முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்ததாக பழ.நெடுமாறன் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் முதல்வர் கருணாநிதி சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.ஷாஜகான் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், புதுக்கோட்டையில் சனிக்கிழமை பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையம் சட்டப்படி எடுத்து வரும் நேர்மையான நடவடிக்கைகள் மீது குறை கூறுவதையும் குற்றம் காண்பதையும் நோக்கமாகக் கொண்டே முதல்வர் கருணாநிதி செயல்பட்டு வருகிறார். இந்த முறை சட்டப்பேரவை தேர்தலை மிக நேர்மையாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்தை மக்களும், நடுநிலையாளர்களும், எதிர்கட்சியினரும் பாராட்டியுள்ளனர்.
ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாதபடி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் தடுப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது நகைப்புக்குரியது.
மேலும் இந்த தேர்தலில் தில்லு முல்லு முறைகேடுகளை அரங்கேற்ற முடியாத கோபத்தின் வெளிப்பாடாகவே அதை கருத முடியும்.
தேர்தல் சட்டப்படி, அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் ஒரேநாளில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருமாத இடைவெளி விடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் உள்ள அரசு இடைக்கால அரசு தான் என்பது முதல்வர் கருணாநிதிக்கு தெரியும். எனினும், தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து சாடி வருகிறார் முதல்வர் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்கள், முறைகேடுகள் ஆகியவை தொடர்பான கோப்புகளை அழிக்க முடியாத ஆதங்கத்திலும், அதற்கு ஒத்துழைக்க அதிகாரிகள் மறுப்பதால் ஏற்பட்ட கோபத்திலும் முதல்வர் கருணாநிதி பதறுகிறார். துடிக்கிறார். தேர்தல் ஆணையத்தின் மீது பாய்கிறார்” என்று கூறியுள்ளார்.
பழ.நெடுமாறனின் இந்த பேட்டி, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆண்டாண்டு காலமாக தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றி வருபவர் முதல்வர். தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர் முதல்வர்.
ஆனால், அவரது நற்பெயரையும் தமிழக அரசையும் களங்கப்படுத்தும் வகையில் பழ.நெடுமாறன் பேட்டி அளித்திருப்பது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500&ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பொய்யான, உண்மைக்கு முரணான அரசியல் உள்நோக்கம் கொண்ட வகையில் பழ.நெடுமாறன் பேட்டி அளித்திருக்கிறார். எனவே, அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
No comments:
Post a Comment