சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்கள் தந்த திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக, நெல்லையில் கிறிஸ்தவ பிஷப்புகள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
இந்திய சமூக நீதி இயக்க தலைவரும், இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்ரா சற்குணம் நெல்லை சிஎஸ்ஐ பிஷப் பங்களாவில் 09.04.2011 அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சட்டமன்ற தேர்தலில் உறுதியாக திமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம். ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. இன்னும் பல திட்டங்களை அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோர் போராட வேண்டிய நிலை இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படிப்பட்ட நிலை இல்லை. வரும் காலத்திலும் திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறோம்.
இவ்வாறு எஸ்றா சற்குணம் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப் கிறிஸ்துதாஸ் கூறுகையில், “நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலில் சிறுபான்மையினர், குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் அதிகம் உள்ளனர்.
சிறுபான்மையின மக்களுக்கு திமுக அரசு நல்ல உதவிகளையும், பாதுகாப்பையும் அளித்து ஆதரவளித்தது. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் திமுக கூட்டணிக்கு முழுஆதரவையும், ஆசியையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் பங்கு போதகர்கள், திருமண்டல நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது நிலைப்பாட்டினை இடஒதுக்கீட்டை மையப்படுத்தியே எடுத்து வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்த திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம்.
இந்த சட்டமன்ற தேர்தலில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்திருந்தோம். திமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி தர பரிசீலனை செய்யப்படும் என கூறப்பட்டது. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment