02.08.1986 அன்று அ.தி.மு.க ஆட்சியின் அவலத்தால் ஏற்பட்ட வறட்சித் துயரை துடைத்திட மதுரை விரகனூரில் கழகத்தின் சார்பில் கஞ்சித்தொட்டி திறந்து வைப்பதற்காக தலைவர் கலைஞர் மதுரை வந்து பாண்டியன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.
அப்போது அருப்புகோட்டை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கபட்டிருந்தது (அருப்புக்கோட்டையில் ஐயா வே.தங்கப்பாண்டியன் அவர்களும், நெல்லையில் ஐயா ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கழக வேட்பாளர்களாக களம் கண்டார்கள்). அதனால் தலைவரை சந்தித்து தேர்தல் நிதி அளித்திட எனது தந்தையார் குரு. இராமச்சந்திரன் ஐந்து வயது கூட நிரம்பாத என்னையும் உடன் அழைத்து சென்றார்.
தலைவருக்கு அருகில் இருந்த ஐயா பி.டி.ஆர் அவர்கள் என் தந்தையை நன்கு அறிந்தவர் என்ற வகையில் தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். என் தந்தை எனது கையால் தலைவரிடம் நிதியை கொடுக்கச் செய்தார். எனது உண்டியல் சேமிப்பான ரூ. 20 ஐ தலைவரிடம் வழங்கினேன். இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப தலைவர் கேட்ட கேள்விகளுக்கு தயங்கமால் பதில் சொன்னேன். அந்த உரையாடல் இதோ
தலைவர் : உன் பெயர் என்ன?
நான் : வைரமுத்து. வீட்ல வைரகுரு நு கூப்பிடுவாங்க
தலைவர் : வைரமுத்தா? அப்ப பாட்டு எல்லாம் எழுதுவியா?
நான் : இல்ல. பாடுவேன்
தலைவர் : எங்க ஒரு பாட்டு பாடு
நான் : பாளையம்கோட்டை சிறையினிலே
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே
அஞ்சாமல் இருந்தவர் யாரு
அந்த தலைவரின் புகழினை பாடு
தலைவர் மகிழ்ந்து என் முதுகில் தட்டிக் கொடுத்தார். 05.08.1986 அன்று தேதியிட்ட முரசொலியில் வெளியான நிதி அளித்தோர் பட்டியலில் எனது பெயர் (இரா. வைரகுரு) இடம் பெற்றது. அந்த நாளிதழை என் வாழ்வின் அரிய பொக்கிசமாய் போற்றி பாதுகாக்கிறேன்.
என் தாத்தா அ.இரா. குருசாமி, ஆசிரியர் (ப.நி) அவர்களுக்கும் தலைவர்
என் தந்தை குரு. இராமச்சந்திரன், ஆசிரியர் (ப.நி) அவர்களுக்கும் தலைவர்
எனக்கும் தலைவர்
என் மகள் வை.மு.கவின்மதி மற்றும் மகன் வை. மு. நற்குணநிதிக்கும் தலைவர்
அவர் தான் கலைஞர் !
பின் குறிப்பு : தலைவருடனான தனது முதல் சந்திப்பை பற்றி எழுதி என்னையும் எழுத தூண்டிய அண்ணன் சரவணகுமார் அவர்களுக்கு நன்றி...