ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்று பலியான மீனவர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் சுப.தங்கவேலன் 19.04.2011 அன்று வழங்கினார்.
கடந்த 2ம்தேதி, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த விக்டஸ், அந்தோணி, ஜான்பால், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நான்கு பேரும் கரை திரும்பவில்லை.
அவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், ஏப்.8ல் விக்டஸ் உடல் யாழ்ப்பாணத்திலும், ஏப்.12ல் அந்தோணி உடல் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையிலும், ஏப்.14ல் ஜான்பால் உடல் தொண்டி அருகே பாசிபட்டினத்திலும், ஏப்.16ல் மாரிமுத்து உடல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் அருகே புதுக்குடியிருப்பு பகுதியிலும் கரை ஒதுங்கின.
பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த 12ம்தேதி உத்தரவிட்டார்.
அரசு அறிவித்த நிவாரண நிதியை, பலியான மீனவர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் சுப.தங்கவேலன் 19.04.2011 அன்று மாலை நேரில் வழங்கினார். தங்கச்சிமடத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மீனவர் விக்டஸ் மனைவி வெனிஸ்டா, அந்தோணி மனைவி சாலியோ, ஜான்பால் மனைவி ஜெனிதா, மாரிமுத்து மனைவி லெட்சுமி ஆகியோர் அரசின் நிவாரண நிதியாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆறு ஆண்டு வரை மாதம் ரூ.3,500 வீதம் வட்டி கிடைக்கும் வகையில் இத்தொகை டெபாசிட் செய்யப்படவுள்ளது.
பின்னர் சுப.தங்கவேலன் கூறுகையில், ‘தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் ஆறாவது முறையாக பதவி ஏற்றவுடன், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பார்‘ என்றார்.
ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் மார்க்கண்டேயன், பனைமர தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர் சிவலிங்கம், திமுக மாவட்ட துணை செயலாளர் அகமது தம்பி, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சங்குமுத்துராமலிங்கம் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment