கண்ணியம் சிறிதும் இல்லாமல் நாடெங்கும் பேசித்திரிந்த நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இனிமேல் மேடைகளில் என்ன பேசுவார்கள், எப்படிப் புலம்புவார்கள் என்பதை யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் அவர்களுக்கு ஒரு பரிசு வழங்கலாம்.

இன்று வைகோவிற்கும், கார்திக்கிற்கும் நேர்ந்துள்ள அவமானம், நாளை விஜயகாந்திற்கு நேராமலா போய்விடும் ! சரி விடுங்கள், போயஸ் தோட்டத்திற்குப் போகிறவர்கள் மான, அவமானம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டா இருக்க முடியும்.

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

No comments:

Post a Comment