கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

வி.சி.க்கு 10 சீட் : கலைஞர் -திருமாவளவன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


சட்டமன்றதேர்தலுக்காக கூட்டணி கட்சிகள் தொகுதிகள் உடன்பாடு செய்துகொள்வதில் தீவிரமாக உள்ளன.

திமுக தலைவர் கருணாநிதியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 28.02.2011 அன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன.


தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களிலும் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற திருமாவளன் முடிவெடுத்துள்ளார்.

ஒப்பந்தம் முடிந்த பின்னர், வெளியே வந்த திருமாவளவன் கூறியதாவது: எங்கள் கட்சிக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்று எழுத்து மூலமாக கேட்டிருந்தோம். பிறகு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பேச்சுவார்த்தை முடிவில் 10 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு களப்பணி ஆற்றுவோம் என்று திருமாவளவன் உறுதி கூறினார்.
உங்களுக்கு திருப்தியா?
எங்களுக்கு திருப்திதான். கூட்டணி கட்சிக்கு நெருக்கடி தர நாங்கள் விரும்பவில்லை.
எந்தெந்த தொகுதி என்று அடையாளம் காணப்பட்டு விட்டதா?
இல்லை. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
எங்களுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


நடுக்கண்டம் எனக்கு என்று ஏன் அடம்பிடிக்கவில்லை ? - திருமாவளவன் :

திமுக தலைவர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10ம் என்று உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தற்போதுள்ள சூழ்நிலையில் நடைமுறை சாத்தியக்கூறுகளை கணக்கில் கொண்டு கூட்டணியில் உள்ள பிற கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்கிற ஒப்புரவுப் பாங்கோடு கூட்டணியின் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிற தோழமையுணர்வோடு,

எமது எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு அல்லது விட்டுக்கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.


‘நடுக்கண்டம் எனக்கு’என்று அடம்பிக்கும் போக்கில்லாமல் மற்றவரக்ளுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துழைக்க வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டுள்ளோம்’’என்று தெரிவித்துள்ளார்.


விவசாயிகளுக்கு இலவச மின்சார மோட்டார் வழங்கும் திட்டம்



தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

முதலமைச்சர் கருணாநிதி சுதந்திரதின நிகழ்ச்சியில், மின்சார சிக்கனத்தை மேற்கொள்ளும் பொருட்டு பழைய பம்புசெட்டுகளுக்கு பதிலாக திறன்மிக்க புதிய பம்புசெட்டுகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் பொருத்தித் தரப்படும் என்று அறிவித்தார்.


இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசால் 04.02.2011 அன்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது சுமார் 19.08 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.

தமிழக அரசு திட்டத்தின் கீழ் விவசாய பொறியியல் துறையின் மூலம் மார்ச் 2010 வரை உயர் சக்தித் திறன்கொண்ட பம்புசெட்டுகள் 50 சதவீதம் மானியத்துடன் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2000-01-ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுளில் சுமார் 3,44,199 விவசாய இணைப்புகளைக் கொடுத்துள்ளது.

புதிய பம்பு செட்டுகள் 10 ஆண்டுகளுக்கு உழைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த 10 ஆண்டுகளில் விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்ட பம்புசெட்டுகளும் ஏற்கனவே வேளாண்மை பொறியியல் துறையால் மாற்றப்பட்ட பம்புசெட்டுகளும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது. எனவே ஒட்டு மொத்தமாக சுமார் 14.67 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய உயர் சக்தித் திறன் கொண்ட பம்புசெட்டுகள் மாற்றப்பட வேண்டி உள்ளது.

இதனால் 20 சதவீத மின்சக்தியை சேமிக்க முடியும். உயர் சக்தித்திறன் கொண்ட பம்புசெட்டுகளை மாற்றி மற்றும் நிறுவுவதற்கு சராசரியாக ஒரு பம்பு செட்டுக்கு ரூ. 22 ஆயிரம் ஆகும். முதல் கட்டமாக இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மின் தொடர்களில் உள்ள சுமார் 10,000 பம்பு செட்டுகள் மாற்றப்பட உள்ளது. இதற்கான மொத்த முதலீட்டுத் தொகை சுமார் ரூ. 22 கோடி ஆகும்
.

இந்த திட்டத்தினை செயல் படுத்துவதின் தொடக்கமாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று 10 விவசாயிகளுக்கு புதிய திறன்மிக்க பம்புசெட்டுகளை வழங்கினார். தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தினைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் முன்னிலையில் இது வழங்கப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.


யார் எப்படி சதிவலை பின்னினாலும் தூள் தூளாக்குவோம்;ராமதாஸ்


பாமக நிறுவன ராமதாஸ் பேரன் சுகந்தன்-டீனா திருமண விழாவில் 28.02.2011 அன்று முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டார்.

இவ்விழாவில் பேசிய ராமதாஸ்,

’’நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை நான் கடைப்பிடிக்கிறேன். அவர் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் எந்த காரியத்தை தொடங்கினாலும் என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும்.

நான் தொடங்கிய தொலைக் காட்சி, பத்திரிகை, கல்வி அறக் கட்டளை, பண்ணிசை மன்றம் அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர்தான் தொடங்கி வைத்தார். சில நேரங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் இலக்கணத்துக்கு ஏற்ப சற்றும் பிசகாமல் நடந்துள்ளேன்.

ஆனால் எங்கள் நட்பும் பாசமும் இன்னும் இருக்கிறது. என்றும் இருக்கும். நான் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரிடம் மகிழ்ச்சியோடு சென்றேன்.

மகிழ்ச்யோடு திரும்பி வந்தேன். 31 தொகுதிகளை அள்ளி வந்துவிட்டேன் என்று சிலருக்கு வருத்தம். ஆனால் பாட்டாளி சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி பாட்டாளி மக்களும், உழைக்கும் கரங்களும் இல்லாமல் ஆட்சி அமைவதில்லை. 6-வது முறையாக கலைஞரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று எல்லோரும் துடிக்கிறார்கள்.

யார் எப்படி சதிவலை பின்னினாலும் அதை தூள் தூளாக்கி செய்து முடிக்க பாட்டாளி கரங்கள் இணைந்திருக்கிறது. நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற போது 5 ஆண்டுகாலம் நிபந்தனையின்றி உறுதுணையாக பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று சொன்னோம். நாங்களும் ஒரு அரசியல் கட்சி என்பதால் பொறுப்புள்ள தோழமை கட்சியாக இருந்தாலும் சிலவற்றை எடுத்துரைக்க தவற மாட்டோம். அதை நீங்கள் அறிவீர்கள்.

நான் எனது கட்சிகாரர்களிடம், “கட்சி வளர்ச்சிக்கு ஒரு மணி நேரம் செலவிடுங்கள். குடும்பத்தோடு மகிழ்வுடன் இருங்கள்என்று அடிக்கடி சொல்வேன். அந்த வகையில் கலைஞர் குடும்ப பாசத்தோடு, பேரன்- பேத்திகளோடு குதூகலித்து வாழ்வாங்கு வாழ்த்து கொண்டிருக்கிறார். சில பேருக்கு அது பொறாமையாக இருக்கிறது. அதற்கு என்ன செய்ய முடியும். யாரும் எதுவும் செய்ய முடியாது.

கொள்ளுப் பேரன் திருமணத்தையும் நான் நடத்த வேண்டும் என்று கலைஞர் குறிப்பிட்டார். ஆனால் நான் இருக்கிறேனோ இல்லையோ 100 ஆண்டுகளையும் கடந்து கலைஞர் வாழ்ந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழ்நாட்டில் பசி-பட்டினி இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது வேளாண்மை முதன்மையாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்து விட்டால் இட ஒதுக்கீடு தேவை இல்லை அதை நோக்கி நாம் சொல்ல வேண்டும்’’என்று பேசினார்.

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் : ராமதாஸ்

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்,

’’திமுக கூட்டணிக்கு தாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், தங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதில் பங்கு கேட்கமாட்டோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

தாங்கள் கூட்டணியில் இருந்தபோதும், ஆட்சியாளர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.


சுதந்திரமாக முடிவெடுக்கட்டும் திமுக தலைமை: கி.வீரமணி வேண்டுகோள்


சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக தோழமைக் கட்சிகள் நிபந்தனைகளை ஏற்படுத்தினால் அதற்கு இணங்காமல் திமுக சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலமைச்சர் கலைஞர் 'மானமிகு சுயமரியாதைக்காரர்'. இதை எப்போதும் எங்கும் கூறத் தயங்காத பெருந்தகையாவார். அய்யாவின் துணிவும், அண்ணாவின் கனிவும், அவரது ஆற்றல்மிகு ஏழை, எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோரை உயர்த்தும் ஓயாத சிந்தனையும் செயலாக்கமும் அவரது தனித்தன்மைகள்.

அவரது தலைமையில் ஐந்தாவது முறை நடைபெறும் ஆட்சி, தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சமானிய மக்கள் சுவைத்து அன்றாடம் பயன்படும் ஒப்பந்த ஆட்சியாக கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கருவறை துவங்கி கல்லறை வரை, கலைஞர் ஆட்சியால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பயன்பெறாத மக்களே இல்லை என்பதை மார்தட்டி எங்கும் சொல்லும் மாண்புகள் மலிந்த மகத்தான ஆட்சி.

கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக இராமாயணக் கதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்துவிட்டதுபோல் கற்பனைக் குதிரைகள் மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு திமுக இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

திமுக தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல. அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்திவந்த ஓர் ஜனநாயக பீனிக்ஸ் பறவை.

தமிழ் மக்கள் அதன் பக்கம் உள்ளனர். அதன் தன்னிகரற்ற சாதனைகள் அதன் பலம். அக்கட்சி காட்டும் பண்பாடு, மனிதநேயம், கண்ணியம் அதற்கு பலவீனமாகி விடக்கூடாது.

கட்டுப்பாட்டோடு பட்டி தொட்டியெங்கும் படர்ந்துள்ள பலம் வாய்ந்த இயக்கம் இது.

எனவே குட்டக் குட்ட குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இனவுணர்வாளர்களுக்கு, தன்மானத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன்மூலம் நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

நட்பு பேசிக் கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல - கூட்டணி அரசியலில். நான் உமி கொண்டு வருவேன். நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதி தின்போ:மு என்ற போக்கு நியாயமாகுமா?

1980இல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப்போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்.


அதற்குமுன் 1971இல் செய்யப்பட்ட கோயபெல்ஸ் பிரச்சாத்தின் கொடுமையையே சந்தித்து, வெற்றி வாகை சூடிய இயக்கம் திமுக.

எனவே திமுக சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும். பல பழிகளை கடந்த காலத்தில் அது சுமந்த கறை நீங்கும். வெற்றிச் சூரியன் விரிகதிர் வெளிச்சத்துடன் கிளம்பும் என்பதே தாய்க் கழகத்தின் கணிப்பு.

உலகத் தமிழர்கள் - உண்மைத் தமிழர்களின் உணர்வும் அதுதான்.

திமுகவின் தீரமிக்க தலைமைக்கு எமது வேண்டுகோள் இதுவே. தம்பி உடையான் படைக்கஞ்சான்.


இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


பிணக்குகள் வரும் போகும், லட்சியத்துக்காக ஒன்று பட்டு நிற்போம்: ராமதாஸ் இல்ல விழாவில் கலைஞர்




முதல்வர் கருணாநிதி சென்னை மேயர் இராமநாதன் செட்டியார் மண்டபத்தில் 28.02.2011 அன்று நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாசின் பேரன் ப.சுகந்தன் - டீனா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி,

பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி அன்புமணி ராமதாஸ் அவர்களே, தம்பி ஸ்டாலின் இங்கே வாழ்த்தும்பொழுது தேர்தல் திருமணம் என்று குறிப்பிட்டார். இது மணமகனை மணமகள் வீட்டாரும், மணமகளை மணமகன் வீட்டாரும் தேர்வு செய்த பிறகு நடைபெறுகின்ற திருமணம். ஏற்கனவே இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம். எனவே ஒரு நல்ல கூட்டணி இரு குடும்பத்திற்கிடையே அமைந்து அந்தக் கூட்டணி இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய கூட்டணியாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு நான் அவர்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா பேரன், டாக்டர் சுகந்தன் ராணிப்பேட்டை குணசேகரன் அன்பு மகள் செல்வி டாக்டர் டீனா இவர்கள் இருவரும் இல்லறம் இணையும் விழா நடத்திக் கொள்ளும் இந்த நாளில், நாங்களும் சாட்சியாக இருந்தோம் என்று பெருமைப்படுகின்ற அளவிற்கு நாமெல்லாம் இங்கே வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய நண்பர் கோ.க. மணி பேசும்போது என்னைச் சிறப்பிக்கும் போது கலைஞர், எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க் கட்சித் துணைத் தலைவராக எதிர்க் கட்சி கொறடாவாக அண்ணா அமைச்ச ரவையிலே அமைச்சராக பிறகு முதல் அமைச்சராக என்று இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்த பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்.

இதென்ன, புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என்று யாராவது கேட்பீர்களேயானால், இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டுமணமக்களை நான் வாழ்த்துகிறேன். என்னுடைய அன்பை, உண்மையான நெஞ்சத்தை, உறவு முறையில் காட்ட வேண்டிய அந்தப் பாசத்தை மணமக்களுடைய குடும்பத்தாருக்கு குறிப்பாக அய்யா ராமதாஸ் அவர்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்.

குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக டாக்டர் ராமதாஸ் மணமகளாக இருந் தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ஆனாலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும்போது நாங்கள் ஒன்று பட்டு நிற்போம் என்பதற்கு நீங்கள் காணுகின்ற காட்சி தான் சாட்சி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

நம்முடைய நாட்டில் காலாகாலமாக நடைபெற்ற தமிழகத்தின் திருமணங்கள் எல்லாம் சங்கக் காலத்துத் தி
ருமணங்கள் எல்லாம் ஞாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் முந்தையும் எம்முறை கேளிர் நானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெய் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே நீ யாரோ, நான் யாரோ உன்னுடைய தந்தை யாரோ தாயார் யாரோ செம்புலப் பெய் நீர் போல சிகப்பு நிறத்திலே ஊற்றப்பட்ட தண்ணீர் அந்த வண்ணத்தோடு கலந்து ஒன்றாகிவிடுவதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் கலந்து விட்டன என்று சொல்லி மணவிழாவை முடித்துக் கொண்டார்கள்.

அந்தத் தமிழர்களுடைய திருமணம் இடைக்காலத்தில் தடை பட்டு விட்டன என்று நாம் எண்ணியதற்கு மாறாக பெரியார் அவர்களுடைய கொள்கைப் பற்றால், அதனை சட்டப் பூர்வமாக நிறைவேற்றியதோடு மாத்திரமல்ல இப்படி எங்களுடைய குடும்பங்களிலும் தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும், நடத்துவோம், சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடத்துவோம் என்கின்ற உறுதியோடு நம்முடைய டாக்டர் அய்யா அவர்கள் இங்கே நடத்திக் காட்டிய திருமணம், பழந்தமிழர் காலத்திலே பசும்புல் தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை, அது காலத்தால் அழிவதுமில்லை என்று வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக இங்கே இருந்ததை நான் கண்டேன். வியந்தேன், வாழ்த்துகிறேன். அய்யா அவர்களையும், அவருடைய குடும்பத்தாரையும், அவருடைய கட்சித் தோழர் களையும் நான் வாழ்த்துகிறேன்.

அந்தக் கட்சியிலே உள்ள அத்தனை உறுப்பினர்களையும் நான் வழக்கமாகச் சொல்வதைப் போல என்னுடைய உடன்பிறப்புகள் என்ற முறையில் அந்த உடன்பிறப்புக்களுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லி, நாம் அடையப் போகும் வெற்றிக்கு இது முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டக்கூடிய போற்றக் கூடிய விரும்பக் கூடிய விழாவாக அமையும், அதைப் போல இந்தக் குடும்ப விழா எல்லோராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக, வெற்றிக்கு அடையாள விழாவாக இந்த விழா அமைந்திருக்கின்றது என்று கூறி, மணமக்கள் பல்லாண்டுவாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி இன்று டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய பேரனுக்கான திருமணம், இனி கொள்ளுப்பேரனுக்கு நடைபெறுகின்ற திருமணவிழாவிலும் கலந்து கொள்கின்ற வாய்ப்பு நமக் கெல்லாம் கிடைக்கும் என்று சொல்வதற்குக்காரணம் அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன் என்று அப்படி நீடிப்பதற்கு அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஆட்சி என்பது அரசியல் சார்ந்தது மட்டுமல்ல :கனிமொழி


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் 13 நாட்கள் கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா 26.02.2011 அன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கவிஞர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திரையரங்கத்தை திறந்து வைத்தார். நாடக நடிகர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கும் இசைக்கருவிகளையும் அவர் வழங்கினார்.

விழாவில், அவர் பேசும்போது, ’’இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் என்ற நிலை முன்பு இருந்தது. ஒரு சாராருக்கு மட்டும்தான் அந்த விருது என்ற நிலையை மாற்றி, நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைக்க செய்தவர், முதலமைச்சர் கலைஞர்தான்.

ஒரு நாட்டில் ஆட்சி என்பது அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. கலைவடிவங்களும் சார்ந்ததுதான். எத்தனையோ ஆட்சிகளில் கிடைக்காத மாற்றம் சமீபத்தில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. நம் மொழி சார்ந்த அடையாளங்கள் போற்றக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில்தான் நவீன கலைஞர்கள், கவிஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். கொண்டாடப்படுகிறார்கள். கிராமிய கலைஞர்கள் போற்றப்படுகிறார்கள். இது, வேறு எந்த ஆட்சியிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது’’ என்று தெரிவித்தார்.


6-வது முறையல்ல, 7-வது முறையும் கலைஞர்தான் முதலமைச்சர்; மு.க.அழகிரி பேச்சு




மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டிட திறப்பு விழா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய நகராட்சிகள், திருநகர், பரவை, விளாங்குடி, வெள்ளாலப்பட்டி, பால மேடு, அலங்காநல்லூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரக குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கக கட்டிட வளாகத்தில் 27.02.2011 அன்று காலை நடந்தது.

விழாவில் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைத்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


அவர், ‘’இந்த இனிய விழாவில் கலந்து கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த விழாவிற்கு வருவதற்கு முன்பாக மதுரை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒரு வருடத்திற்கு கிடைக்கக் கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் ரூ.1 1/2 கோடி அளவிற்கு மதுரை மாநகராட்சிக்கு தந்து திடீர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இங்கு வந்துள்ளேன்.


அந்த நிகழ்ச்சி என்னவென்றால் மாநகராட்சி பகுதிகளில் 15 இடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களில் உப்பு தண்ணீருக்கு பதிலாக நல்ல குடிநீர் வரும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.


இங்கே நடைபெறும் விழாவில் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடத்தப்படும் விழா. விரைவில் தேர்தல் வரவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரியும். எனவே தான் அனைத்து விழாக்களையும் ஒன்றாக வைக்கும்படி மாவட்ட கலெக்டரிடமும், துணைவேந்தரிடமும் கேட்டு கொண்டேன். அதற்கேற்றாற்போல இன்று அனைத்து விழாவும் ஒரே விழாவாக சீரும் சிறப்புமாக நடந்துள்ளது.

இங்கே பேசிய அனைவரும் என்னை புகழ்ந்தார்கள். மத்திய மந்திரி நெப்போலியன் பேசுகையில், அவருடைய தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்திருக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.


உங்கள் (நெப்போலியன்) தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்திருந்தால் நீங்கள் ஒரு இணை அமைச்சராக ஆகியிருக்க முடியாது.

அதனை மறந்து விட்டு அவர் பேசிவிட்டார். மத்திய மந்திரி நெப்போலியன் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அவர் சினிமாத்துறையில் இருப்பதால் சாதனைகளை மனப்பாடமாக வைத்து பேசி இருக்கிறார்.

தென் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு நாங்கள் நிச்சயம் அவரை பயன்படுத்தி கொள்வோம். விழாவில் பேசிய உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன், அரசின் அடுக்கடுக்கான சாதனைகளை குறிப்பிட்டார். என்னையும், என்னை தேர்ந்தெடுத்த மதுரை மக்களையும் புகழ்ந்து பேசினார்.


நாங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முன்பே அவர் அந்த வேலையை இன்று தொடங்கி விட்டார். மறைந்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மதுரைக்கு பல்வேறு திட்டங் களை கொண்டு வந்தார். குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மெஜூராகோட்ஸ் மேம்பால திட்டம் அவரால் கொண்டுவரப்பட்டது.

நான் சமீபத்தில் திறந்து வைத்த செல்லூர் மேம்பாலமும் அவரது முயற்சி தான். சபாநாயகராக இருந்து மதுரை நகர மக்களுக்கு அவர் செய்த பணிகளை விட அமைச்சராக இருந்து நிறைய செய்வார் என்ற எதிர் பார்ப்பில் அமைச்சரான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பதவி ஏற்ற ஒரே வாரத்தில் நம்மை பிரிந்துவிட்டார். அவரை நேரில் பார்க்க விரும்பினேன். அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் மதுரைக்கு வரும்போது தமிழகத்தில் எந்த அமைச்சருக்கும் இல்லாத வரவேற்பை கொடுக்க போகிறேன் என்று கூறினேன்.

அப்படியென்றால் நான் வரமாட்டேன் என்று அவர் மறுத்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் காலமாகிவிட்டார்.


அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக புதிய வளாகம் “பி.டி.ஆர்.பழனி வேல் ராஜன் வளாகம்” என அழைக்கப்படும். மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் முதலமைச்சரை சந்தித்து பேசினேன்.


எப்படியாவது மதுரையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழகம் அமைய வேண்டும் என்று கேட்டேன். நான் கண்டிப்பானவன் என்பவது அவருக்கு தெரியும். எனவே உடனடியாக ஒப்புதல் வழங்கி இங்கு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய விழாவில் 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த அரசு செய்து வரும் சாதனைகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள். இங்கே பேசிய பலரும் டாக்டர் கலைஞர் 6-வது முறையாக முதலமைச்சராக வருவார் என குறிப்பிட்டனர்.


நான் கூறுகிறேன் 6-வது முறை மட்டுமல்ல, 7-வது முறையும் கலைஞர் தான் முதலமைச்சராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பெயர் :
மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள காமராஜர் பல்கலைக்கழக நகர் வளாகத்திற்கு பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பெயர் சூட்டப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழாவுடன் இணைந்து நடந்த விழாவில் துணைவேந்தர் கற்பககுமாரவேல் முன்னிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, வளாகத்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் வளாகம் என பெயர் சூட்டினார். விழாவில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணி, மகன் தியாகராஜன், அமைச்சர் தமிழரசி, மாவட்ட திமுக செயலாளர்கள் தளபதி, மூர்த்தி எம்எல்ஏ, மேயர் தேன்மொழி, எம்எல்ஏக்கள் கவுஸ்பாட்சா, ராஜேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சுரேஷ்பாபு, துணை மேயர் மன்னன், மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார், உயர் கல்வி துறை செயலாளர் கணேசன், காமராஜர் பல் கலை கழக துணை வேந்தர் கற்பககுமாரவேல், மதுரை அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் முருகேசன், வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சுடலைக்கண்ணன், மாவட்ட கலெக்டர் காம ராஜ், மேயர் தேன்மொழி மற்றும் பலர் பங்கேற்றனர்.


கேட்கின்ற ஆதரவு கட்சியின் பெயரால் அல்ல : கலைஞர்


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றுக்கு பாரம்பரிய மரபணு பூங்காக்கள், நாகை கீழ வேளூர் வேளாண் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, தஞ்சை பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகம் திறப்பு விழா, பெருந்துறை வேளாண் விற்பனை முனையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை தலைமை செயலகத்தில் 27.02.2011 அன்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.

விழாவில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

’’இன்று காணொலிக் காட்சி வாயிலாக ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் -தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் - கீழ்வேளூர் வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா உட்பட - வேளாண் துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆகிய நிகழ்ச்சிகள் ஒருசேர நடத்தப்படுகின்ற இந்த இனிய வைபவத்தில் நானும் கலந்து கொண்டு, நீங்கள் அடைகின்ற மகிழ்ச்சியில் பங்கு பெறுவதில் மிகுந்த நல்லுணர்வும் - நம்பிக்கை கொண்ட மகிழ்ச்சியும் அடைகின்றேன்.


அண்மையில் நடைபெற்று நிறைவேறிய கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் - நான் குறிப்பிட்ட தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் - ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றிலே சில திட்டங்களைத் தொகுத்துரைத்து - அதனைத் தொடங்குகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.



இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள - குறிப்பாக வேளாண் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர் மற்றுமுள்ள அமைச்சர் பெருமக்களையெல்லாம் வரவேற்கிற அதே நேரத்தில், இந்தத் திட்டங்கள் செவ்வனே நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்களுடைய உழைப்பினை நல்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில் - பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்திலே படித்த ஐந்திணை - ஐவகை நிலம் - இவைகளெல்லாம் தமிழகத்திலே இருந்தனவா என்ற கேள்விக்கிடையே படிக்கப்பட்டவை - சொல்லப்பட்டவை - பரிமாறிக் கொள்ளப்பட்டவை - அவற்றையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றுகின்ற பொற் பணியில், ஒரு பொறுப்பில் நான் அமர்ந்திருப்பதும், அதை நிறைவேற்றி வைக்கின்ற அரும்பணியினைத் தொடங்கி வைப்பதும் நான் பெற்ற பேறு என்றே கருதுகின்றேன்.

இன்றையதினம் நடைபெறுகின்ற இந்த விழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் இங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பிரித்து நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அந்தந்தத் துறையினுடைய அதிகாரிகள் இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாக காணுகின்ற தமிழ்ப் பெருமக்கள், தமிழகத்திலே எத்துணை சிறப்பாக ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் எதிர்கால எழிலை, எதிர்கால ஏற்றத்தை, எழுச்சியை நினைத்தவாறு இந்த அரசு நடைபெறுகிறது என்பதை எண்ணிப் பார்த்து, தங்களுடைய ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேட்கின்ற ஆதரவு கட்சியின் பெயரால் அல்ல - ஆட்சியின் பெயரால் - தமிழ்ச் சமுதாயத்தின் பெயரால். திராவிட இனம் எப்படி ஒரு காலத்திலே வாழ்ந்தது -– எந்த வகையிலே நிலங்களைக் கூட வகுத்துக் கொண்டு அதை அந்த இலக்கண ரீதியாக வாழ்ந்து காட்டியது என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னால், எதிர்காலத்திலே மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, தங்களுடைய சந்ததியினருக்குப் பயன்படும் என்ற வகையிலே இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு உங்களையெல்லாம் காணொலி மூலம் சந்திப்பதிலே பெருமையும், பெரும் பேறும் பெற்றதாகக் கருதி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்’’என்று உரையாற்றினார்.

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை ஆணையர் சந்திரமோகன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகேச பூபதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண் முதன்மை செயலாளர் ராமமோகன்ராவ் வரவேற்றார். இயக்குநர் விவேகானந்தன் நன்றி கூறினார். தஞ்சை கலெக்டர் மா.சு.சண்முகம், சேலம் கலெக்டர் ஜெ.சந்திரகுமார் ஆகியோர் திட்ட விளக்க உரை ஆற்றினர்.
ஐந்து இடங்களில் மரபணு பூங்காக்கள் :
ஐக்கிய நாடுகள் சபையானது, 2010ம் ஆண்டை “உலக உயிரியல் பன்மை” ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஐந்தினை நிலங்களின் பெருமைகளை விளக்கும் வகையில் குறிஞ்சி (ஏற்காடு, சேலம்), முல்லை (சிறுமலை, திண்டுக்கல்), மருதம் (மருதாநல்லூர், தஞ்சாவூர்), நெய்தல் (திருக்கடையூர், நாகை), பாலை (அச்சடிப்பிரம்பும், ராமநாதபுரம்) ஆகிய இடங்களில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக முதல் கட்டமாக ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் அமைக்கும் பணிகள் ஐந்து மாதத்துக்குள் முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழ் மாநில தேசிய லீக் - நாடார் கூட்டமைப்பு திமுகவுக்கு ஆதரவு : துணை முதல்வருடன் சந்திப்பு


சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு நாடார் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து விவாதிக்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் திருப்பூர் அல்டாப், நாடார் ஒருங்கிணைப்பு இயக்க தலைவர் கராத்தே சரவணன், இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை 27.02.2011 அன்று காலை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

திமுக தேர்தல் குழுவினருடன் அருந்ததி மக்கள் கட்சி பேச்சுவார்த்தை


திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் அருந்ததி மக்கள் கட்சியினர் 27.02.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சட்டசபை தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, அமைப்புச் செயலாளர் துரைசாமி ஆகியோர் 27.02.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.

அங்கு திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வெளியில் வந்த வலசை ரவிச்சந்திரன், நிருபர்களிடம் கூறுகையில், “திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டோம். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் இந்த கோரிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்து தொகுதிகள் ஒதுக்க பரிசீலனை செய்வதாக தெரிவித்தனர்” என்றார்.

2ம் நாளாக திமுகவினர் விருப்ப மனு


அண்ணா அறிவாலயத்தில் நேற்று 2ம் நாளாக ஏராளமான திமுகவினர் விருப்ப மனுக்கள் தந்தனர்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து, அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. 26.02.2011 அன்று 2ம் நாளாக ஏராளமானவர்கள் மனுக்கள் தந்தனர்.
சைதாப்பேட்டையில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட மேயர் மா.சுப்பிரமணியன், வக்கீல் தாயகம் கவி ஆகியோர் மனு தந்தனர்.
திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிட, மறைந்த நாஞ்சில் மனோகரனிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.சின்னி கிருஷ்ணன் மனு கொடுத்தார்.
மேயர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் போட்டியிட வில்சன் மனு தந்தார். முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் கந்தர்வகோட்டையில் போட்டியிட மனு தந்தார். கடையநல்லூருக்கு சரவணன் மனு தந்தார்.

இன்னும் 6 வருடங்கள் நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும் : கலைஞர் பேச்சு



சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு திமுகவில் இணைந்தார். இதற்கான இணைப்பு விழா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர்.தியாகராயர் கல்லூரி மைதானத்தில் 26.02.2011 அன்று நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி,


‘’இன்றைய தினம் தியாகராயர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற மகத்தான இந்த விழாவை காணும்பொழுது என்னுடைய நெஞ்சில் பல அலைகள் - பல்லாண்டுகாலமாக இந்த வட்டாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடிகளை ஏற்றவும், கொள்கைகளை முழங்கச் செய்யவும் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டு, இந்த வட்டாரத்திலே வாழ்ந்த கழக நண்பர்களோடு கலந்து பேசி, உரையாடி, ஒத்துழைத்து திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்குப் பட்ட பாடுகளை எல்லாம் இந்த மேடையில் அமர்ந்தபோது நான் எண்ணிப்பார்க்கத் தலைப்பட்டேன்.

திராவிட இயக்க வரலாற்றில் வடசென்னைக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏனென்றால், அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, அறிவித்த இடம் வடசென்னைதான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக, பிறப்பிடமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பாசறை வீரர்கள் தங்கும் இடமாக, பயிற்சி பெற்ற இடமாக வழங்கிய இடம்தான் இந்தப் பகுதி.

இங்கே புகழ் பெற்ற தியாகராயருடைய பெயரால் அமைந்துள்ள கல்லூரியும், அந்தக் கல்லூரியினுடைய நிதித் தேவைக்காக, அதனை நிறைவு செய்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் பட்ட பாடும், அப்படிப்பட்ட பணியில் அடியேனுடைய பங்கும் உண்டு என்று எண்ணுகின்ற அகமகிழ்ச்சியும் இந்த நேரத்திலே என்னுடைய நினைவில் நிழலாடுகின்றன.


ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். தம்பி துரைமுருகன் இங்கே குறிப்பிட்டார் - திருவொற்றியூர் டி. சண்முகம் பிள்ளை அவர்களைப் பற்றி. துரைமுருகன் நீண்டகால கழகத் தோழராக அப்போது தன்னை ஒப்படைத்துக் கொள்ளாத காரணத்தாலோ என்னவோ, சண்முகம் பிள்ளை என்று சொல்லுவதற்குப் பதிலாக சண்முகம் முதலியார் என்று சொன்னார்.


டி. சண்முகம் என்பதுதான் அவருடைய பெயர். பிள்ளை என்பதற்கு மரியாதைக்காக அந்த மூன்றெழுத்துக்கள் அவருடைய பெயருக்குப் பின்னால் சேர்க்கப் பட்டிருந்தாலும்கூட, சுயமரியாதைக்காரன் சாதியை ஒட்டிக்கொள்ள மாட்டான் என்ற பெரியாருடைய வழியில் வந்தவன் நான், எனவே எனக்கு சாதிப் பெயர் தேவையில்லை - என்று சண்முகம் பிள்ளை வெறும் சண்முகமாக திருவொற்றியூரில் நகராட்சித் தலைவராக அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்டக் கழகத்தினுடைய தலைவராக விளங்கி அரும்பணிகள் பலவற்றை இந்த வட்டாரத்து மக்களுக்காக ஆற்றியவர் டி.சண்முகம் அவர்கள் ஆவார்கள்.

இந்த இடத்திற்கும், சண்முகத்திற்கும் என்ன தொடர்பு என்றால், இங்கே அண்ணா எழுதிய நாடகங்கள் - அண்ணா நடித்த நாடகங்கள் - அண்ணாவும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த நாடகங்கள் - அண்ணாவும் நானும் இணைந்து நடித்த நாடகங்கள் பல நடைபெற்றது உண்டு. அந்த டி. சண்முகம் அவர்கள் அண்ணாவிடத்திலே எப்படி தன்னை ஒப்படைத்துக்கொண்டவர் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.


ஒரு நாடகத்தில், அண்ணா அவர்கள் துரைராஜ் என்ற ஒரு பகுத்தறிவுவாதியின் பாத்திரத்தை ஏற்று நடிப்பார். அந்த துரைராஜ் சமுதாயத் தொண்டுகளை ஆற்றி முதலாளிகளை எல்லாம் வென்று, மடாதிபதிகளையெல்லாம் முறியடித்து, பண்டார சன்னதிகளையெல்லாம் ஒரு கை பார்த்து, இறுதியில் தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்ற சூழ்நிலையில், தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்க முடியாமல், தான் ஆற்றிய தொண்டினை மக்களுக்காக அப்படியே அர்ப்பணித்துவிட்டு ஒரு துளி விஷத்தை எடுத்து அருந்தி, மாண்டு விடுகிற நிகழ்ச்சி ஒரு காட்சியாக அந்த நாடகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.


அண்ணா அந்தப் பாத்திரத்தை ஏந்தி நடித்தபோது, விஷமருந்தி துரைராஜ் என்ற அந்தக் கதாபாத்திரம் இறந்து போகிற அந்தக் காட்சியில் எதிரே அமர்ந்து அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் டி. சண்முகம் அவர்கள் ‘‘அண்ணா, அண்ணா, நீ சாகக்கூடாது’’ என்று நாடகத்தையே மறந்துவிட்டு, நடிப்பவர் அறிஞர் அண்ணா என்பதை மறந்துவிட்டு, உண்மையிலேயே அது நாடகப் பாத்திரம் சாகப் போகிற காட்சி என்பதை மறந்துவிட்டு - அண்ணா உண்மையாக சாகப்போகிறார் என்று எண்ணி ‘‘அண்ணா, நீ சாகக்கூடாது’’ என்று முன் வரிசையிலே அமர்ந்திருந்த டி. சண்முகம் அவர்கள் எழுந்து மேடைக்கு ஓடி, அண்ணாவைத் தடுத்து விட்டார். நடிப்பைக் கெடுத்து விட்டார்.


இது அந்தக் காலத்திலே நடந்தது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அண்ணா மீது அந்த அளவுக்கு அபரிமிதமான அன்பையும், ஆசையையும் வழங்கி அவருடைய இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த பெரியவர்கள் சுயமரியாதை தளகர்த்தர்கள், தன்மான இயக்க வீரர்கள் இந்த இயக்கத்திலே அத்தனை பேர் இருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.


அந்த நாடகத்தைப் போல பல நாடகங்களை இதே மைதானத்தில் அண்ணா அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். அதிலே ஒரு நாடகம்தான், சிவாஜியோடு அண்ணா அவர்கள் நடித்த நாடகம்.

ஒருநாள் சிவாஜியோடு சேர்ந்து நடித்தார் - இன்னொரு நாள் அண்ணா என்னோடு சேர்ந்து நடித்தார் - நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். எதற்காக, எங்களது நடிப்புத் திறனைக் காட்டுவதற்கா? அல்ல! அல்ல! அப்படி நடிக்கிற நாடகத்திற்குக் கட்டணம் வசூலித்து, அந்தக் கட்டண வசூலில் மிச்சப்பட்ட பணத்தை தியாகராயர் கல்லூரி நிதிக்குத் தருவதற்காக நாடகங்களை அண்ணாவும் நானும் சேர்ந்து நடித்தோம். அந்த நிகழ்ச்சிகளெல்லாம் எனக்கு மிகப் பசுமையாக நினைவுக்கு வருகிறது.


அந்த அண்ணா இல்லையே என்ற ஆதங்கத்தோடு நான் மிகுந்த வேதனையோடு இன்றைக்கு இந்த மேடையிலே பல ஆண்டுகளுக்குப் பிறகு காணுகிற இந்த மைதானத்தைக் கண்டு மனம் வெதும்புகிறேன்.


அண்ணா மாத்திரமல்ல! திருவொற்றியூர் சண்முகம் மாத்திரமல்ல! இன்னும் எத்தனையோ பேர் - இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள் இன்று இல்லை. ஆனால், அவர்கள் இட்ட எரு இன்றைக்குத் தருவாகி, அந்தத் தரு நிழலில் நாமெல்லாம் அமர்ந்திருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.


அந்த நிழலில் வளர்ந்த மரங்களில் ஒன்றுதான் - செடிகளில் ஒன்றுதான் - கொடிகளிலே ஒன்றுதான் நம்முடைய தம்பி சேகர் பாபு. இந்தக் கொடி வேறொரு மரத்திலே படர்ந்திருந்தது. இன்றைக்கு அங்கிருந்து விடுபட்டு, எந்த மரத்திலே படர்ந்தால் மரத்திற்கும் நல்லது, கொடிக்கும் நல்லதோ, அந்த மரத்திலே இன்றைக்குப் படர்ந்திருக்கின்றது. அதுதான் இந்த விழா.



துரைமுருகன் பேசும்போது சொன்னார் - அ.தி.மு.க. கப்பல் உடைந்துவிட்டது. ஓட்டையாகி விட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று சேகர் பாபு இங்கே வந்துவிட்டார் என்று துரைமுருகன் சொன்னார்.


நான் அதை சேகர் பாபுவுக்குப் பாராட்டாகக் கருதவில்லை. கப்பல் உண்மையிலேயே உடைந்திருந்தால் அதிலே பயணம் செய்கிறவர்கள் அந்த ஓட்டையை அடைத்து, தானும் பயணம் செய்து, மற்றவர்களும் பயணம் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அதுதான் கடமை. ஆனால், துரைமுருகன் சொன்னது, ஏதோ கப்பல் உடைந்ததும் இவர் ஓடிவந்துவிட்டார் என்பதைப் போல துரைமுருகன் சொன்னார்.



அப்படி அல்ல! கப்பல் உடையவில்லை. நன்றாகத்தான் இருந்தது. பளபளப்பாக இருந்தது. ஒரு சிறு ஓட்டை கூட இல்லாமல் இருந்தது. வலுவாக இருந்தது. ஆனால், கப்பல் எந்த திசைக்கு வந்து எங்கே கரை சேர வேண்டுமோ அந்தக் கரைக்கு வராமல் வேறு கரைக்கு திசை மாறிச் சென்றது.

திசை மாறுகிற கப்பலில் நமக்கெல்லாம் வேலையில்லை என்று சேகர் பாபு வந்து விட்டாரே தவிர, ஓட்டை விழுந்துவிட்டது, ஆகவே அது நமக்கு உபயோகப்படாது என்று வந்தவர் அல்ல.



எனக்கு சேகர் பாபுவைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் ஓராண்டு காலத்திற்கும் மேலாகவே சேகர் பாபுவைப் பற்றி தம்பி ஸ்டாலினிடத்திலே பேசியிருக்கிறேன். சட்டப் பேரவையில் நான் பார்த்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் - இன்னும் தெளிவாகச் சொன்னால் அ.தி.மு.க. உறுப்பினர்களில் தெளிவு படைத்தவராகத் தெரிந்தவர் தம்பி சேகர் பாபு என்பதால், இது என்ன கப்பல் திசைமாறிப் போகிறது, இவருக்கு இது தெரியவில்லையா, அந்தக் கப்பலில் உட்கார்ந்திருக்கிறாரே என்ற அந்த அர்த்தத்தில்தான் நான் ஸ்டாலினிடத்திலே பல முறை கேட்டிருக்கிறேன். ‘‘அவர் எதையும் அவசரப்பட்டுச் செய்ய மாட்டார். ஆர அமர யோசித்து, இறுதியாகத்தான் முடிவெடுப்பார்’’ என்று என்னிடத்திலே ஸ்டாலின் தெளிவுபடுத்தினார்.

அவர் அப்படித்தான் முடிவெடுத்தார் - எடுத்தால் - அந்த முடிவு வலிவான முடிவாக இருக்கும். அந்த முடிவு யாரும் விமர்சிக்கத்தக்க முடிவாக இல்லாமல், பாராட்டத்தக்க முடிவாக இருக்கும் என்பதற்கு உதாரணமாகத்தான் இன்றைக்கு சேகர் பாபு நம்மிடத்திலே வந்து வீற்றிருக்கின்ற இந்தக் காட்சி!


சேகர் பாபு துடிதுடிப்பாக சட்டப் பேரவையில் பேசக்கூடியவர். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு துடிதுடிப்பாகப் பேசக்கூடியவர் இங்கல்லவா இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதுண்டு.


அதற்காக வலை வீசியது கிடையாது. வரும்போது வரட்டும், அப்படி வருகிற நேரத்தில் நாம் தவழ்ந்து வருகிற குழந்தையை தாய் தாங்கிக் கொள்வதைப் போல தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்போம் என்றுதான் காத்திருந்தேன். காத்திருந்த என்னுடைய எண்ணம் இன்றைக்கு கைகூடிவிட்டது.


நான் சேகர் பாபுவுக்கு சொல்வேன். அவரோடு இணைந்து இன்றைக்கு வந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான திராவிட இயக்கத் தோழர்களுக்கும், தம்பிமார்களுக்கும் சொல்லுவேன் - நீங்கள் இருந்த இடம் என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.


அவர்களால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இடம். அங்கிருந்து நீங்கள் இங்கு வந்துவிட்டதற்குக் காரணம் - எம்.ஜி.ஆர். உருவாக்கிய அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். என்ன கருதி அந்த இடத்தை உருவாக்கினாரோ, அதற்கு நேர்மாறாக, அவருக்கே பகையாக, அவருக்கே முதலமைச்சர் வேலை பார்க்கத் தகுதி இல்லை என்று குற்றம் சொல்கிற, குறை சொல்கிற நிலை அங்கே ஏற்பட்டு, ‘‘அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, தன்னை முதலமைச்சராக ஆக்குங்கள்’’ என்று சொல்லுகின்ற ஒரு அம்மையார் அங்கே தலையெடுத்து விட்ட காரணத்தால், அப்பொழுதே அவர் அந்த அம்மையாரைப் பற்றி தன்னுடைய கட்சிக் காரர்களுக்கு எடுத்துச்சொன்னார்.



ஆனால், அது காதில் விழ, சேகர் பாபுவுக்கு இவ்வளவு காலம் ஆயிற்று! இப்போதாவது அது காதில் விழுந்து தானும் தப்பித்துக் கொண்டு, தமிழ்நாட்டையும் தப்ப வைத்திருக்கிறார் என்பதற்காக நான் சேகர் பாபுவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


தமிழகத்திலே இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு முன்னால் பேசியவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல், இது தேர்தல் நேரம். தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் - இடங்களின் எண்ணிக்கைகள் - இவைகளெல்லாம் தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளால் - கட்சித் தலைவர்களால் கணக்கிடப்படுகின்ற வேளை. உங்களுக்கு எத்தனை இடம் - எங்களுக்கு எத்தனை இடம் என்று பங்கு பிரித்துக் கொள்கிற நேரம்.



இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, அந்த இடத்திற்குப் பெயர் என்ன என்று ஒவ்வொருவரும் தொகுதிகளை அடையாளம் காட்டி, அந்தத் தொகுதிகளில் யார் நிற்பது என்று பெயரையும் எடுத்துக் காட்டி, அந்தப் பெயருக்குரியவர் வெற்றி பெறுவதற்காக இருதரப்பிலும் பணியாற்றக் கூடிய காலம் சில நாட்களிலே இருக்கிறது. அல்லது வாரக்கணக்கிலே இருக்கிறது. நாமெல்லாம் தேர்தல் களத்திலே இறங்கி வேலை செய்ய வேண்டிய நாள் வெகு விரைவிலே வந்து கொண்டிருக்கிறது.



தேர்தல் என்பது ஜனநாயகக் கடமை. ஜனநாயகத்திலே யார் நாட்டுப் பரிபாலனத்தைச் செய்வது - யார் எதிர் வரிசையில் அமர்வது என்று நிர்ணயிக்கக் கூடிய காலக்கட்டத்தை நாம் அல்ல, மக்களே நிர்ணயிக்கிறார்கள். அதுதான் ஜனநாயகம்.



ஜனங்கள் பார்த்துத் தீர்மானித்து யார் ஆட்சிக்குத் தகுதி - யார் எதிர்க் கட்சியாக இருக்கத் தகுதி என்று நிர்ணயித்தால் அதற்குப் பெயர்தான் ஜனநாயகம். ஜனங்களால் உருவாக்கப்படுகின்ற நாயகம். அதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவம். அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பெரும் தலைவராக நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் திகழ்ந்தார்கள்.



அவர் உருவாக்கிய கழகம் இந்த வட்டாரத்திலே மழைத் துளிகளுக்கிடையே அறிவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம். இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது.


ஒரு மாவட்டத்தினுடைய ஒரு பகுதியிலே அறிவிக்கப்பட்ட இந்த இயக்கம் இங்கே நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்திலே பாதிக் கூட்டம் கூட இல்லாத அளவிற்கு மாநாட்டை நடத்தி, திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாடு என்று அதை அழைத்தோமே,

அந்தக் கழகம் இன்றைக்கு இதுபோன்ற ஒரு கூட்டத்தை மாநில மாநாடு என்ற பெயரால் நடத்துவதென்றால், தமிழ்நாட்டிலே எங்கே இடம் இருக்கிறது என்று தேடிப்பார்க்கின்ற அளவிற்கு விரிந்து பரந்து - வங்கக் கடலா, அரபிக் கடலா, இலட்சோப லட்சம் கோடிக்கணக்கான மக்களா - இவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி இந்த வளர்ச்சி ஏற்பட்டது? என்று வடக்கே உள்ளவர்களும்,

கிழக்கே உள்ளவர்களும், மேற்கே உள்ளவர்களும் திகைக்கின்ற அளவிற்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால், பெரியார், அண்ணா - இந்த இருபெரும் தலைவர்களுடைய கொள்கை இன்றைக்கு எல்லோருடைய உள்ளத்திலும் பதிந்திருக்கிறது என்றால், அதற்காக நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு - நாம் இழந்த உயிர்கள் எவ்வளவு - நாம் உதிர்த்த கண்ணீர் வெள்ளம் எவ்வளவு - நாம் வீழ்த்திய பகையை விட, நம்மை வீழ்த்தியவர்கள் பணபலம் கொண்டோர் - அந்தச் செல்வாக்கும், வலிவும் நமக்குக் குறைவு, அவர்களிடத்திலே அந்த வலிவு அதிகம்.


அந்த வலிவுக்கு உறுதுணையாக இருந்தது பணம், வேறு பல சக்திகள். எல்லாம் இருந்தும்கூட, சாதாரண, சாமானிய மக்களால் நடத்தப்பட்ட இயக்கம் ஆகும் இந்த இயக்கம். இன்றைய தினம் அது ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடி, அண்ணாவின் புகழை, அய்யாவின் கீர்த்தியை அகிலமெங்கும் இன்றைக்குப் பரப்பியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் நாம் அல்ல - என் எதிரே அமர்ந்திருக்கின்ற நீங்கள்தான் அதற்குக் காரணம் என்பதை அறியாதவன் அல்ல நான்! எல்லாம் அறிந்தவன்தான்!


மக்கள் இல்லை என்றால் மக்களாட்சி இல்லை. மக்களாட்சி இல்லையென்றால் மக்களுக்கு எந்தவிதமான நல்வழியையும் காட்டுவதற்கு ஆள் இல்லை. அந்த மக்களாட்சியை நடத்துகின்ற இயக்கமாகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்கிறதென்றால், மக்களாட்சித் தத்துவத்தை, மக்களாட்சியின் மாண்பை, மக்களாட்சி உண்மையிலேயே ஏற்படுமேயானால், அது மக்களுக்காகப் பாடுபடுகின்ற ஆட்சியாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு மக்களுக்குத் தேவை என்ன என்பதை இந்தியாவிலே உள்ள எந்த மாநிலமும் அந்த அரிச்சுவடியைக் கூட உணர்ந்து கடைப்பிடிக்காத இந்தக் காலக்கட்டத்தில், மக்களாட்சியின் மகிமையை வலுப்படுத்துகின்ற வகையிலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்கின்ற மலிவான விலைக்கு மக்களுடைய உணவுக்கு முக்கியத்துவம் தந்து அரிசியை விலை குறைத்து வழங்குகின்ற ஒரே ஆட்சி - இந்தியாவிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த ஆட்சி - அடியேன் தலைமையிலே இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த ஆட்சி.


பக்கத்திலே கேரள மாநிலம். கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற மாநிலம். பல ஆண்டுகாலமாக அவர்கள்தான் அங்கே ஆண்டு வருகின்றார்கள். நேற்றைக்குத்தான் செய்தி வருகிறது - கேரளத்தில் இனிமேல் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குத் தரப்படும் என்ற அறிக்கை. இது என்ன வேடிக்கை! இங்கே ஒரு ரூபாய்க்குத் தருகிறோம், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தில் இரண்டு ரூபாய்க்குத் தரப்படும் என்பது தலைப்புச் செய்தி. இங்கே ஒரு ரூபாய்க்குத் தரலாம் என்று பல மாதங்களுக்கு முன்பே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே அது வழங்கப்பட்டு, படி அரிசித் திட்டத்தை அண்ணா அன்றைக்குத் தொடங்கினார்.

இடையில் அது தளர்ந்தது. சில தயக்கங்கள் ஏற்பட்டது. சில தடங்கல்கள் ஏற்பட்டது. இருந்தாலும், அண்ணாவுடைய கொள்கையை நிறைவேற்றியே தீருவது என்று சங்கல்பம் செய்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இல்லை - இந்த இயக்கம் இல்லை - இந்த இயக்கத்தினுடைய இலட்சியங்கள் இல்லை - கொள்கைகள் இல்லை. எனவே, அவர்களை வாழ வைக்க அண்ணாவின் இலட்சியமான, ஏழைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதுதான் முதல் பணி என்று, இன்றைக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று கொடுக்கிறோம்.


அரிசி மாத்திரம் கொடுத்தால் போதுமா! அகில இந்திய அளவிலே விலைவாசி எல்லாப் பொருள்களுக்கும் ஏறியிருக்கிறதே என்று சில பேர் கை உயர்த்தியபோது, பயப்படாதீர்கள் என்று அவர்களுக்கு அமைதி கற்பித்து, சமையல் பொருட்கள், பண்டங்களான பருப்பு, பாமாயில், உளுந்து - இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்களையெல்லாம் 10 பொருள்களை ஒரு பையிலே வைத்து, விலைவாசி குறைவாக - அதுவும் அந்தப் பையிலே இருக்கின்ற பொருள்களைப் பெற்றால் விலைவாசியைச் சமாளிக்கலாம் என்று அதற்காகவும் பணியாற்றிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு.

அது மாத்திரமல்ல! ஒரு பெண்ணுக்குத் திருமணமே ஆகாமல், வாழாவெட்டியாகி விடுவாளே என்று பெற்றோர் தவிக்கின்ற நேரத்தில், உற்றார் வருந்துகின்ற நேரத்தில், அந்தப் பெண்ணின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொண்டு, அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் (கைதட்டல்) நன்கொடையும் தருகின்ற ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.


திருமணமான பிறகு குழந்தை பிறக்குமே! குழந்தை பிறந்தால், குழந்தை உருவானால் அதற்குச் செலவாகுமே என்று வருந்துகின்றவர்களைப் பார்த்து, வருந்தாதீர்கள் என்று அபயக்கரம் நீட்டி, குழந்தை உருவான அந்தப் பெண்ணுக்கு ஆறுமாத காலத்திற்கு ஆகிற எல்லா செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது என்ற அளவிற்கு 6 ஆயிரம் ரூபாய் - முதலிலே ஒரு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு ஒரு 3 ஆயிரம் ரூபாய். மாமன் மச்சான் கூட இந்த அளவிற்கு (கைதட்டல்) அந்தக் குழந்தைக்காக செலவு செய்ய மாட்டான். அந்தச் செலவை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசே ஏற்றுக் கொள்கிறது.


அது மாத்திரமல்ல, நான் முக்கியமாகச் சொல்ல வேண்டியது மக்களின் முக்கியமான அத்தியாவசியமான தேவை - உணவு, உடை, உறையுள். உணவு அளிக்கிறோம் - கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று. அந்த உணவருந்தி அவன் வாழ வேண்டிய இடம் - தமிழகத்திலே எத்தனை குடிசைகள் இருக்கின்றன என்று கணக்கிட்டு அந்தக் குடிசைகளையெல்லாம் கோபுரங்கள் ஆக்குவோம். குடிசைகளை கோபுரங்கள் ஆக்குவோம் என்றால், மதுரை கோபுரமாக அல்ல, திருவரங்கம் கோபுரமாக அல்ல.

வாழக்கூடிய குடும்பக் கோபுரங்களாக ஆக்குவோம். (கைதட்டல்) ஒவ்வொரு குடும்பமும், பெண்டு பிள்ளைகளோடு, குழந்தைகளோடு வாழக்கூடிய குடும்பங்களின் குடிசைகளை - கான்கிரீட் வீடுகளாக மாற்றுவோம் என்று கணக்கிடச் செய்து, ஆண்டு ஒன்றுக்கு 3 இலட்சம் வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக 3 இலட்சம் வீடுகள் கட்ட ஆரம்பித்து, 3 இலட்சம் குடிசைகள் இன்றைக்குக் கான்கிரீட் வீடுகளாக அமைந்து வருகின்றோம்.

இன்னும் 6 வருடத்தில், தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் வீடுகளாக ஆகிவிடும். இன்னும் 6 வருடத்திலா, நீ இருப்பாயா! என்றால் ‘‘நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும்’’ (கைதட்டல்).


நீங்கள் இருக்கும்போது நாங்கள் இல்லாமல் எங்கே போவோம்!

ஆகவே, நாங்கள் வெளியிட்டிருக்கின்ற இந்தத் திட்டங்களையெல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். அவைகளைத் தொடங்கி விட்டோம். ஏறத்தாழ ஒரு இலட்சம் வீடுகள் இப்பொழுதே கான்கிரீட் வீடுகளாக - பல கிராமங்களில், பல நகரங்களில் மாற்றப்பட்டு வருகின்றன. இன்னும் 6 ஆண்டுக் காலத்தில் ஒரு அயல்நாட்டுக் காரன் தமிழ்நாட்டிற்கு வந்து பார்த்தால், அதிசயப்படுவான்.


‘‘ஏ அப்பா! இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே குடிசைகள் இல்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடுதான் ’’ என்று சொல்வான். இப்பொழுது நமக்கு பல பரிசுகளை, விருதுகளை டெல்லியிலே சி.என்.என். -ஐ.பி.என். போன்ற சில முக்கியமான நிறுவனத்தார் வழங்கினார்கள்.

‘‘இந்தியாவிலே தலைசிறந்த மாநிலம் - முதல் மாநிலம் தமிழ்நாடு’’ என்று. (கைதட்டல்) உலகத்திலே உள்ள பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, இந்தியாவிலே, தமிழகத்திலே குடிசைகள் அற்ற கிராமங்கள், நகரங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி இரும்பூதெய்துவார்கள்.

அந்தக் காணக் கிடைக்காத காட்சியைக் காண எதிர்காலத்திலே உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். எங்களையும் தயார் நிலையிலே வையுங்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்.


இந்த அருமையான மக்கள் தேர்தலை நடத்தி, தங்களை ஆள்வதற்கு ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிற இந்தக் காலக்கட்டத்தில், நமக்குத் துணையாக, நம்மிடத்திலே இருக்கின்ற படை போதாதென்று, இன்னும் இந்தப் படையைப் பெருக்கவேண்டும், வலிமைப் படுத்த வேண்டுமென்று இந்தப் படைக்கோர் அணிகலனாக நம்முடைய தம்பி சேகர் பாபு இன்று வந்து இங்கே இணைந்திருக்கிறார். அவருடைய வருகையை நான் பாராட்டுகின்றேன் - வாழ்த்துகின்றேன்.


அவர் பணி சிறக்க என்னுடைய விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார் - தனிப்பட்ட விருப்பம் எனக்கு எதுவும் இல்லை. ஒரே ஒரு விருப்பம் - திராவிட இயக்கம் இந்த இடத்திலே பிறந்தது, இந்த இடத்திலே அரசியல் இயக்கமாக உருவானது. அறிஞர் அண்ணா அவர்களால் இந்த இடத்திலே வித்திடப்பட்டது. அந்தத் தருவை வளர்க்கின்ற அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற என்னுடைய தம்பிமார்கள் அத்தனை பேரோடும், நீயும் ஒரு தம்பியாக இருந்து இந்தத் தருவை வளர்த்திடுவாய்! வளர்த்திடுவாய்! ’’ என்று உரையாற்றினார்.