கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

வருகிறது தேர்தல் நீங்கள் எந்தப் பக்கம்? - சுப.வீரபாண்டியன்


ஐந்து ஆண்டு காலம் இவர்கள் ஆண்டு விட்டனர், இனி அடுத்த ஐந்து ஆண்டு காலம் அவர்கள் ஆளட்டுமே என்று சிலர் ‘கட்டப்பஞ்சாயத்து ’க் காண முயல்கின்றனர். மாறி மாறிக் கொடுப்பதற்கு ஆட்சி என்பது, விளையாட்டுப் பொம்மையன்று. அது ஒரு நாட்டின் உயிர்நாடி. மக்களின் வாழ்க்கைச் சிக்கல்.

2001ஆம் ஆண்டு, அந்த அம்மையாரிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, அல்லல்பட்ட தமிழினம் அதனை எப்படி எளிதில் மறக்கும் ?

தப்பித் தவறி மீண்டும் அந்த அம்மையார் ஆட்சி வருமானால், இன்றைய அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு விடாதா?

1996 ‡ 2001 இல், கலைஞர் அரசு நடைமுறைப்படுத்திய புதிய திட்டம் உழவர் சந்தை. ஆனால் 2001 இல் ஆட்சி மாறியதும் அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதை நாம் மறக்க முடியுமா? அத்திட்டத்தால் உழவர்களும் பயன் பெற்றனர். பொதுமக்களும் பயன் பெற்றனர். பிறகு ஏன் அத்திட்டம் கைவிடப்பட்டது? கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதைத் தவிர, அதைக் கைவிடுதவற்கு வேறு என்ன காரணம் ?

இன்று மீண்டும் புதிய பொலிவுடன் 117 உழவர் சந்தைகள் இயங்குகின்றன. மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆட்சி மாற்றத்தை உண்டாக்கி, 162 உழவர் சந்தைகளையும் நாம் இழக்க வேண்டுமா?

கரும்பு விவசாயிகளுக்குப் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.2000/‡ வழங்கப்படுகிறதே, இந்நிலை அரசு மாறினால் நீடிக்குமா?

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் 8.33% ஊக்க ஊதியம் ( போனஸ் ) மட்டுமே அன்றைய ஆட்சியில் வழங்கப்பட்டது. எவ்வளவோ கோரிக்கைகள் வைத்தும், எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், தன் நிலையை அந்த அரசு மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், தி.மு.கழக அரசு பொறுப்பு ஏற்றவுடன், தொழிலாளர்கள் கேட்காமலேயே, ஒவ்வொரு ஆண்டும் 20% ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறதே ! மீண்டும் 8.33% ஊக்க ஊதியம் போதும் என்று, அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் கருதுவார்களா?

பெண்களுக்காக இந்த அரசு எத்தனை நன்மைகளைச் செய்துள்ளது ! மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் மூலம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இன்று அத்தொகையைக் கலைஞர் அரசு, 25,000/‡ ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்த உதவி, திருமணத்தோடு நின்றுபோய் விடவில்லை. ஏழைப் பெண்கள் கருவுற்றால், அவர்களுக்கு ரூ.6000/‡ வீடு தேடி வருகிறதே. இந்த உண்மையை யாராவது மறுக்க முடியுமா?

இந்தியாவிலேயே, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கூடுதல் நிதி பெறும் மாநிலம் தமிழகம்தானே ! எத்தனை நிகழ்ச்சிகளில், நம்முடைய துணை முதல்வர், மேடையில் மணிக்கணக்கில் நின்றுகொண்டே அந்த உதவிகளை வழங்குகின்றார் என்பதை நாடு அன்றாடம் பார்க்கிறதே !

இத்தனை உதவிகளையும் இழப்பதற்குத் தமிழகப் பெண்கள் எப்படிச் சம்மதிப்பார்கள்? அதனால்தான், வாக்குச் சாவடிகளில் பெண்களின் நீண்ட வரிசை நிற்குமானால், தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று அரசியல் நோக்கர்கள் இன்று கருதுகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில், பெண்களின் வாக்குகள் மிகுதியாக அ.தி.மு.க.விற்குச் சென்றன என்பது உண்மைதான். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

அவ்வாறே, கால்நடைக் காப்பீட்டுத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டம் முதலான பல திட்டங்களால் கிராம மக்களின் மனநிலையும் மகிழ்ச்சியாக உள்ளது. கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் பற்றி மாநகர, நகர மக்கள் மிகுதியும் அறியாதிருக்கலாம். ஆனால் கிராமங்களில் அத்திட்டம் மக்களுக்குப் பேருதவியாக உள்ளது. ஆடு, மாடு, கோழி ஆகியனவற்றைத் தங்களின் செல்வமாக மட்டுமின்றி, தங்களில் ஒருவராகவே கருதும் சிற்றூர் மக்கள், அவற்றைக் காப்பாற்றும் திட்டத்தைப் போற்றி வரவேற்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், ஆடு, மாடுகளும் கூட அனாதைகள் ஆகிவிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்.

அன்றைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் எவ்வளவு அல்லலுக்கு உள்ளானார்கள் ! ஒரே ஒரு கையயழுத்தில், எந்த விசாரணையும் இல்லாமல், ஏறத்தாழ 12,000 அரசு ஊழியர்களின் வேலையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ள முயன்ற அரசன்றோ அது ! எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் எத்தனை ஆயிரம் பேர் கைதானார்கள் ! உடை மாற்றிக் கொள்ளக் கூட நேரம் தராமல், பெண்கள் பலரை இரவு உடைகளோடு, காவல்துறை வண்டிகளில் அள்ளிக் கொண்டல்லவா போனார்கள். அரசு ஊழியர்கள் என்ன கிரிமினல் குற்றவாளிகளா? அடுத்த நாள் காலையில் ஊரை விட்டே ஓடிவிடுவார்களா? இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?

இன்றை ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு அதுபோன்ற கெடுபிடிகள் ஏதும் இருப்பதாய் எவரேனும் கூற முடியுமா? இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ உதவி வழங்கும், புதிய மருந்துக் காப்பீட்டுத் திட்டம் அல்லவா இன்று அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கண்ணியமான இவ்வாழ்க்கை முறை தொடர வேண்டுமானால், தி.மு.க. ஆட்சியும் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள்.

சுருக்கமாகச் சொன்னால், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர்கள், ஏழை மக்கள், கலைத்துறையினர் என எந்தப் பிரிவினரை எடுத்துக் கொண்டாலும், கலைஞர் ஆட்சியில் பயன் பெறாத பிரிவினரே கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் பாதிக்கப்படாத பிரிவினரே கிடையாது.

மீண்டும் நமக்குப் பயன்பாடுகள் வேண்டுமா, பாதிப்புகள் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்வதற்கான ‘ நமக்கு நாமே ’ திட்டம்தான் வருகின்ற தேர்தல். உணர்ச்சி வயப்பட்ட சொற்பொழிவுகளைக் கேட்டோ, பொய்யான பரப்புரைகளை நம்பியோ, ஒரு நாளில் நாம் எடுக்கும் தவறான முடிவு, ஐந்து ஆண்டுகளுக்கு நம்மைப் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் !

தேர்தல் நாளன்று, உங்கள் முன் வைக்கப்படும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்... உங்களுக்கு எது தேவை, கலைஞர் தலைமையிலான தி.மு.க.ஆட்சியா? ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.ஆட்சியா? நல்லாட்சி தொடரவேண்டுமா? கொடுங்கோலாட்சி கோலோச்ச வேண்டுமா? உங்களுக்காகவும், நாட்டுக்காகவும் நல்ல விடையைச் சொல்லுங்கள்

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்


No comments:

Post a Comment