கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 22, 2011

தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது! வைகோவுக்கு கி. வீரமணி திறந்த மடல்!


அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.


அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?

தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வதாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது! கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள்மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது?

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவை அல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

சோ குருமூர்த்தி ஜெயலலிதா இனம் இனத்தோடு!

அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப,

இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

எண்ணெய்யும், நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.

இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள்.

ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.

வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

உள்நோக்கமற்ற வேண்டுகோள்

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.

பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

வைகோவுக்கு திருமாவளவன் அழைப்பு :


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாகவும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அளவுக்கு ம.தி.மு.க.வை நெட்டித்தள்ளியது அ.தி.மு.க.வின் நம்பிக்கைத்துரோகமும் நன்றி உணர்வில்லா பண்புமே ஆகும்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக்கொண்ட ஒவ்வொரு கட்சியுமே இத்தகைய அவமதிப்புக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது என்பது உலகறிந்த உண்மை.

கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கும் இத்தகைய நம்பிக்கைத்துரோகத்தை அ.தி.மு.க. செய்தது. அ.தி.மு.க.வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி உறவானது முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கூடா நட்பு என்பதை ம.தி.மு.க. உணரவேண்டும்.

ஈழம் கூடாது என்பதுடன் புலிகளுக்கு தடை விதிக்கக்காரணம் நான்தான் என்று வெளிப்படையாக அறிவிக்கும் ஜெயலலிதா, பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்கவேண்டும் என்று சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.

தேர்தலை புறக்கணிக்கும் ம.தி.மு.க.வின் இந்த முடிவு வைகோவின் தன்மானத்தைப்பாதுகாக்கும் என்றாலும் கட்சியையும் தொண்டர்களையும் பாதுகாக்குமா? என்பது கேள்விக்குறியே. அ.தி.மு.க. தலைமை இப்படி பழிவாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக்கொள்ள இயலாததாக உள்ளது. இந்தநிலையில் ம.தி.மு.க. தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?


எனவே தொண்டர்களின் உணர்வுகளை மதித்து நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டும் வகையில் தேர்தலை ம.தி.மு.க. சந்திக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாகும்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment