தெலுங்கு மற்றும் கன்னட புது வருடப்பிறப்பு ‘யுகாதி’ பண்டிகையாக 04.04.2011 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்களுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தி பின்வருமாறு
தமிழகமெங்கும் குறிப்பாக சென்னை மாநகரில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்தி வரும் திமுக அரசு, தமிழகத்தில் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களுக்கு முந்தைய அதிமுக அரசு காலத்தில் மறுக்கப்பட்ட யுகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006ம் ஆண்டுக்கு பின் மீண்டும் வழங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
தெலுங்கு, கன்னட மொழி பயில விரும்புவோர்க்கு தமிழக பள்ளிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தித் தந்தும், தனி வல்லுனர் குழுக்களை அமைத்து தரமான பாடநூல்களை தயாரித்து வழங்கியும் உதவியுள்ளது. கர்நாடக மாநில அரசுடன் நல்லுறவு கொண்டு அங்கு பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையை திறக்கப்படவும், அதே உணர்வுடன் சென்னை மாநகரில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை திறக்கப்படவும் ஆவன செய்து தமிழக & கர்நாடக மாநில மக்களிடையே நல்லிணக்க உணர்வுகளை வளர்த்துள்ளது. அதேபோன்று ஆந்திர அரசுடனும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்துள்ளது.
இத்தகைய நடைமுறைகள் மூலம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் உட்பட பிற மொழிகள் பேசும் மக்களின் நலனை காப்பதில் திமுக தொடர்ந்து பாடுபடும் என்பதுடன் யுகாதி திருநாள் கொண்டாடும் கன்னட, தெலுங்கு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment