‘தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா கோடநாடு போய் விடுவார். எம்ஜிஆர் ரசிகர்களை வளைத்து விடலாம்‘ என்று கணக்குப் போடுகிறார் விஜயகாந்த். ‘வைகோவையே ஒரு கை பார்த்து விட்டோம். விஜயகாந்த் எம்மாத்திரம்‘ என ஜெயலலிதா நினைக்கிறார். ஆகவே, மக்கள் சிந்தித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பாக்யராஜ் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் துரையை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் 28.03.2011 அன்று இரவு பிரசாரம் செய்தார். கைகாட்டி கோயில் பகுதியில் அவர் பேசியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, மக்களுக்கு இம்முறை என்னென்ன நல்லது செய்யலாம் என திட்டமிட்டு, முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது திமுகதான். எதிரணியில் சீட்டுக்காக சண்டையிடவே நேரம் சரியாய் போய்விட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்க நேரம் இல்லை. ஏற்கனவே தயாரித்து ரெடியாக இருந்த திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே எடுத்து வாசித்துவிட்டார் ஜெயலலிதா.
திருமண உதவி திட்டத்தில் 4 கிராம் தங்கம் தருவேன் என்கிறார். முதல்வராக இருந்தபோது திருமண உதவி திட்டத்தையே நிறுத்தியவர் இவர். கரும்பு கொள்முதல் விலையை விவசாயிகள் ஆயிரம் ரூபாயாக கேட்டபோது மறுத்த ஜெயலலிதா, இப்போது 2 ஆயிரத்து 500 தருவேன் என்கிறார். முதல்வராக இருந்தபோது முட்டையை நிறுத்தியவர், குழந்தைகளுக்கு யூனிபார்ம் தருவேன் என்கிறார்.
புதுமண ஜோடி ஒன்று கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனது. எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டிய கைடு கடைசியாக, கைப்பிடி இல்லாத பாழுங்கிணற்றை காட்டினார். ‘மனதில் ஏதாவது நினைத்துக் கொண்டு இதில் எட்டணா போட்டால் நினைத்தது நடக்கும்’ என்றார் கைடு. உடனே கணவன் எட்டணா போட்டான். அடுத்து மனைவி காசு போட குனிந்தபோது, கால் தவறி உள்ளே விழுந்து விட்டாள். ‘ஐயய்யோ... மேடம் உள்ள விழுந்துட்டாங்க. பதறாம வேடிக்கை பாக்கறிங்களே?’ என்று கத்தினார் கைடு. ‘காசு போட்டா நினைச்சது நடக்கும்னு சொன்னீங்க. இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு சொல்லலியே’ என்றானாம் கணவன்.
அதுமாதிரி, ‘தேர்தல் முடிஞ்சதும் ஜெயலலிதா கோடநாடு போய்டுவார். எம்ஜிஆர் ரசிகர்களை அப்படியே வளைத்து விடலாம்’ என்று கணக்கு போடுகிறார் விஜயகாந்த். ‘வைகோவையே ஒருகை பார்த்து விட்டோம். விஜயகாந்த் எம்மாத்திரம்’ என்ற நினைப்பில் இருக்கிறார் ஜெயலலிதா. இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
No comments:
Post a Comment