3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் 3, அடுத்த கல்வி ஆண்டில் 5 என 8 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல் அமைச்சர் கருணாநிதி 14.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடமாடும் மருத்துவ குழுக்கள்
மக்கள் நல்வாழ்வு துறையில் கழக ஆட்சி நிறைவேற்றிய சாதனைகளின் தொடர்ச்சி; ரூ.104.53 கோடி செலவில் 5 ஆண்டுகளில் 165 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு; 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்று என 385 நடமாடும் மருத்துவ குழுக்கள் ரூ.37.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு தொலைதூர கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகிறது.
5 ஆண்டுகளில் ரூ.1,282 கோடி மதிப்பில் மருந்துகளை வாங்கி அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கி மக்கள் பயனடைந்துள்ளனர். ரூ.600 கோடிக்கும் மேலான செலவில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், 64 கூறு சி.டி.ஸ்கேன், லித்தோஸ்ட்ராப்ஸி, கலர் டாப்லர், செமி ஆட்டோ அனலைசர், கோபால்ட் தெரபி, லீனியர் ஆக்ஸலரேட்டர், பி.சி.ஆர். கருவி, டயாலிசிஸ் கருவி, கேத்லேப் போன்ற பல அதிநவீன மருத்துவ கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மருத்துவ கல்லூரிகள்
தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மருத்துவ கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்படவுள்ளன. மேலும், அடுத்த கல்வியாண்டில் கடலூர், விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
மைய அரசு ரூ.100 கோடியும், மாநில அரசு ரூ.54 கோடியும் வழங்கிட ரூ.154 கோடி செலவில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது; இந்த மருத்துவமனையில் ஒரு செவிலியர் கல்லூரியும் நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மைய அரசின் நிதி உதவியுடன் ரூ.150 கோடி செலவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையும் உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இங்குள்ள மயக்க மருந்தியல் துறை நடப்பு நிதி ஆண்டில் ரூ.2.60 கோடி செலவில் உயர் மையமாக தரம் உயர்த்தப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு ரூ.28.64 கோடி செலவில் விபத்து சிகிச்சை பிரிவு தொடங்க கட்டிடப்பணிகள் முடிவடைந்துள்ளது.
மருத்துவமனைகளின் மேம்பாடு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையை ரூ.100 கோடி செலவில் மேம்படுத்திட திட்டமிடப்பட்டு கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, சென்னை அரசு பல் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் ரூ.395 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
சென்னை மருத்துவ கல்லூரிக்கு புதிய கட்டிடம், கூட்ட அரங்கம், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் போன்றவை ரூ.76 கோடி செலவில் கட்டப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.50 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.82 கோடி செலவில் புற்றுநோய் பிரிவு, தேனியில் ரூ.10 கோடியில் ஒரு சிறப்பு அரசு மனநல மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புதிதாக ஒரு செவிலியர் பள்ளி ஆகியவை தொடங்கப்படவுள்ளன. விழுப்புரம், திருவாரூர் மாவட்ட மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடங்களில் செவிலியர் பள்ளி, நகர நல மையம் ஆகியவை நடப்பு ஆண்டில் தொடங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதார திட்டம்
உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு சுகாதார திட்டத்தில், 198 அரசு மருத்துவமனைகளில் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுகாதார திட்டத்தை தமிழகம் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தி இலக்கை முடித்துள்ளதால், உலக வங்கி மேலும் 3 ஆண்டுகளுக்கு ரூ.627 கோடி நிதி உதவியில் இத்திட்டத்தை நீட்டித்திட இசைவு தெரிவித்து பல்வேறு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை கல்லூரி ரூ.90 லட்சம் செலவிலும், சென்னை அரசு யுனானி மருத்துவ கல்லூரி ரூ.92.50 லட்சம் செலவிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவ கல்லூரியில் நர்ஸிங் தெரபி ஒரு மருந்தாளுநர் என்ற பட்டப்படிப்புக்கு தலா ரூ.3 கோடி செலவிலும், சென்னை அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் நர்ஸிங் தெரபி, மருந்தாளுநர் பட்டயப் படிப்புகள் தலா ரூ.3 கோடி செலவிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment