தமிழகத்தில் சராசரியாக 77.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் 14.04.2011 அன்று வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சராசரியாக 77.4 சதவீதம் வாக் குகள் பதிவாகி உள்ளன. முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் 75 சதவீதமும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் 80 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60 சதவீத வாக்குகளும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும், ஆரணியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் எண்ணிக்கை தவறாக காட்டியுள்ளது. இதனால் அந்த இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர வாக்குப்பதிவு முடிந்தவுடன் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட சமட்டிக்குப்பம் என்ற வாக்குச்சாவடிக்கு வெளியே இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் வாக்குச்சாவடிக்குள் இருந்த 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்தப்படும். மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் கமிஷனிடம் உரிய உத்தரவு பெறப்பட்டு, அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment