பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தன்னிச்சையாக கூறியிருக்கிறார்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிந்தன. அதற்கு பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிந்தன. பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 23ம் தேதியில் இருந்தே தொடங்கி விட்டது. இடையில் தேர்தல் பணிக்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் சென்று வந்தனர். மேலும், ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலை முன்னிட்டு விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து, முடிவுக்கு வந்தது. இப்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா, 23.04.2011 அன்று சென்னை கன்னிமரா நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அவர் தெரிவித்த தேதிகள் சரியானதுதானா? என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு, “பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் நடக்கின்றன. விரைவில், டேட்டா சென்டருக்கு அனுப்புவோம். அவர்கள்தான் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பார்கள். மேலும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் முழுமை பெற்ற பிறகு தான் தேர்வு முடிவு வெளியிடும் தேதி முடிவு செய்யப்படும்” என்றார்.
பள்ளிக்கல்வி செயலாளர் கூறியது, தேர்வுத் துறை இயக்குநர் கூறியது ஆகியவை மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், தேர்வுத் துறைதான் அனைத்து பணிகளையும் செய்யும். பணிகள் முடிந்துவிட்டது என்று அரசுக்கு தெரிவித்த பிறகுதான், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி இறுதி செய்யப்படும். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா முன்கூட்டியே தேதியை வெளியிட்டது, தேர்வுத் துறை பணியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் செயலாளர் சபீதா கூறியது, தேர்வுத் துறை அதிகாரிகள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம்தென்னரசு இந்த பிரச்னை குறித்து கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்ததாக செய்தித்தாள் மற்றும் டிவிகளில் செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வுத் துறைக்கு சென்று, பின்னர் ‘டேட்டா சென்டருக்கு’ செல்லும். அங்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கும். அதற்கு பிறகு தேர்வுத் துறை பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு தெரிவித்து, செயலாளர் அமைச்சருக்கு தெரிவிப்பார். பின்னர், அந்த தகவல் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். முதல்வர்தான் தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அறிவிப்பார். இதுதான் நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார். இது, அவரின் சொந்த கருத்து. தன்னிச்சையாக வெளியிட்டுள்ளார். இதுபோன்ற கொள்கை முடிவுகளை வெளியிடும் போது அமைச்சர் மற்றும் முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே வெளியிட வேண்டும். அதனால் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி முதல்வருடன் ஆலோசித்து பின்னர் வெளியிடப்படும். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் சம்மந்தம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment