கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 23, 2011

ஈஸ்டர் திருநாள்: கலைஞர் வாழ்த்து


முதல் அமைச்சர் கலைஞர் விடுத்துள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:

இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறிஸ்தவ சமுதாய மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (24.4.2011) மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார்.

தமது போதனைகளாலும், செயல்களாலும் சமுதாயத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு உதவிடவேண்டும் என்னும் உணர்வை அனைவரிடமும் வளர்த்தார். உங்கள் மேல் உடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ளப்பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள், உங்களிடம் கேட்கும் எவர்க்கும் கொடுங்கள், உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடம் இருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள், திரும்பக் கிடைக்குமென எதிர் பார்க்காமல் கடன் கொடுங்கள் எனப்போதித்தார். ஒரு முறை, நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஒருவர் இயேசுநாதரை விருந்துக்கு அழைத்தபொழுது அவரிடம், நீர், பகல் உணவோ, இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, அண்டை வீட்டார்களையோ அழைக்க வேண்டாம், மாறாக நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் உறுப்புகள் குறைந்தோரையும், பார்வையற்றோரையும் அழையும் என்று அறிவுறுத்தினார்.

இப்படி, ஏழை எளிய நலிந்த பிரிவினரின் நலனுக்காகப் பாடுபட்டுத் துன்பங்களைச் சகித்துக் கொண்டு, தொண்டு செய்திடும் மனப்பான்மையை சமுதாயத்தில் வளர்வதற்குத் தம் செயல்கள் மூலமாகவே வழிகாட்டியவர் இயேசு பெருமான். அவரது புகழ் பாடும் பெருநாள் இந்த ஈஸ்டர் திருநாள். இந்நன்னாளில் அவர் போதித்த வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடித்து வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்

No comments:

Post a Comment