திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 18.03.2011 அன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 119 தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி 17.03.2011 அன்று வெளியிட்டார்.
இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். முதலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்
பின்னர், தியாகராயர் நகரில் உள்ள கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாசை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். கூட்டணி கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment