‘கருணாநிதி ஆட்சியில் கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளன’ என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணி கூண்டு, வீரப்பன்சத்திரம் ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் முத்துசாமியை ஆதரித்தும், ஈரோடு மேற்கு தொகுதியில் சூளை, கனிராவுத்தர் குளம், சித்தோடு, காலிங்கராயன்பாளையம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜாவுக்கு வாக்குசேகரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட, சொல்லாத சாதனைகளையும் நிறைவேற்றிவிட்டு உங்களிடம் உரிமையோடு வந்து வாக்குகேட்கிறோம்.
சில தலைவர்கள் தேர்தல் நேரத்தில் வருவார்கள். அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று செய்ய முடியாத வாக்குறுதிகளை கூறுவார்கள். வானத்தை கிழித்து வைகுண்டம் போகிறேன் என்றும், மணலை திரித்து கயிறாக்குவேன் என்றும் கதை விடுவார்கள். தேர்தல் முடிந்தபிறகு திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட தலைவருக்கு துணையாக இன்னொரு தலைவரும் சேர்ந்துள்ளார். அவர் சினிமாவில் கதாநாயகனாக நடித்து மார்க்கெட் போன பிறகு, அரசியலில் நடிகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் மாறி கடந்த 5 நாட்களாக காமெடியனாகவும் மாறி நாடே சிரிப்பாய் சிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கட்சி வேட்பாளரை கூட அடித்து உதைக்கும் நிலை இருந்து வருகிறது.
06.04.2011 அன்று கோவை யில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட அந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் இணைந்து கூட்டம் நடத்துகின்றனர்.
அந்த கூட்டத்துக்கு ஜெயலலிதா செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லையெனில் தலை தப்பாது என்பதை அக்கறையோடு சொல்லிக் கொள் கிறேன். அந்த அணியை பிணி என்று சொல்வதை விட சனி என்று சொல்லலாம்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர் கருணாநிதி தலைமையில் காங்கிரஸ், பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 100 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை புரிந்திருப்பது நாடே நன்கறியும். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.
கருப்பு எம்ஜிஆர் என்று தன்னை கூறிக்கொள்கிறார் விஜயகாந்த். எம்ஜிஆர் குடியை அறவே வெறுத்தவர். ஆனால் விஜயகாந்த் குடித்து விட்டு கூட்டத்தில் பேசுகிறார். மேலும் கருணாநிதியை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார். இதேபோல ஜெயலலிதாவும் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசி வருகிறார். குடும்ப ஆட்சி என்ற திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.
ஆமாம், குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. லட்சக்கணக்கான குடும்பத்தை கருணாநிதி காப்பாற்றி வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் 2 லட்சத்து 70,272 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் 8 லட்சத்து 901 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 22 லட்சத்து 40,759 விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ஒரு கிலோ அரிசி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. திருமண உதவி திட்டம் மூலம் 4 லட்சத்து 66419 குடும்பங்களும், கர்ப்பிணி பெண்கள் உதவித் திட்டத்தின் கீழ் 25 லட்சத்து 76,612 குடும்பங்களும்... இப்படி தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment