அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறிடுவீர்; நமது அணியின் வெற்றியை உறுதி செய்திடுவீர் என்று முதல் அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
எய்ட்ஸ் பாதிப்பு வீழ்ச்சி
மக்கள் நல்வாழ்வு துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகளின் தொடர்ச்சி; 2001 ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் 1.13 சதவீதமாக இருந்ததால் தமிழகம் எய்ட்ஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலமாக வகைப்படுத்தப்பட்டது; 2006 ல் இந்த அரசு எடுத்த விழிப்புணர்வு மற்றும் தடுப்புப்பணிகளால் தற்போது 0.25 சதவீதமாகக் குறைந்து எச்.ஐ.வி. பாதித்தோரின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து சீராக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகத் தமிழக அரசு ரூ.5 கோடி முதலீட்டில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்த 1,549 குழந்தைகளுக்கு 2009 10ம் நிதி ஆண்டில் ரூ.44.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் பிறப்பு இறப்புப் பதிவு மையங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாகப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
போலி மருந்து தடுப்பு
போலி மருந்து மற்றும் காலாவதி மருந்துகளைக் கண்டுபிடித்து அவைகளைப் பறிமுதல் செய்வதுடன், அவை தொடர்பாக 41 பேரை கைது செய்து; அவர்களில் 19 பேர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மூளை இறப்பு உறுப்பு தானப் பிரிவு என்னும் புதிய பிரிவை அக்டோபர் 2008 ம் ஆண்டில் தொடங்கி; மூளைச்சாவு' அடைபவர்களிடம் இருந்து, சட்டப்படி சான்றிதழ் பெற்று அவர்களின் சிறுநீரகம், கல்லீரல், இதயம், கண் போன்ற உறுப்புகளை எடுத்து, அந்த உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாகப் பொருத்த வழிவகை செய்துள்ளது. இதுவரை மூளைச்சாவு ஏற்பட்ட 163 பேரிடமிருந்து 29 இதயம், 4 நுரையீரல், 143 கல்லீரல், 304 சிறுநீரகம், 196 இதய வால்வு ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, அவற்றை 942 பேருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.
அமரர் ஊர்தி சேவை
கண்பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத்தின் கீழ், 2006 க்குப்பின் 27.48 லட்சம் பேர் கண்புரை அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். 84.54 லட்சம் பள்ளிச் சிறார்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 3.88 லட்சம் சிறார்க்கு கண்பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டு, 1.39 லட்சம் பேருக்கு இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.10 கோடி செலவில், இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம் 180 அமரர் ஊர்திகளுடன் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தமிழ்நாடு இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுகிறது. முதல் கட்டமாக 10 அமரர் ஊர்திகளுடன் 26.02.2011 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக தொலைபேசி அழைப்பு எண் 155377.
மருத்துவ மாணவர்களுக்கு
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பிற்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாத உதவித்தொகை ரூ.4,500 என்பதை ரூ.7,000 என்றும்; அரசுப் பணிசாரா மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.8,000 என்பதை ரூ.15,000 என்றும்; 2 ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.8,000 மற்றும் ஆய்வுப்படி ரூ.500 என்பதை ரூ.16,000 என்றும்; 3 ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.8,000 மற்றும் ஆய்வுப்படி ரூ.1,000 என்பதை ரூ.17,000 என்றும்;
சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.9,500 என்பதை ரூ.18,000 என்றும்; 2 ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.10,000 என்பதை ரூ.19,000 என்றும்; 3 ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.10,000 என்பதை ரூ.20,000 என்றும்; 4 ம் ஆண்டு நரம்பியல் அறுவை மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.9,000 மற்றும் ஆய்வுப்படி ரூ.1,000 என்பதை ரூ.18,000 என்றும்; 5 ம் ஆண்டில் ரூ.19,000 என்றும் ஆண்டுக்கு ரூ.9.60 கோடி செலவில் 1.7.2009 முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
உறுதி செய்திடுவீர்
பொது சுகாதாரச் சேவையை மக்களுக்கு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்குகிறது என்றும், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து கிராமப் பகுதிகளில் சுகாதாரச் சேவையைச் சிறப்பாக விரிவுபடுத்தியுள்ளது என்றும் உலக வங்கி தனது செப்டம்பர் 2010 இதழில் தமிழ்நாட்டைப் பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் இவ்வளவு சிறப்பான திட்டங்களையும் கழக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறிட மீண்டும் தி.மு.கழக அரசே தேர்ந்தெடுக்கப்பட இத்திட்டங்களையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறிடுவீர்! நமது அணியின் வெற்றியை உறுதி செய்திடுவீர்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment