கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

இலவசத் திட்டங்கள் எதிர்ப்போர் கவனத்திற்கு - சுப.வீரபாண்டியன்


பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பலவும், தமிழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கி வரும் இலவசத் திட்டங்களை மிகக் கடுமையாகத் தாக்கி வருகின்றன.

‘தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசங்களை எல்லாம் வழங்கவே முடியாது. இதெல்லாம் வெறும் ஏமாற்று’ என்று அன்று கூறியவர்கள், ‘இலவசங்களைக் கொடுத்துக் கொடுத்தே நாட்டைக் கெடுத்துவிட்டனர்’ என இன்று கூறுகின்றனர். ‘இலவசத் திட்டங்கள், நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டன’ என்று கண்ணில் நீர் வராமலேயே கதறி அழுகின்றனர்.

அடிப்படையில் ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

‘இலவசம்’ என்பது வெறும் அடையாளச் சொல் மட்டுமே ! ஓர் அரசு, மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் மூலமே அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுகின்றது. அந்தத் திட்டங்கள் யாருக்குப் பயன்படுகின்றன என்றுதான் பார்க்க வேண்டும். பணக்காரர்களி டமிருந்து பெறப்படும் வரியின் மூலம், ஏழை மக்களுக்கு நன்மை செய்வதையே இங்கு நாம் இலவசத் திட்டங்கள் என்று கூறுகின்றோம். இத்திட்டங்களுக்கான உரிய பெயர், ‘நல்வாழ்வுத் திட்டங்கள்’ என்பதே ஆகும். ஏழை, எளியவர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசுதானே, நல்லரசாக இருக்க முடியும்? நல்வாழ்வுத் திட்டங்களை, மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கும் திட்டங்கள் என்று கூறுவது, அரசை மட்டுமின்றி, மக்களையும் கொச்சைப்படுத்தும் கூற்றல்லவா?

தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசின் முன் வைக்கும் கடமையும், அவற்றைப் பெறும் உரிமையும் உடையவர்கள் மக்கள். உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களை, பிச்சைக்காரர்கள் என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை. இப்படியயல்லாம் தங்களை இழிவுபடுத்துகின்றவர்களுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?

கலைஞர் அரசின் திட்டங்களைக் கொச்சைப்படுத்தும் பலர், காமராசர் ஆட்சியில் வழங்கிய மதிய உணவுத் திட்டத்தை மட்டும் இன்றும் போற்றுகின்றனரே, அது எப்படி? நீதிக்கட்சியின் ஆட்சியில், சென்னை மாநகர மாணவர்களுக்கு மட்டும், மதிய உணவுத் திட்டம் ( Midday Meals ) என்னும் ஒரு நல்வாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டது. அதனை மனத்தில் கொண்டே, பிறகு முதலமைச்சராக ஆன பெருந்தலைவர் காமராசர், அத்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார். எம்.ஜி.ஆர். தன் ஆட்சிக் காலத்தில், அதனையே சத்துணவுத் திட்டமாக்கி ( Nutrition Meal ) மேலும் செழுமைப் படுத்தினார். கலைஞர் அரசு அதனைக் கட்டிக் காத்து வருவதுடன், அன்றாடம் முட்டையும் வழங்கி பிள்ளைகளின் நலத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

ஒரே திட்டத்தைக் காமராசரும், எம்.ஜி.ஆரும் செய்யும் போது, அது நல்வாழ்வுத் திட்டம், கலைஞர் நடைமுறைப்படுத்தினால், பிச்சைக்காரத் திட்டமா? பேசுகின்றவர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்பதைக் கேட்கும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? இப்படித் தொடர்ந்து பேசுவது, தங்களுக்கு வரக்கூடிய வாக்குகளையும் கெடுத்துவிடும் என்பது ஏன் எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை?

இத்தகைய நல்ல திடடங்களைப் பொதுவுடைமைக் கட்சியினரும் சேர்ந்து எதிர்ப்பதுதான், பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இங்கே இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள், கடந்த நிதிநிலை அறிக்கையில், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளதை ஏன் எதிர்க்கவில்லை? உத்தரகாண்ட் மாநிலத்திலும் கூட, ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய் என அறிவித்துள்ளனரே ! இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும், தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றன என்பதைத்தானே இது காட்டுகின்றது !

சரி, இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்... எதிர்க்கட்சிகளிடம் ஒரே ஒரு கேள்வி,

இலவசத் திட்டங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், வரும் தேர்தலுக்கான தங்கள் தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு புதிய இலவசத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும், நடைமுறையில் உள்ள திட்டங்களையும் உடனடியாக நீக்கி விடுவோம் என்றும் அறிவிக்கத் தயார்தானா?

அப்படிச் செய்தால் அவர்கள் நாணயமானவர்கள் என்று நாம் நம்பலாம். ஆனால் அங்கோ, இன்னும் பல புதிய இலவசத் திட்டங்களை எப்படி அறிவிக்கலாம் என்னும் ஆலோசனைதானே அவசரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

அதே நேரம், எவ்வளவு திட்டங்களை அவர்கள் அறிவித்தாலும், மக்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும். ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் சொல்வார், ஆனால் எதையும் செய்ய மாட்டார். கலைஞரோ, சொன்னதைச் செய்வார், சொல்லாததையும் செய்வார் என்பதை மக்கள் அறிந்தே இருக்கின்றனர்.

2001 இல் ஆட்சிக்கு வந்தவுடன் பல உறுதிமொழிகளை ஜெயலலிதா வழங்கினார். 2003ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்றார். திருமுல்லைவாயில் அருகே 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதொழில் பேட்டை அமைப்பேன் என்றார். தமிழகத்திலுள்ள 50 இலட்சம் ஏக்கர் தரிசு நிலத்தில் பழத்தோட்டப் பண்ணைகள் உருவாக்கப்படும் என்றார். பீடித்தொழிலாளர்களுக்கு வீடுகட்ட 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்றார். மீனவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரம் இலவச வீடுகள் என்று அறிவித்தார். எதுவும் நடைபெறவில்லை. திருமுல்லைவாயில் அருகே தொழில் பேட்டையை அல்லது தமிழ்நாட்டில் எங்கேனும் பழத்தோட்டப் பண்ணையைப் பார்த்தவர்கள் இருந்தால் உடனே தெரிவிக்கலாம்.

பாடத்திட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை நடத்தி முடித்துவிடும், நல்லாசிரியரைப் போல, 2006ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த அனைத்து வாக்குறுதிகளையும், 2009ஆம் ஆண்டிற்குள்ளாகவே செய்து முடித்தவர் கலைஞர் என்பதை மக்கள் நேரடியாகவே கண்டு உணர்ந்திருக்கின்றனரே. எனவே நல்வாழ்வுத் திட்டங்கள் மீண்டும் தொடர, ஏழை மக்களின் கான்கிரீட் வீட்டுக் கனவு நனவாக, வரும் தேர்தலிலும் தி.மு.க.விற்கே மக்கள் வாக்களிப்பார்கள்!

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

No comments:

Post a Comment