‘கருப்பு எம்ஜிஆர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் விஜயகாந்தின் வீராப்பு என்ன ஆச்சு’ என்று பிரசாரத்தின் போது நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து நடிகர் வடிவேலு 06.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும் போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது. தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எனது நகைச்சுவை நடிப்பை ரசிக்கின்றனர். ஒரு ரூபாய் அரிசியை உலையில் போட்டு விட்டு அடுத்த வினாடி இலவச கலர் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்றனர்.
ஏழைப்பெண்களுக்கான திருமண உதவி ரூ.25ஆயிரத்திலிருந்து ரூ.30ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
சகோதரிகள் எளிதாக சமையல் செய்ய மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு எம்ஜிஆர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் ஒருவர், 2011ல் நான் தான் முதல்வர் என்றார். அவரது வீராப்பு என்ன ஆயிற்று.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், காமராஜர் ஆகியோரின் மொத்த உருவம் தான் நமது முதல்வர். முதல்வர் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை மாற்றி போடுங்கள் என்று எதிரணியினர் கூறுகின்றனர். நாமெல்லாம் நன்றியுள்ளவர்கள். உதயசூரியனுக்கு வாக்களித்து நன்றியுள்ளவர்கள் என்று காட்டுவோம்.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.
No comments:
Post a Comment