ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி, அவர் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேறாது என நடிகர் பாக்யராஜ் கூறினார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் 11.04.2011 அன்று புலியகுளம், திருச்சி ரோடு எல்.ஜி.பி, மட்டசாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது, நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட்டு வைத்துக்கொண்டு படாதபாடுபடுகின்றனர். ஐந்தாண்டு காலம் அவரோடு இருந்து உழைத்த வைகோவை ஒரு நிமிடத்தில் தூக்கி வீசிவிட்டார். இதுபோன்ற நிலைதான் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் ஏற்படும்.
ஒரு கேப்டன் கடலில் வழிதவறி நீண்ட தூரம் நடுக்கடலுக்குள் சென்றுவிட்டான். அவனால் வெளியே திரும்பி வர முடியவில்லை. சாப்பிட உணவும் கிடைக்கவில்லை. பசி கோர தாண்டவம் ஆடியது. கப்பலில் இருந்தவர்கள் ஒருவரையொருவர் அடித்து கொன்று மனித மாமிசத்தை சாப்பிட தொடங்கினர். கேப்டனுக்கு பயம் வந்துவிட்டது. நம்மையும் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என பயந்து கப்பலின் மேல்தளத்துக்கு சென்றான். துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டு தற்கொலை செய்துகொள்கிறேன், அதன்பிறகு எனது மாமிசத்தை சாப்பிடுங்கள் என்றான்.
அப்போது ஒரு பெண் ஓடி வந்தார். அவர்தான் அந்த கூட்டத்துக்கு தலைவி. அவர் கேப்டன் கையில் இருந்து துப்பாக்கியை பிடுங்கினார். கேப்டனுக்கு சந்தோஷம். நல்லவேளை.. கடைசி நேரத்தில் நம் உயிரை காப்பாற்ற வந்துவிட்டாள் என நினைத்து சந்தோஷப்பட்டான். ஆனால், அந்த தலைவியோ இப்படி தற்கொலை செய்துகொண்டால் மூளை சிதறி விடும்.
பிறகு என்னால் மூளைக்கறியை சாப்பிட முடியாது. அதனால், நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்துகொள்ளுங்கள் என்றார். இதைக்கேட்டு கேப்டன் மிரண்டு போய்விட்டான். அந்த கேப்டனுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்த கேப்டனுக்கு மிக விரைவில் வரும்.
ஜெயலலிதா ஒரு சண்டைக்கோழி. இவரை நம்பி வாக்களித்தால் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் நிறைவேறாது. ஆனால், முதல்வர் கருணாநிதி எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை சுமூகமாக தீர்த்து, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவார். இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
எதிரணியினர் பொய் சொல்லி வாக்கு கேட்கின்றனர் - நடிகை குஷ்பூ :
எதிரணியினர் பொய் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர் என நடிகை குஷ்பு பேசினார்.
புதுச்சேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகை குஷ்பு 11.04.2011 அன்று வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது, நடிகை குஷ்பு பேசியதாவது:
புதுவையில் ஜானகிராமன் முதல்வராக இருந்தபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, சாதனை புரிந்தார். திமுகவை பொறுத்தவரை செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம். மேலும் என்னென்ன செய்ய முடியுமோ அதை மட்டும் சொல்லி ஆதரவு திரட்டி வருகிறோம். ஆனால் எதிரணியினர் பொய் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக அவர்களால் செய்ய முடியாததை எல்லாம் சொல்லி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
எதிரணியினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, நெல்லித்தோப்பு தொகுதி வளர்ச்சி பெற வரும் 13ம் தேதி ஜானகிராமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் டி.ஆர் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்த நடிகை குஷ்பூ, தொடர்ந்து முதலியார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் எம்ஏஎஸ் சுப்பிரமணியனையும், உப்பளத்தில் அனிபால் கென்னடியையும் ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர், உருளையன்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முத்தியால்பேட்டையில் நந்தா.சரவணனை ஆதரித்தும், உழவர்கரையில் ஜான்குமாரை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். நடிகை குஷ்பூ சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
No comments:
Post a Comment