திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினரும், அதிமுக வேட்பாளர் விசுவநாதனின் உடன்பிறந்த தம்பியுமான ஜெயராஜ், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் ராமன், தேமுதிக ஒன்றிய அவைத்தலைவர் ஜான்பீட்டர் உள்ளிட்ட 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் 08.04.2011 அன்று இரவு திமுகவில் இணைந்தனர்.
நத்தம் ஒன்றியம் புன்னைப்பட்டி ஊராட்சி உலுப்பக்குடி கிளை, வேலாயுதம்பட்டி, முளையூர், வீரப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தேமுதிக கிளை கழகங்கள் முற்றிலும் கலைக்கப்பட்டு அனைவரும் மு.க.அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மு.க.அழகிரி பேசும்போது, ‘‘தேமுதிகவினர் திமுகவில் இணைவதற்கான காரணம், திமுகவின் தேர்தல் அறிக்கைதான். முதல்வர் கடந்த 2006 தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். ஆட்சியில் அமர்ந்ததும் விவசாயிகள் கடன் ரூ.7ஆயிரம் கோடியை ரத்து செய்தார். இந்தியாவில் நமது முதல்வரை போல் வேறு தலைவர்கள் கிடையாது. திருமண உதவித்தொகை ரூ.30ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் திருமண நிதியுதவியை நிறுத்தி விட்டார். ஏனென்றால் அவருக்கு திருமணமாக வில்லை. தேர்தலுக்கு பின்னர் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். நத்தம் தொகுதியில் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் விஜயன் வெற்றி பெறுவார்,’’ என்றார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, நத்தம் திமுக வேட்பாளர் விஜயன், முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment