கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

நடுநிலை வேடத்தைக் கலைத்து விடுங்கள்! - சுப.வீரபாண்டியன்


தினமணி (23.03.2011) நடுப்பக்கத்தில், ‘சந்தர்ப்பவாதத்திற்குச் சாவுமணி அடியுங்கள்’ என்னும் தலைப்பில் ஐயா நெடுமாறன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றார். தேர்தல் கூட்டணிகள் பற்றிய ஒரு விமர்சனமாக அது அமைந்திருக்கிறது. ஊருக்கு உபதேசம் செய்வது எப்போதும் எளிதானதுதான்.

“1967ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ, தி.மு.க.வுக்குக் கிடையாது. 1972ஆம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. வும் தனித்துப் போட்டியிடத் துணியவில்லை. கூட்டணிக் கட்சிகளின் தோள் மீது ஏறி, இரு கழகங்களும் தங்களை உயரமாகக் காட்ட முற்படுகின்றனவே தவிர, தனித்து நின்று தங்களின் குள்ள உருவத்தை அம்பலப்படுத்திக் கொள்ள முன் வரவில்லை” என்று அந்தக் கட்டுரையின் முற்பகுதி சொல்கிறது.

இந்திய தேசியக் காங்கிரசை விட்டு வெளியில் வந்த பிறகு, ஐயா நெடுமாறன் தனிக்கட்சி தொடங்கினார். அதற்குத் ‘தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்’ என்று பெயர். ஏறத்தாழப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1980களின் பிற்பகுதியில் அக்கட்சி பெயர் மாற்றம் பெற்றது. அன்று தமிழகத்தில் இயங்கிக்கொண்டு இருந்த பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழின உணர்வாளர்களும் அதில் தங்களை இணைத்துக் கொண்டனர். ‘ தமிழர் தேசிய இயக்கம் ’ என்று அக் கட்சிக்குப் பெயர் சூட்டப் பட்டது.

தமழ்நாடு காமராஜ் காங்கிரஸ், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய இரண்டு கட்சிகளுமே தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றன. ஐயா நெடுமாறன் அவர்களும் தேர்தல் களத்தில் நின்று வெற்றி, தோல்விகளைச் சந்தித்திருக்கின்றார்.

தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் கூட்டணி சேராமல் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ கிடையாது என்று எழுதும் நெடுமாறன் அவர்கள், பல தேர்தல்களில் தனித்துப் போட்டி யிட்டதில்லை. கூட்டணியில் சேர்ந்துதான் போட்டியிட்டார். தனித்துப் போட்டியிடும் வலிமையும், துணிவும் அவருக்கும் ஏன் இல்லாமல் போயிற்று என்று நமக்குத் தெரிய வில்லை. கூட்டணிக் கட்சிகளின் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாகக் காட்டிக் கொண்டி ருக்காமல் தனித்து நின்று தன் கட்சியின் உண்மையான உயரத்தை அன்றே அவர் உலகுக்குக் காட்டியிருக்கலாம்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோடு கூட்டுச் சேர்வது சந்தர்ப்பவாதம் என்றும், அந்தச் சந்தர்ப்ப வாதத்திற்குச் சாவு மணி அடிக்க வேண்டுமென்றும் அவர் விரும்பு கின்றார். நல்ல விருப்பம் தான். ஆனால் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் 1980ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும், 1984ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தது என்பதை ஐயா அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிறகு ஒரு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியோடும் கூட்டணி அமைந்தது. இப்படி மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பவாதம் என்று பெயரில்லையயன்றால், வேறு என்ன பெயர் என்பதை ஐயா அவர்கள்தான் விளக்க வேண்டும்.

அதே கட்டுரையில், பொதுவுடைமைக் கட்சி பற்றியும் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. “இரு கம்யூனிஸ்ட் கடசிகளின் தலைவர்களும் தொண்டர்களும், தியாகம், தொண்டு, துன்பம் ஆகியனவற்றைத் தங்கள் தாரக மந்திரமாகக் கொண்டவர்கள். மக்கள் தொண்டுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்” என்று ஐயா அவர்கள் எழுதுகிறார்கள். அன்றைய ஜீவா தொடங்கி இன்றைய நல்லுகண்ணு ஐயா வரையில் அத்தகைய தியாக வேங்கைள் பொதுவுடைமைக் கட்சியில் இருந்துள்ளனர் ; இருந்து வருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதே நேரத்தில் அக்கட்சியில் உள்ள அனைவருமே தியாக சீலர்கள் என்று அவசரப் பட்டுப் பொதுமைப்படுத்தி விடவும் முடியாது. போயஸ் தோட்டத்தில் பெற்றுக் கொண்டவைகளுக்கு ஏற்ப, நன்றி விசுவாசத்தோடு நாளும் செயல்படும் சில தலைவர்களும், இன்று இருக் கத்தான் செய்கிறார்கள் என்பதை உலகம் அறியும்.

நெடுமாறன் அவர்கள் பொதுவுடைமை இயக்கத்தினரைப் பாராட்டுவதே, திராவிட இயக்கத்தை, குறிப்பாகக் கலைஞரை கொச்சைப் படுத்துவதற்காகத்தான். அதனால்தான், “கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வரும் கம்யூனிஸ்டுகளை, கொள்கையற்ற கோமாளிகள் அவமானப் படுத்துகிறார்கள்” என்று அவர் எழுதுகின்றார்.

பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, எந்த ஒரு கட்சியின் தலைவரையும் கலைஞர் தன் வீட்டில் காக்க வைத்தார், அவமானப்படுத்தினார் என்று எவரும் சொல்லிவிட முடியாது. ஐயா நல்லக்கண்ணு அவர்களைப் பற்றி ‘ வயதில் எனக்குத் தம்பி என்றாலும், தியாகத்தில் எனக்கு அண்ணன் ’ என்று சொல்லிப் பாராட்டியவர் தலைவர் கலைஞர். அகந்தையும், ஆணவமும் குறையாத ஜெயலலிதா அம்மையார்தான் எல்லாக் கட்சித் தலைவர்களையும் அவமானப்படுத்தி இருக்கி றார். இப்போதும் அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவை நேரடியாகக் குறைசொல்ல எப்போதும் மனம் வருவதில்லை ஐயா நெடுமாறன் அவர்களுக்கு ! எனவே இரண்டு கழகங்களும்... என்று எப்போதும் சேர்த்துச் சேர்த்துச் சொல்லி, சமமற்றவர்களைச் சமமாக்கிக் காட்டும் முயற்சியில் அவர் நெடுநாள்களாகவே ஈடுபட்டு வருகிறார்.

சரி, யார் அவமானப்படுத்தினாலும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் அவமா னப்படத் தயாராக இருக்கிறார்களே அது ஏன் என்று யாரும் கேட்பதில்லை. தேர்தல் நேரத்தில், ஐந்து சீட்டுக்கும், பத்து சீட்டுக்கும் அலைந்து அலைந்து அவமானப்பட அவர்களே அணியமாக இருக்கும்போது, அவர்களை யார் காப்பாற்ற முடியும்? இரண்டு கழகங்களும் கொள்கையற்ற கோமாளிகள் என்றால் , இந்தக் கொள்கைக் கோமான்கள் ஏன் அவர்களின் பின்னால் அலைகிறார்கள்?

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைக் கூட நாம் எண்ணிப் பார்க்கலாம். கூட்டணிக் கட்சியினர் எவரையும் கலந்து கொள்ளாமல், தன் கட்சி போட்டியிடும் இடங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை ஜெயலலிதா அறிவித்தார். உடனே பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொங்கி எழுந்தன. மூன்றாவது அணி அமைக்க முயற்சித்தன. திடீரென்று, நெடுநாட்களுக்குப் பிறகு, மான உணர்ச்சியால் அவர்கள் வெகுண்டு எழுந்ததை நாம் வெகுவாகப் பாராட்டத்தான் வேண்டும்.

மூன்றாவது அணி அமைக்கும் பேச்சு வார்த்தை எங்கே நடந்தது? இந்தியாவில் ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் அரசியல் வரலாற்றைக் கொண்ட நம் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள், கோபம் கொண்டு எழுந்து, கோயம்பேட்டுக்கல்லவா ஓடினார்கள்! கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் கூட ஆகாத நடிகர் விஜயகாந்தைக் கூட்டணிக்குத் தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களே, இதைக் காட்டிலும, செங்கொடி ஏந்திய தோழர்களுக்கு வேறு என்ன அவமானத்தை அவர்கள் தேடித்தர முடியும்? தேர்தலில் பத்து, பனிரெண்டு இடங்கள் கிடைக்குமென்றால், கோபாலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கு மட்டுமின்றி, கோயம்பேட்டிற்கும் காவடி எடுக்கத் தயார் என்று அவர்களே அறிவித்தபின், ஐயா நெடுமாறன் அவர்கள் கவலைப்பட்டு என்னவாகப் போகிறது?

ஒரே ஒரு வேண்டுகோள்... ஐயா நெடுமாறன் அவர்கள் தன் நடுநிலை வேடத்தைக் கலைத்துவிட்டு, நேரடியாகவே ஜெயலலிதாவை ஆதரிப்பது நேர்மையான செயலாக இருக்கும். தினமணி வைத்தியநாதய்யருக்கும் அது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

No comments:

Post a Comment