எதிர்க்கட்சி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் உள்நோக்கத்தோடு போராட்டம் நடத்துகின்றன என்று முதல் வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (27.01.2011) வெளியிட்ட கேள்வி பதில்கள் வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும் போது, இலவசங்கள் என்ற பெயரில் ரூ. 91 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதற்கு ரூ. 14 ஆயிரம் கோடி வட்டி கட்டி வரும் தி.மு.க. அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009&2010ம் ஆண்டு இறுதியில் ரூ. 89,149 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மட்டும்தான் கடன்களை வைத்துள்ளதா? 31&3&2010ல் நம்முடைய அண்டை மாநிலங்கள் எவ்வளவு கடன் வைத்துள்ளன என்று பார்த்தால், மராட்டிய மாநிலம் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடி கடனையும் ஆந்திரப் பிரதேச மாநிலம் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடி கடனையும் கர்நாடக மாநிலம் ரூ. 79 ஆயிரத்து 644 கோடி கடனையும் மிகச் சிறிய மாநிலமான கேரளா ரூ. 70 ஆயிரத்து 761 கோடி கடனையும், ஏன் இந்தியா ரூ. 35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடி கடன்களையும் வைத்துள்ளன.
தனி நபர் கடன் என்று எடுத்துக் கொண்டால் தென்னக மாநிலங்களிலேயே ஏன் கேரளாவை விடக் குறைவாகத்தான் தமிழ்நாடு உள்ளது. புள்ளி விவரங்களோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருக்குச் சொல்ல வேண் டுமேயானால் மராட்டிய மாநிலத்தில் தனி நபர் கடன் ரூ. 18 ஆயிரத்து 576, ஆந்திரப்பிரதேசத்தில் தனி நபர் கடன் ரூ. 14 ஆயிரத்து 494, கர்நாடக மாநிலத்தில் தனி நபர் கடன் ரூ. 15 ஆயிரத்து 103 கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவில் தனி நபர் கடன் ரூ. 21 ஆயிரத்து 991, தமிழ்நாட்டில் இந்த மாநிலங்களையெல்லாம் விட குறைவாக ரூ. 14 ஆயிரத்து 353 தான்.
எனவே இலவசங்களைக் கொடுப்பதால் தான் தமிழ்நாட்டில் ரூ. 91 ஆயிரம் கோடி கடன் என்பது எவ்வளவு தவறான வாதம் என்பது தெளிவாகிறதா இல்லையா?
மார்க்சிஸ்ட்கள் ஆளும் கேரளாவில் 2009&2010ம் ஆண்டு நிலவரப்படி மொத்தக் கடன் ரூ 70 ஆயிரத்து 761 கோடியாகும். இது அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 31.62 சதவீதமாகும். தி.மு.க. அரசு 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இலவசங்களை வழங்கியதால் தான் தா. பாண்டியன் கூறியிருப்பதைப் போல ரூ. 91 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு கடன் வந்து விட்டதா?
2001&2002ம் ஆண்டில் எனது தலைமையிலான அரசு விட்டுச் சென்ற கடன் ரூ. 32 ஆயிரம் கோடி. அந்தக் கடன் 2005&2006ம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க. ஆட்சி பதவியில் இருந்து நீங்குகின்ற காலக் கட்டத்தில் ரூ. 57 ஆயிரத்து 457 கோடியாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் எல்லாம் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று திரும்பியிருக்கிறாரே?
தமிழகத்திலே இதுவரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டு பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். உதாரணமாக 1991 & 96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்.
2001 & 2011 வரை 17 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் எந்த ஒரு மீனவர் கொல்லப்பட்டு இறந்ததற்காகவாவது ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம், புகைவண்டியிலோ காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுண்டா? அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்திற்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா, வேஷமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழக அரசை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்களே?
அந்தத் தீர்மானத்தின் இறுதியில் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு காண முடிவு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முடி வினை செயல்படுத்த வேண்டுமென்றால் தி.மு.க. அரசைத் தாக்கித்தானே தீர்மானம் எழுத வேண்டும்.
பட்டினிச் சாவுகள் தமிழகத்திலே இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அரசின் சார்பில் இந்த ஆண்டு ரூ. 4000 கோடி அளவிற்கு மானியமாகக் கொடுத்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்றவற்றுடன் பத்து மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் தரப்படுகிறது. துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகிய இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூ. 40 என்ற அளவில் விற்கப்பட்டு வந்ததற்கு மாறாக, கிலோ ஒன்றுக்கு ரூ.30க்கு வழங்கப்படும் என்றும்
ஒரு லிட்டர் பாமாயில் ரூ. 30 என்று விற்றதற்கு மாறாக, ரூ. 25க்கே வழங்கப்படும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், விலைவாசி உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை பாமர மக்கள் நன்றாகவே உணருவார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப் பட்ட இலவச நிலம் வழங்கும் திட்டம், வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு போன்ற திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டு விட்டன என்று சொல்லியிருக்கிறார்களே?
தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாற்ற அவர்களுக்கு வேறு காரணங்கள் கிடைக்காததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 796 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைப் பட்டாக்கள் 7 லட்சத்து 74 ஆயிரத்து 386 ஏழைக் குடும்பங்களுக்குத் தரப்பட் டுள்ளது. படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 4 லட்சத்து ஆயிரத்து 704 இளைஞர்களுக்கு ரூ. 284 கோடி உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு அரசுத் துறைகளில் மட்டும் 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதெல்லாம் திட்டங்களை கிடப்பிலே போடப்பட்டதற்கான அடையாளமா என்பதை மார்க்சிஸ்ட் தோழர்கள்தான் கூற வேண்டும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டு, தொழிலாளர்கள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒருசிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்களே?
எந்தச் சங்கத்தை அழைத்து அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதற்கான தேர்தல் தொழிலாளர்களிடையே நடைபெற்று, தி.மு.க. சார்புடைய தொ.மு.ச. மகத்தான வெற்றிபெற்றது. பேச்சுவார்த்தையும் நடைபெற்று, முதலில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மீது வெறுப்பு கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய சங்கமும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வரும்போது அவர்களை தடுப்பதும் என்பதுமான வன்முறை நடவடிக்கைகளிலே ஈடுபட்டுள்ளார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக என்னென்ன புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது அரசின் சார்பாக விளம்பரமாகத் தரப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் எதிர்க்கட்சிகளின் சார்புடைய சங்கங்கள் போராட்டம் நடத்துவது எந்த அளவிற்கு உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்பதை தொழிலாளர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.