முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்விக்கு பதில் விவரம் வருமாறு:
கேள்வி: டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே?
பதில்: டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்லமதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.
கேள்வி: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச்சொல்லி தொண்டர்களை உசுப்பி விட்டு அறிக்கை விடுவதோடு தன் பணி முடிந்து விட்டது என்றிருந்த ஜெயலலிதா, தற்போது மாதத்திற்கு ஓரிரு முறை தானே அவற்றில் கலந்து கொள்வதாக அறிவிப்பதும்சிறிய சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு போட்டோ தரிசனம் கொடுப்பதும் எதைக் காட்டுகிறது?
பதில்: தேர்தல் நெருங்கிவிட்டது என்பதைத்தான்!
கேள்வி: தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து ஜெயலலிதா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறாரே?
பதில்: தினபூமி பத்திரிகை ஆசிரியரின் கைது பற்றி பத்திரிக்கை செய்திகள் மூலமாக அறிந்ததும் நான் உடனடியாக காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுவிட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென்று கூறி அவர்களும் ஒரு சில மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டு விட்டனர். பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான ரவீந்தரதாஸ் அவர்களையும் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு நான் பேசினேன். அதைப் பற்றி அவரே எனக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையும் விடுத்துள்ளார்.
இது என்னுடைய நடைமுறை. ஆனால் பத்திரிகையாளர்களுக்காக வக்காலத்து வாங்கி அறிக்கை விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? இந்து பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் செய்தது எந்த ஆட்சியிலே? நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கி அதன் ஆசிரியர் கோபாலை கைது செய்து, அவரது குடும்பத்தினர் ஒருவரே சாகக் காரணமாக இருந்தது எந்த ஆட்சியிலே? பத்திரிகை பிதாமகன் என்று சொல்லத் தக்க அளவிற்கு மரியாதை பெற்ற ஆசிரியர் சாவி கைது செய்யப்பட்டது எந்த ஆட்சியிலே? ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் பாலு கைது செய்யப்பட்டது எப்போது? முரசொலியில் வெளி வந்த செய்தி ஒன்றுக்காக முரசொலி செல்வத்தை சட்டமன்ற வளாகத்திற்கே வரவழைத்து, சரித்திரத்திலேயே நடைபெறாத அளவிற்கு கூண்டிலே நிறுத்தியது எந்த ஆட்சியிலே? சாத்தான் வேதம் ஓதலாமா? என்று ஒரு பழமொழி கூட உண்டே!
கேள்வி: மார்க்சிஸ்ட்கள் தமிழக அரசைப் பற்றி எந்தவொரு பிரச்சினை என்றாலும் உடனே அதனைத் தாக்கி அறிக்கை விடுகிறார்களே; அவர்கள் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் என்ன நிலை என்பதை நினைத்தே பார்க்க மாட்டார்களா?
பதில்: அய்.நா.வின் சர்வதேச மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி, வறுமை ஒழிப்பு நடவடிக்கை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து, பல்நோக்கு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்கள்; ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளை விட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருக்கிறாரே?
பதில்: மத்திய அரசு மானியத்தில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், எல்லா மாநிலங்களிலுமே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கலாமே! மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கும் அரிசியைத் தான் நமது மாநிலத்திற்கும் அதே விலையில் வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் தான் இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அது மாத்திரமல்ல; சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அத்தியாவசிய உணவுப் பொருள்களாகிய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றையும், மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசுதான் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக இந்த ஆண்டு மட்டும் 3,750 கோடி ரூபாயை தமிழக அரசுதான் தன் நிதியிலிருந்து அளித்து இத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்திதான். அந்தத் திட்டம் உலக வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்றுத்தான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி, நடத்தப்படுகின்ற திட்டமாகும்.
இந்தத் திட்டத்திற்கான நடைமுறைச் செலவிலே தான் ஒரு பகுதியை மட்டும் மத்திய அரசு வழங்குகிறது.
கேள்வி: ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது அ.தி.மு.க.விற்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்: ஆமாம், அவர் என்ன செய்து விடுவாரோ என்று பயந்து கொண்டுதான் அந்தப் பெயர் சூட்டப்பட்டது!
கேள்வி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை நீங்களாகவே சூட்டியபோதிலும், அது அ.தி.மு.க.விற்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: ஆமாம், பெருந்தலைவர் காமராஜர் மீது திடீரென்று அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம்! அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர் தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பேருந்து நிலையங்கள் எத்தனை தெரியுமா? சிரிப்பு தான் வருகிறது.
காமராஜர் பெயரை வைக்கக்கூடாது என்று கருதுகின்ற அரசா இது? கக்கன் சிலையை வைக்கத் தயங்குகின்ற ஆட்சியா இது? காமராஜர் பிறந்தநாளை தியாகிகள் தினமாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்து சட்டம் நிறைவேற்றிக் கொண்டாடுகின்ற அரசல்லவா இது?
காமராஜர் மறைந்த போது, அவரது உடலை அரசு மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்க வேண்டுமென்று சொன்னவனே நான் தானே? அவரது உடலை அடக்கம் செய்ய நள்ளிரவிலே நானும், அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ப.உ.சண்முகமும் இடம் தேடிச் சென்று ஏற்பாடு செய்ததைப் பற்றி, சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு பேசும் போது, காமராஜரின் சகோதரர் ஒருவர் உயிரோடு இருந்து அவர் உடலை அடக்கம் செய்திருந்தால் கூட இந்த அளவிற்கு செய்திருக்க மாட்டார் என்று கூறியது இன்றும் அவைக்குறிப்பிலே இடம் பெற்றுள்ளதே!
கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என்று இவர்கள் எல்லாம் கோரிக்கை வைத்த பிறகு, உண்ணாவிரதம் இருந்த பிறகா நான் பெயர் சூட்டினேன்?
மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரையும், காமராஜரின் பெயரையும் வைக்க வேண்டுமென்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்து நிறைவேற்றிய போது ஜெயலலிதாவும் அவருடைய கட்சியினரும் எங்கே போயிருந்தார்கள்?
கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்று குமரி அனந்தன் கோரிக்கை வைத்து, அந்த இடம் கடலுக்கு அருகிலே இருப்பதாகக் கூறி வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய அரசு ஏற்க மறுத்தபோதுஅதற்காக வாஜ்பாயிடம் வாதாடி விதிவிலக்கு பெற்று காமராஜர் மணிமண்டபத்தை எழுப்பக் காரணமாக இருந்தவன் நான் அல்லவா?
1961 ஆம் ஆண்டு பெரியார் பாலத்திற்கு அருகே பெருந்தலைவர் காமராஜருக்கு சிலை அமைத்து, மாநகராட்சிப் பொறுப்பில் தி.மு.கழகம் இருந்தபோதுதான் அன்றைய பிரதமர் பண்டித நேருவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது என்ற சரித்திரம் எல்லாம் அப்போது அரசியலுக்கே வராமல் குழந்தை நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க முடியாதுதான்!
தியாகி கக்கன் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலை ரூ.4.10 லட்சம் செலவிலே உருவாக்கப்பட்டு, மதுரையிலே நான் கலந்து கொண்டு 31_8_1997 அன்று திறந்து வைத்த போது இப்போது அறிக்கை விடும் ஜெயலலிதா எங்கே இருந்தார்?
மதுரை மாவட்டம், கக்கன் பிறந்த தும்பப்பட்டியில் தியாகி கக்கன் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டி முடித்து, அங்கே கக்கன் மார்பளவு சிலையும் 13_2_2001 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளதே! அன்று ஜெயலலிதா எங்கே போனார்?
1971 ஆம் ஆண்டிலேயே சென்னை மாம்பலம் சி.அய்.டி. நகரில் தியாகி கக்கனுக்கு அரசுக்குடியிருப்பு ஒன்றை ஒதுக்கீடு செய்து தந்ததே தி.மு. கழக அரசுதானே?
கக்கன் வாரிசுகளில் ஒருவரான அவரது மகன் க.பாக்யநாதனுக்கும், பேரன் கண்ணன் என்பவருக்கும் லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை அவர்கள் இருவரின் செலவுகளுக்கும் மாதந்தோறும் வழங்கிடவும், அவர்கள் இருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவியையும் செய்தது தி.மு.கழக ஆட்சி அல்லவா?
எனது பெரு முயற்சி காரணமாக 9_12_1999 அன்று மத்திய அரசின் மூலம் கக்கன் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டதே, அதை மறந்து விடலாமா; மறதிக்குடுக்கை!
இதையெல்லாம் மறைத்து விட்டு கக்கன் மீது ஜெயலலிதாவிற்கு திடீரென்று அக்கறை ஏற்பட்டு விட்டதா? கக்கன் வகுப்பைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவர் ஒரு நாள் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் பயணம் செய்திட ஏறி அமர்ந்த பிறகு, அவரை விமானத்திலிருந்து இறக்கி விட்ட முற்போக்குவாதி அல்லவா ஜெயலலிதா? என்று கூறியுள்ளார் முதல்வர் கலைஞர்.