‘கடந்த ஐந்தாண்டில் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை மனதில் கொண்டு, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றிட திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்’ என்று கோவையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் 09.04.2011 அன்று , பிரதமர் மன்மோகன்சிங் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மன்மோகன்சிங் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகத்தை சேர்ந்த பலர் முக்கிய பங்காற்றியுள்ளனர். மகாத்மாவின் கொள்கைகளை ஏற்று ஜவகர்லால் நேருவுடன் கரம் கோர்த்து செயல்பட்ட ராஜாஜி, அன்னை இந்திராவுக்கு ஆலோசகராக விளங்கிய காமராஜர், ராஜிவ்காந்திக்கு ஆலோசனைகளை வழங்கிய மூப்பனார் ஆகியோருக்கு இந்த நேரத்தில் மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
மத்தியில் உள்ள எங்களது அரசாங்கம் மிக சிறப்பாக செயல்படுவதற்கு உற்ற தோழர்களாக தமிழகத்தில் இருந்து வந்துள்ள கூட்டணி கட்சிகள் அமைந்துள்ளன. நாட்டை முன்னெடுத்து செல்வதில் தமிழக தலைவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இதனால் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தமிழக மக்கள் ஆதரவு கரம் நீட்ட
வேண்டும். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உதவுவதுடன் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு முழு ஆதரவளிக்க வேண்டும்.
கோவை மாநகரம் ஜவுளி மற்றும் கல்வித் துறையில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த நகரம் சக்தி வாய்ந்ததாகவும், துடிப்பானதாகவும் திகழ்கிறது. கோவையைப் பொறுத்தவரை தமிழகத்தைப் பிரதிபலிக்கச் செய்கிறது. இது இந்தியாவை பெருமைப்படுத்துகிறது.
இந் நிலை தொடர வேண்டும். காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு உங்கள் முன் நிற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ், திமுக ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. பல திட்டங்கள் மூலம் மக்கள் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.
தமிழக அரசை வழி நடத்தி செல்லும் முதல்வர் கருணாநிதிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது வழிகாட்டுதல்களால் தமிழகம் ஊரக வளர்ச்சி, விவசாய உற்பத்தி, ஆட்டோமொபைல், ஜவுளித்துறை என பல துறைகளில் சிறந்து விளங்குகிறது. மாவட்ட நிர்வாகம், நகராட்சி, பேரூராட்சி போன்றவை சிறப்பாகச் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்னோடியாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தமிழகத்தில் திமுக அரசும் இணைந்து மாநில வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. பழமை வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்து அதற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சேலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில் கோட்டம் உருவாக்கி தரப்பட்டுள்ளது. 100 ஆண்டுக்கு மேலான இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
சேலத்தில் ஒருங்கிணைந்த உருக்காலையை கடந்த 2008ல் நாட்டுக்கு அர்ப்பணித்தோம். நாட்டில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகத்தின்கீழ் தேசிய கடல்சார் கல்வி மையம் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் சேலத்தில் ரூ.120 கோடி செலவில் சேலம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் ரூ.80 கோடி செலவில் பாராமெடிக்கல் மண்டல பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற திட்டத்தில் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி ஜவுளித்துறையை சார்ந்த பகுதி. நெசவு தொழிலை பாதுகாக்க ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பயனடைகின்றனர்.
இந்த சமயத்தில் உங்களுக்கு ஒரு உறுதியை தரவும் விரும்புகிறேன். ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் சாய ஆலை தொழிற்சாலைகள் சந்தித்து வரும் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரமான ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதுபோன்று திட்டப்பணிகள் தொடர்ந்து தமிழகத்திற்கு கிடைக்கவேண்டுமெனில் திமுக அணி மீண்டும் வெற்றி பெற வேண்டும்.
சமீபத்தில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு அளித்த அறிக்கையில் நாட்டில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் தமிழகம் இருப்பதாக கணித்துள்ளனர். தொடர்ந்து மேலும் வளர்ச்சி பெற திமுக&காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.
நீங்கள் வாக்களிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை என்ற போதிலும் தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் சில பொய்யான வாக்குறுதிகளை அளித்து உங்களை சந்திக்கின்றனர். அதற்கு நீங்கள் ஏமார்ந்து விடக்கூடாது என்பதையும் அறிவுறுத்த விரும்புகிறேன். தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து இணைந்து பணியாற்ற திமுக&காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை நீங்கள் ஆதரிக்கவேண்டும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு. திமுக மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி, கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, பாமக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சுசிகலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment