திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று வடசென்னை பிரசாரத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 11.04.2011 அன்று காலை முதல் வடசென்னையில் வீதிவீதியாக சென்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இருபுறமும் நீண்டதூரம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தன. வீடுகளின் மாடிகளில் இருந்த பெண்களும் சிறுவர்களும் துணை முதல்வரை பார்த்தும் உற்சாகத்துடன் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். பட்டாசு வெடித்தும், மலர்களை தூவியும் வரவேற்றனர்.
ராயபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, பெரம்பூரில் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. 13ம் தேதி தேர்தலில் மக்கள் நமக்கு நிச்சயம் வெற்றி தருவார்கள் என்பது இங்குள்ள மக்கள் அலையை பார்க்கும்போதே தெரிகிறது. எதிரணியில் உள்ள ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
அங்கு கூட்டணி சேர்ந்த ஒருவர் வாக்கு சேகரித்த முதல் நாளிலேயே வேட்பாளரை அடித்தார். 2வது நாள் அதிமுக கொடியை அகற்ற சொன்னார். 3வது நாள் ஆப் அடிச்சாதான் ஆப்பு அடிக்க முடியும் என்றார்.
எப்போதும் குடித்து விட்டு பேசும் இவர், வெற்றி பெற்றால் என்ன செய்வார் என்பதை இப்போதே மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். ஹீரோவாக இருந்த விஜயகாந்த், தற்போது காமெடி நடிகராகி விட்டார். காமெடியனாக இருந்த வடிவேலு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹீரோவாகி விட்டார்.
நான் இரண்டு முறை மேயராக இருந்தபோது, வடசென்னைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். தென்சென்னையைவிட வடசென்னையை மேம்படுத்த அதிகம் பாடுபட்டேன். தற்போதும் வடசென்னையின் முன்னேற்றத்துக்காகத்தான் கொளத்தூரில் போட்டியிடுகிறேன்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் தீர பல்வேறு சுரங்கப்பாதைகள், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் பல பாலங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும் தொற்று நோய் மருத்துவமனை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட உள்ளது. எனவே, வடசென்னையின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மக்களுக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. அவர் எந்த சாதனையாவது செய்ததாக கூற முடியுமா? அவர் செய்தது ஒன்றே ஒன்று. தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து வேதனைப்படுத்தியதுதான்.
தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் பல ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கின்றனர். அயனாவரத்திலும் பலர் கோயில் நிலத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அந்த இடத்தை கிரயம் செய்து கொடுக்க சட்டத்துக்கு உட்பட்டு ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு அறிக்கைக்கு பின் கோயில் நிலம் குடியிருப்போருக்கு அளிக்கப்படும். மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment