கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 23, 2010

சேது சமுத்திர திட்டத்திற்கான எல்லை மீறும்போது, நம் போர்க்குணத்தை காட்ட நேரிடும்: கலைஞர்


சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதி,

இங்கே நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நாட்டிலே நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டி, பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்ற வகையிலே விவாதிக்கப்பட்டு மத்திய அரசுக்கும் மத்திய அரசிலே உள்ள முக்கியமான தலைவர்களுக்கும் அந்தத் தீர்மானங்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றில் மத்திய அரசு முன்வந்து நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களும், மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டிய தீர்மானங்களும் இருக்கின்றன.

இதிலே முக்கியமாக, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். உச்சநீதிமன்றம் அறிவித்த குழுவை ஏற்றுக் கொள்வோம் என்று கருதிய சில நண்பர்கள் நாம் சறுக்கி விழ மாட்டோமா என்று காத்துக் கொண்டிருக்கின்ற நண்பர்கள் ஏமாந்து போகின்ற அளவிற்கு நாம் உறுதியாக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம்.

ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்து, அவர்கள் அந்த அணையைப் பரிசோதித்துச் சொல்லட்டும் என்கிறார்கள் உச்சநீதிமன்றத்தார். அதை உடனடியாக கேரள அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய அரசு ஏற்கவில்லை. அந்த முடிவுதான் "நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுக்கவில்லை. ஆனால் இதில் ஐந்து பேர் கொண்ட குழுவை எங்களால் ஏற்க இயலாது'' என்று சொல்லியிருக்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு நாங்கள் விரோதிகள் அல்ல. ஆனால், ஐந்து பேர் கொண்ட குழு தேவையில்லை, அதை ஏற்க முடியாதென்று சொல்லி அந்தக் குழுவில் நாங்கள் பங்கு பெறமாட்டோம்.

இன்றைய அரசியல் சூழ்நிலை நாம் ஒரு தெளிவான முடிவை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க இயலாத நிலை. நம்மை நாமேதான் வலுப்படுத்திக் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். கடைசி வரையில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அதை நடைமுறைப்படுத்துவது என்ற வகையில், நம்மீது எந்தக் குற்றமும் இல்லை, நாம் நியாயமாகத்தான் நடந்தோம் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்ற வகையில், நாம் நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தான், நாங்கள் எங்களால் இந்த ஐவர் குழுவை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் தெற்குப் பகுதியில் இருக்கின்ற மாநிலங்கள். இந்தத் தென் திசையிலே நாம் ஒற்றுமையாக இருந்து, நம்முடைய மாநிலங்களெல்லாம் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் கருத்துக்களையும், வளங்களையும் பகிர்ந்துகொண்டு வாழ்ந்தால்தான் இந்தியா வாழ முடியும்.

உதாரணமாக, திருவள்ளுவர் சிலை விவகாரத்தில், நாமும், கர்நாடக மாநிலமும் கடைசியாக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி நடந்து கொண்டோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால், அதையே நாம் தொடர்ச்சியாகப் பின்பற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். அந்த வகையிலே, கேரளத்தோடும் நம்முடைய தொடர்பு உருவாக வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை. இந்தியாவினுடைய ஒருமைப்பாடு, ஒற்றுமை, இவற்றை நாம் ஏதோ சீர்குலைத்தோம் என்று தி.மு.க., திராவிட நாடு கேட்ட காலத்திலே விமர்சிக்கப்பட்டது உண்டு.

ஆனால், இந்தியாவினுடைய ஒருமைப்பாட்டை இப்போது சீர்குலைப்பது யார்? ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது யார் என்பது இந்த நதிநீர்ப் பிரச்சினையிலே மிகத் தெளிவாகத் தெரிகிற காரணத்தால் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கு விரோதிகள், ஒருமைப்பாட்டிற்கு விரோதிகள் நாம் அல்ல. நதி நீர்ப் பிரச்சினையிலே தமிழகத்திற்கு யார், யார் துரோகம் செய்ய எண்ணுகிறார்களோ, தமிழகத்து மக்களை யார், யார் பட்டினி போட நினைக்கிறார்களோ, அவர்கள்தான் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உலை வைப்பவர்கள் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்த, இன்றில்லாவிட்டாலும், நாளை நாளை இல்லாவிட்டாலும், நாளை மறுநாள் ஒரு காலம் வரும். அதுவரையில் நாம் பொறுமையாக இருந்து அப்படிப் பொறுமையாக இருக்கிற நேரத்திலும் சட்டரீதியாக நம்முடைய வாதங்களை எடுத்து வைத்து நம்முடைய உரிமைகளைப் பெற நாமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நம்மோடு இன்றைக்குத் தோழமை கொண்டு, இயங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய அரசும் நம் நிலையை உணர்ந்து நமக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். அப்படி நேசக்கரம் நீட்டுவது, அந்தக் கரத்தை நாம் பிடிப்பது தேர்தலுக்காக அல்ல. இந்த மாநிலமும், இதை ஒட்டி இருக்கின்ற மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக மாத்திரமல்ல. காவேரி பிரச்சினைக்காக, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக இந்த இரண்டு ஆறுகளின் பிரச்சினைக்காக மாத்திரமல்ல, இந்தக் கைகுலுக்கல். ஒட்டுமொத்த இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமைக்காக என்பதை மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும், மத்தியிலே இருப்பவர்களும் உணர வேண்டும், உணர்வார்கள் என்று நம்புகிறேன்.


சேது சமுத்திரம் திட்டத்திற்கு 2400 கோடி ரூபாயில் திட்டமிட்டது உண்மை. சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும், நானும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்திலேதான் அடிக்கல் நாட்டு விழா நடத்தி வைக்கப்பட்டது. அது வளர்ந்து பெரிய அளவிற்கு வளம்தரும் திட்டமாகவும், தமிழகத்தை எதிர்காலத்திலே வாழவைக்கும் திட்டமாகவும் அமைந்து விடுமேயானால், அந்தப் பேரும் புகழும் தி.மு.கழகத்திற்கு வந்து விடுமே என்ற கவலையாலும் யார் யார் அந்தத் திட்டம் வர வேண்டுமென்று முதலிலே சொன்னார்களோ நான்தான் முதலிலே சொன்னேன் என்று மார் தட்டினார்களோ அவர்கள் எல்லாம் கூட அம்மையாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்தத் திட்டம் தேவையில்லை என்று சொல்கின்ற நிலைமை ஏற்பட்டு, அந்தத் திட்டத்தை கிடப்பிலே போடுகின்ற ஒரு சூழ்நிலை அதுவும் உச்சநீதிமன்றம் வரையிலே சென்றுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்திற்காக இன்னும் பொறுமை காப்போம் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.


அந்தத் திட்டத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவோம். மத்தியிலே இருக்கின்ற அரசு தமிழகத்தின் தேவைகளை புறக்கணித்து விடுகின்ற அரசல்ல. அவர்களுக்கும் சேது சமுத்திரத் திட்டத்திலே ஒரு சங்கடம். அங்கே ராமரைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சற்றுத் தயங்குகிறார்கள். அந்தத் தயக்கத்திற்குக் காரணத்தை நம்மிடமும் தெரிவிக்கிறார்கள். நாமும் அவர்களுடைய தர்ம சங்கடத்திற்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இவைகள் எல்லாம் ஒரு காலக்கட்டத்திற்குத்தான். எல்லை மீறி விடுமேயானால், அப்படி மீறுகிற நேரத்தில் நாம் நம்முடைய வீரத்தை, நம்முடைய போர்க் குணத்தை, நம்முடைய உரிமைக் குரலை அந்த நேரத்திலே காட்டத்தான் போகிறோம். அப்போது நாம் வாளாயிருக்கப் போவதில்லை.

எனக்குப் புரிகிறது கொஞ்சம் உசுப்பி விட்டாலே எந்த அளவிற்கு ஆர்வத்தோடு செயல்படுவீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் போர்க் குணம் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு அழிந்து விடவில்லை. இன்னமும் அதன் சாரல் இருக்கிறது. அதனுடைய காரம் இருக்கிறது. அதனுடைய வேகம் இன்னமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்த உறுதியை, வேகத்தை, காரத்தை, சாரலை இழந்து விடாமல் அதை வைத்தே மேலும் மேலும் உங்களையெல்லாம் உணர்ச்சிப் பிம்பங்களாக ஆக்க வெகு நேரம் ஆகாது. இரண்டொரு கூட்டங்கள் தஞ்சையிலும், நாகையிலும், காவேரிப் பூம்பட்டினத்திலும், தூத்துக்குடியிலும், நெல்லையிலும், சென்னையிலும் பேசினாலே மீண்டும் அந்த உணர்வை ஏற்படுத்த முடியும்.

அப்படி எழுப்புகின்ற உணர்வு நானும் பேராசிரியரும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்து வழி நடத்துகின்ற கட்சிக்குத் தேவை. இப்போது கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கின்ற ஆளுங்கட்சியாக அல்லவா நாமிருக்கிறோம்? ஆளுங்கட்சியாக இருக்கின்ற காரணத்தால் தானே, ஸ்டாலின் படித்த 29 தீர்மானங்களில் 24 தீர்மானங்கள் நம்முடைய சாதனைப் பட்டியல்களாக இருந்தது. இந்தச் சாதனைப் பட்டியல்களை உருவாக்க தி.மு.க. ஆளுங்கட்சியாக இருப்பதுதான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் ஆளுங்கட்சியாகவும் இருக்க வேண்டும் சாதனைகளும் புரிய வேண்டும். அதே நேரத்தில் நமக்கு ஏற்படுகின்ற வேதனைகளையும் தாங்க வேண்டும் அதற்குரிய சோதனைகளையும் எதிர்த்தாக வேண்டும். அவைகளையும் நாம் தாண்டியாக வேண்டும். எனவே எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரே குறிக்கோள்தான் நமக்கு. எதிரி கண்ணுக்குத் தெரிவான். ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரே குறிக்கோள் நாட்டை வாழவைக்க வேண்டும், மக்களை வாழ வைக்க வேண்டும் என்றிருந்தா லுங்கூட, அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுகின்ற நேரத்தில் பலமுனை தாக்குதலை நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

ஆளுங்கட்சிக்குரிய அந்தத் தந்திரத்தை சில நேரங்களில் நாம் கையாள வேண்டியிருக்கிறது. அந்தச் சில நேரம் எது, எந்த நேரம் என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அந்த நேரத்தை ஒதுக்குகிற குறிக்கிற அந்த வாய்ப்பை எங்களுக்கு விட்டுவிடுங்கள். அந்த வாய்ப்பை நாங்கள் புரிந்து கொண்டு குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கும் அதைத் தெரிவித்து நாங்கள் தனியாக அல்ல நீங்கள் இல்லாமல் நாங்கள் தனியாக இயங்க முடியாது.

அனைவரும் சேர்ந்து இந்தத் தமிழ் நிலத்திலே இன்றைக்கு இருக்கின்ற சிக்கல்களையெல்லாம் போக்கி சட்டரீதியாக நமக்குக் காட்டப்படுகின்ற எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து காவேரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாம்பாறு பிரச்சினை இப்படி வருகின்ற இத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு என்ன? நாம் இத்தனை பிரச்சினைகளையும் இன்றைக்குச் சந்திக்க வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், எல்லா வளங்களும் இருந்தாலுங்கூட, நீர் வளம் மிகமிகக் குறைவு. அந்த நீர் வளத்தைப் பெற்றிருக்கின்ற மாநிலங்கள் நம்மைச் சுற்றியிருக்கின்றன.

அந்த மாநிலங்கள் ஏதோ பரந்த மனத்தோடு காவேரியில் தண்ணீரா, இந்தா எடுத்துக் கொள் முல்லைப் பெரியாறு அணையா, இந்தா பயன்படுத்திக் கொள் என்று சொல்கின்ற அளவிற்கு நம்மைச் சுற்றியிருக்கின்ற மாநிலங்கள் இல்லை. நாமேதான் சட்டரீதியாக போரிட்டாலும், அல்லது சர்க்கார் ரீதியாக போரிட்டாலும், வாதிட்டாலும் அவைகளையெல்லாம், அந்தக் கடமைகளையெல்லாம் ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது நம் தலையிலேதான் அந்தப் பாரம் எல்லாம் விழுந்திருக்கிறது. ஆகவே, அந்தப் பாரத்தைத் தூக்கிச் சுமக்கின்ற அந்தப் பணிகளை எங்களுக்காக மட்டுமே என்று எண்ணாமல், அத்தனை பேரும் பகிர்ந்து கொண்டு வெற்றியினைப் பெறவேண்டும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்ற நாம் அடுத்து ஒரு வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுதான் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வெற்றி.

விரைவில் சென்னை மாநகரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் கலந்து கொண்டு நடைபெறவிருக்கின்ற சட்டமன்றப் பேரவையின் தொடக்க விழா நடைபெற விருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் நான் நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணிய லட்சியங்களிலே அதுவும் ஒன்று. அது நிறைவேறப்போகிறது. அதைப்போலவே, மற்றொரு லட்சியமாக கோவையில் நடைபெறவிருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

சென்னையில் 13ம் தேதி அதற்குப் பிறகு ஜுனில் கோவையில் தமிழ்த் திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்தத் திருவிழாக்கள் எல்லாம் சிறப்புற அமைய உங்களுடைய அன்பான ஆதரவு தேவை என்று பேசினார்.