ஆர்.டி.ஓ, தாசில்தார் புகாருக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், தேர்தலில் தி.மு.க அணிக்கு எதிராக செயல்படும் மதுரை கலெக்டர், எஸ்.பி. மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரையில் 05.04.2011 அன்று நிருபர்களிடம், மத்திய அமைச்சர் அழகிரி கூறியதாவது:
தேர்தலில் தி.மு.க அணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. என் மீது பொய் வழக்கு போடச் சொல்லி மதுரை கலெக்டர் நிர்ப்பந்தம் செய்தார் என ஆர்.டி.ஓ சுகுமாறன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இதன் பிறகு மேலூர் தாசில்தார் காளிமுத்தும் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், என் மீது வழக்கு தொடர கலெக்டர் சொன்னபடி பொய் புகார் அளித்தேன் என ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையெல்லாம் ஆதாரம் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் தேர்தல் ஆணையத்துக்கு எழுதினேன். ஆணையம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதால் கலெக்டர், எஸ்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆணையத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே கலெக்டர் சகாயம், எஸ்.பி. மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இதில் நல்லமுடிவு காண்பேன்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. அணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கும் நான் சென்று வந்தேன். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஜெயலலிதா, மதுரையை கோயில் நகரமாக்குவேன் என்கிறார். ஏற்கனவே கோயில் நகரமாக தானே இருக்கிறது. கோயிலை சுற்றி கடந்த 5 ஆண்டுகளில் அழகுபடுத்தப்பட்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேறி உள்ளது. மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொன்ன ஒருவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார். அதேகதி தான் ஜெயலலிதாவுக்கும் ஏற்படும். தேர்தலுக்கு பிறகு கொடநாடு போவாரா?, வெளிநாடு போய்விடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நடிகர் வடிவேலு பிரசாரத்தில் எத்தனை கல் வீசினாலும் அவர் சொல்லை தடுக்க முடியாது. அவர் எதற்கும் அஞ்சாதவர். தோல்வி பயத்தில் கல் வீசுகிறார்கள். அவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.
No comments:
Post a Comment