கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 18.04.2011 அன்று முதல்வர் கருணாநிதி திடீர் ஆய்வு செய்தார். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.200 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த 2010 செப்டம்பர் மாதம் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 9 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் 5 லட்சம் நூல்கள் உள்ளன. நூல்களை படிக்கவும் குறிப்புகள் எடுக்கவும் தினமும் 1300 பேர் வருகிறார்கள். இது தவிர திறந்தவெளி அரங்கம், உள் அரங்கமும் உள்ளன.
முதல்வர் கருணாநிதி 18.04.2011 அன்று காலை 10 மணிக்கு இங்கு வந்தார். நூலகத் துறை அதிகாரிகளிடம் நூலக செயல்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். தரை தளத்தில் உள்ள பார்வையற்றவர்களுக்கான தனிப் பகுதிக்கு சென்றார். அங்கு இருந்த பொது மக்களிடம் நூலக செயல்பாடு, குறைகள் பற்றி கேட்டறிந்தார். நூலகம் சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அங்கு மேலும் சில வசதி களை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
பின்னர் முதல் தளம் சென்றார். அங்கு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுக்காக நூல்களிலிருந்து பலர் குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் முதல் வர் குறைகளை கேட்டறிந்தார். உலகில் இது போல வேறு எங்கும் நூலகம் காண முடியாது என்று அந்த மாணவர்கள் கூறினார்கள். நூல்களில் குறிப்பு எடுக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்றும் இந்த நேரத்தை நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டார்கள். அது பற்றி பரிசீலித்து ஆவன செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.
நாடகம், சினிமா போன்றவற்றை திரையிடும் அரங்க பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த உள் அரங்கத்தையும் முதல்வர் பார்வையிட்டார். குழந்தைகளுக்கான பகுதி உள்ளிட்ட நூலகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட கருணாநிதி சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டார்.
No comments:
Post a Comment