கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 22, 2011

தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை ஜெயலலிதா எடுத்துக் கொண்டாரா? - கலைஞர் கேள்வி


முதல் அமைச்சர் கருணாநிதி 21.04.2011 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: அறிக்கை அரசி ஜெயலலிதா ஓய்வெடுக்க கொடநாடு சென்றுள்ள நேரத்திலும் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், அதைத்தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு நீண்ட பட்டியலை கொடுத்துள்ளாரே?.

பதில்: தமிழ்நாடு காவல்துறையினர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி தொடர்ந்து அமைதியை நிலைநாட்டி வருகின்றனர்.

குற்ற நடவடிக்கைகள் என்பது எந்த ஆட்சிக்காலத்திலும் நடைபெறக்கூடிய ஒன்று தான். தமிழக காவல்துறையினர், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, கொலை, கொள்ளை மற்றும் சமுதாய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தருவதுடன், அவர்களை தடுப்புக்காவலிலும் வைத்து வருகிறார்கள். காவல்துறையினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிக்கும்பல்களை பலமுறை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் சட்டங்களில் உள்ள சில சந்து பொந்துகளை பயன்படுத்தி நீதிமன்றங்களில் வாய்தா வாங்கி, வழக்குகளை தாமதப்படுத்தி எப்படியோ தப்பித்துக் கொள்கின்றனர்.

ஆனால் பலரை சில நாட்கள் ஏமாற்றலாம், சிலரை பல நாட்கள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. முன் விரோதம் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக நடைபெற்ற பின்வரும் ஒரு சில சம்பவங்களை வைத்து, சட்டம் ஒழுங்கு பராமரிப்பை ஒட்டுமொத்தமாக குறை கூறுவது என்பது ஊரை ஏமாற்ற முயலும் காரியமாகும். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் சரகம், வில்லுக்குறியை சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.04.2011 அன்று, அடையாளம் தெரியாத நபர்கள், திங்கள் நகர் சந்தைக்கு செல்லும் வழியில் கொலை செய்துள்ளனர். நாகராஜன், இரணியல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு கொண்ட போக்கிரியாவார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 30 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மூன்று முறை குண்டர் தடுப்பு சட்டத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவராவார். முன்விரோதம் காரணமாக இவரது எதிரிகள், இவரை கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து இரணியல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, எதிரிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இதை அப்படியே திரித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் தி.மு.க. வினர் கொலை செய்ததாக சொல்லியிருப்பது மாய்மாலமாகும். மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் காவல் நிலைய சரகம், உச்சப்பரம்பு மேட்டில், 18.04.2011 அன்று, சந்துரு என்ற மணிகண்ட வேலன், தனது தேநீர் கடை அருகில், குடிபோதையில் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்த சிலரை, தள்ளிச் சென்று பேசுமாறு கூறிய போது ஏற்பட்ட தகராறில், மேற்படி நபர்கள் சந்துரு மற்றும் விஸ்வநாதன் என்பவரையும் கொலை செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஏழு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் திமுகவைச் சேர்ந்த யாரும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா இதிலும் தி.மு.க. மீது பழி சுமத்த முயலுகிறார். மதுரையில், 14.04.2011 அன்று, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சரகம், ஹீரா நகரில் பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பாண்டிக்கண்ணன் என்பவரும், 16.04.2011 அன்று, கீரைத்துறையில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் சித்திரைச்செல்வி என்பவரும், 17.04.2011 அன்று, செல்லூர் காவல் நிலைய சரகம், அருள்தாஸ்புரத்தில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டை தொடர்பாக, சரவணன் என்ற சிறுவனும் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்குகளில், 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். இரண்டு எதிரிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் மதுரையில் கடந்த 15 நாட்களில் ஏழு பேர் கொலைச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது எண்ணிக்கை தெரியாத குற்றமாகும். சென்னை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்த இளையராஜா என்ற மாணவரின் வருகைப்பதிவு நாட்கள் குறைவாக இருந்த காரணத்தினால், கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 11.04.2011 அன்று, அம்மாணவர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றுக்கோரி 18.04.2011 அன்று, சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தைத் தடை செய்த போது, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற நேரத்தில், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உயிர் மற்றும் உடைமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து போக செய்துள்ளனர். ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு தற்போது அப்பகுதியில் எந்தவிதமான பதற்றமும் இல்லை என்பதோடு, அமைதி நிலவிவருகிறது. 18.04.2011 அன்று இரவு, சென்னை, சாலிகிராமத்தில் திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் அந்தோணி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வரும், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் ஒரு சிலர் கல்லெறிந்ததில், அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடி ஒன்று உடைந்துள்ளது.

இது குறித்து, விஜய் அந்தோணி கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், குடிபோதையில் அவ்வழியில் சென்ற யாரோ ஒருவர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. காவல்துறையினர் அந்நபரை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ரவுடிகள் யாரும் ஈடுபட்டதாக தெரியவரவில்லை. ஆனால் ஜெயலலிதா இதற்கும் காது மூக்கு வைத்து கதை சொல்ல முற்பட்டுள்ளார்.

இது போலவே தான் அவர் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்களும் ஆகும். ஆற்றிலே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போன ஒருவன் "உலகம் போச்சு உலகம் போச்சு'' என்று குரல் கொடுக்க அவனைக் காப்பாற்றி "என்னப்பா உலகம் போச்சு என்று குரல் கொடுத்தாயே'' என்று கேட்டபோது "நீங்கள் என்னை காப்பாற்றா விட்டால் என்னை பொறுத்தவரையில் உலகம் போயிருக்கும் அல்லவா, அதனால் தான் அப்படி கத்தினேன்''என்றானாம். அதைப்போல அம்மையாருக்கும் வேறு வழி எதுவும் தெரியாததால் ஏதேதோ குரல் கொடுத்துப்பார்க்கிறார். இவர் வெளியிடும் அறிக்கைகளை பார்க்கும்போது ஆணையத்தின் அதிகாரத்தை அம்மையாரே எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடுதான் தோன்றுகிறது.

இவ்வாறு அறிக்கையில் முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment