வலிவான தாயகம், வளமான தமிழகம் காண பாடுபட்டு வெற்றி நடைபோடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 04.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கடுமையான வெயிலிலும் கொடுமையான குளிரிலும் மாறி மாறிப் பயணம் செய்து நமது கூட்டணியின் வெற்றிப் பதாகையைத் தூக்கிப் பிடிக்க ஆங்காங்கு நிறுத்தப் பட்டிருக்கின்ற தி.மு.க. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களையெல்லாம் அறிமுகப் படுத்தவும் அவர்கள் ஆற்றி வரும் சமுதாயப் பணிகளை நினைவுபடுத்தி அப்பணி தொடரவும் அவர்களை மூல பலமாகப் பெற்றுள்ள நமது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு ஈட்டி முனைகளாக இருந்து இடையறாது பணியாற்றிடுவீர்.
என் சுற்றுப்பயணத்தின் களைப்பு நீங்கி மேலும் சுறுசுறுப்பாக உங்களோடு இணைந்து ஓடியாடி உழைக்கும் திறனை மென்மேலும் வளர்ப்பதற்குப் பதிலாக ஆங்காங்கு உங்களிடையே களத்தில் ஏற்படும் கவலை தரும் நிகழ்வுகள் என் பயணத்தைச் சற்று தயக்கமுறச் செய்கிறது. இதை கட்சியின் தற்கால நலன் கருதியும், எதிர்கால வளர்ச்சிக் கருதியும் வெளிப்படையாகவே கூற விரும்புகிறேன். அப்படிக் கூறுவது என் சிறு கவலைக்குக் கூட அருமருந்தாகும்.
எந்தவொரு இயக்கத்திலும் கருத்து வேறுபாடுகள் அவற்றால் விளையும் கசப்புணர்வு அலைகளிடையே நுரைகளின் தொகுப்பாக வெளிப்படுவது இயற்கை. ஆனால் அவற்றால் கடல் அலைகள் ஓய்ந்து விடுவதுமில்லை கடலே முற்றாக காய்ந்து விடுவதுமில்லை. கடல், அலை, நுரை இவை நிரந்தரமானவை. அதற்காக கடலையோ அலையையோ நுரையையோ வெறுத்து விடுபவர்களும் இல்லை வேண்டாமென்று ஒதுக்கி விடுபவர்களும் இல்லை.
இதை மனத்திற்கொண்டு சிந்தித்து செயல்படுவதே இந்தக் கூட்டணியின் அனைத்துக் கட்சிச் செயல் வீரர்களுக்கும் நான் விடுக்கும் அன்பான அறைகூவலாகும். இவரை வெற்றிபெறச் செய்தால், நமக்கென்ன இலாபம்? செய்ததால் தான் கிடைப்பது என்ன லாபம்? என்று நெஞ்சில் ஒரு கோணல் ஏற்படுமேயானால் உங்கள் எல்லோரையும் இணைத்து நான் நெய்திட விரும்பும் பட்டாடைக் கிடைத்திடுமா? அதைப் பக்குவமாய் படைத்திடத் தான் இயலுமா? என்ற கலக்கம் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கூட்டணியில் யார் பெறுகிற வெற்றியானாலும் அது நமது நாட்டுக்கே ஏற்றமும் வெற்றியும் வழங்குவதல்லவா? என்ற உணர்வுதான் மகத்தானது மரியாதைக்குரியது எனும் பரந்த மனப்பான்மையோடுதான் உலகக் கோப்பை வெற்றியில் 11 பேர் தான் கோப்பையைப் பெற்று மகிழ்ந்து கொண்டாடினார்கள் என்றாலும் இந்த உலகில் உள்ள இந்தியர்கள் அனைவரும், ஏன் குறிப்பாகத் தமிழர்கள் அனைவரும் குதூகலித்து கொண்டாட்டம் போடுகிறார்களே அந்த வெற்றியில் தமக்குக் கிடைத்த பங்கு என்ன என்று கருதிப் பார்த்தா அல்லது கணக்குப் பார்த்தா இப்படிக் களிப்பில் ஆடுகிறார்கள்?
அந்த 11 பேர் பெற்ற வெற்றியை அந்த 11 பேர்தானே பெற முடியும் பார்த்தோர், ரசித்தோர் என பல்லாயிரக்கணக்கானவர் பெறமுடியுமா? எனினும், ஒவ்வொருவரும் அந்த வெற்றியைப் பெற்றதாகத்தானே மகிழ்கிறார்கள்.
அதே போல் 234 தொகுதிகளில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை 234 தானே இருக்க முடியும்? நாம் இல்லாத அந்தக் குழுவில் யார் வெற்றிபெற்றால் என்ன என சிந்திப்போர் சிடுசிடுப்போர் சீறிடுவோர் யாராயினும் அவர்கள் நாட்டுப்பற்றின் மேன்மை அறியாதவர்கள் என்றுதானே கருதப்படுவர்.
விளையாட்டுக் களத்தில் பெறவேண்டிய வெற்றிக்கு ஒவ்வொரு இடத்தில் இருந்தும் ஓடியும், உதவியும், உற்சாகப் பண்பாடியும், ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்தும் வெற்றியின் மொத்த வடிவத்தைத் தூக்கி நிறுத்துவது போலத்தான் ஜனநாயகம் காத்திட நடைபெறும் தேர்தல் களத்தில் ஓரணியில் நிற்போர் அனைவரும் ஒத்துழைத்து வெற்றி வாகை சூடுவதில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட வேண்டும். அப்படியில்லாமல், வேகமாக அடிக்கப்பட்டு உயரப் பறந்தோடி வரும் பந்தினைப் பிடித்தால் அதன் பெருமை பந்தை வீசுபவருக்குத்தானே கிடைக்கும் என்று எண்ணி பந்தைப் பிடிப்பவர் அந்தப் பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டால் அது அந்த அணிக்கே பிணியாகிவிடும் அல்லவா?
உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றியைப் பெற்றுள்ள இந்த நேரத்தில் உடன்பிறப்புக்கள் பலருக்கும் இது உள்ளத்தில் பதியும் என்பதற்காக இதை உதாரணமாகக் குறிப்பிடுகிறேன். இதில் ஒளிந்து கிடக்கும் உண்மையின் துடிப்பையும் உரசிக் கொண்டு செல்லும் பொய்மையின் நடிப்பையும் என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள் அனைவரும் இங்கொன்றும் அங்கொன்று மாக உணர்ந்திருப்பதை நானும் உணருகிறேன். அதனால் மனம் சற்று உடையினும், மலை போல் நிமிர்ந்து நிற்கிறேன்.
எனக்கோ நலமில்லாத உடல், பலமும் இல்லை பயணம் செய்வதற்கு. இருந்தாலும் உன்னையும் என் தமிழ் மக்களையும் கண்டிட ஓடோடி வருகிறேனே, ஏன்? அவர்கள் எல்லாம் நன்றி மறவாதவர்கள் நானும் அவர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய மறவாதவன்.
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், அது கெடைக்கு எட்டு ஆடு கேட்கும் என்ற பழமொழியை வாக்காளப் பெருமக்களுக்கு எச்சரிக்கையாக்கி பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை நமது அணியினருக்குப் போர்க் கருவியாக வழங்கி நடக்கின்ற இந்த ஜனநாயக அறப்போரில் வலிவான தாயகம் வளமான தமிழகம் என்ற முழக்கத்தோடு வெற்றி நடை போடுவோம், வா, வா. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற அண்ணாவின் கருத்துப் புதையலைப் படித்திருப்பாயே அது இன்றைய என் கடிதத்திற்கும் பொருந்தும் என்று உணர்ந்து எழுந்து வா.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment