கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

ஆணவப்போக்குடன் அ.தி.மு.க., பிடிவாதம்; கூட்டணியில் இருந்து வெளியேறியது ம.தி.மு.க.,



கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க., தங்களை முழுமையாக காயப்படுத்தி விட்டதாகவும், ஜெ.வின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், தொடர்ந்து அகந்தையுடன் இருப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ம.தி.மு.க,. அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க, தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அவசர, அவசரமாக , கூட்டணி கட்சி தலைவர்களை ஜெ., சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பார்வர்டுபிளாக் கட்சி, மனிதயேமக்கள் கட்சி, புதிய தமிழகம், இ.கம்யூ., மார்க்., கம்யூ என அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ,சமத்துவ மக்கள் கட்சி, என அனைத்து கட்சிகளுக்கும் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்குவதாக ஜெ., சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டடது. 2 நாளாக தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தே.மு.தி.க.,விற்கு தொகுதி ஒதுக்கீடு பிரச்னை முடிவுக்கு வந்தது.இதனை இன்னும் விஜயகாந்த் உறுதி செய்யவில்லை. இவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இக்கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என அதிருப்பதியில் இருந்தனர். இதனையடுத்து ம.தி.மு.க., 19.03.2011 அன்று சனிக்கிழமை காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதிக்கப்பட்டது. மாலையில் மாவட்ட செயலர்களுடன் 2 முறை வைகோ கலந்து பேசினார்.முன்னதாக அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர்.

இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகம் மற்றும் புதுவையில் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வைகோ கூறியுள்ளார்.

இது தெடர்பாக அவர் மேலும் கூறுகையில்,தொகுதி பங்கீட்டு முறையில் அ.தி.மு.க., நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கு தங்களை கடுமையாக காயப்படுத்தி விட்டதாகவும், சுயமரியாதை இழந்து பதவிகளை பெறற வேண்டிய அவசியம் இல்லை. 3வது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம் வருமாறு:

2004 பொதுத் தேர்தலுக்குப் பின், தி.மு.க. தலைமையின் அணுகுமுறையால் நடைபெற்ற சில நிகழ்வுகளால் ஏற்பட்ட காரணங்களால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுள் 90 விழுக்காட்டினரும், தலைமை நிர்வாகிகள், முன்னணித் தலைவர்களுள் பெரும்பான்மையோரும், அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்று விரும்பியதன் விளைவாக, அந்தக் கூட்டணியில் கழகம் இடம் பெற்றது. தமிழகத்தில் 35 இடங்களும், புதுவையில் 2 இடங்களும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த வைகோ : மறுமலர்ச்சி தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் என்பதால், கழகத்தில் பெரும்பாலோருடைய கருத்தினை ஏற்று, அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால், கழகத்தின் பொதுச்செயலாளர் மீது துளியும் உண்மை இல்லாத பழியும், நிந்தனையும், தி.மு.க. தரப்பில் இருந்து சுமத்தப்பட்டன. அந்தத் தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் போட்டியிட்ட தொகுதிகளைக் குறிவைத்து வீழ்த்திட முனைந்த தி.மு.கழகம், தமிழ்நாட்டிலேயே மற்ற தொகுதிகளை விட, கழகம் போட்டியிட்ட தொகுதிகளில், பெரும் பணபலத்தைப் பிரயோகித்தது. அந்தத் தேர்தலில், கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, 213 தொகுதிகளில், தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் : ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ம.தி.மு.க. வெற்றி பெற்றது; பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளில் தோற்றது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே கணக்கிட்டால், 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 31 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. வெற்றி பெற, ம.தி.மு.க. காரணம் ஆயிற்று.அதனைத் தவிர்த்து, ம.தி.மு.க.வின் நாடு தழுவிய புயல் வேகப் பிரச்சாரம், அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, நடுநிலை வாக்காளர்களின் ஆதரவையும் கவர்ந்தது என்பது உண்மை ஆகும். அந்தத் தேர்தலில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு கட்சிகள் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. அதற்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை, மறுமலர்ச்சி தி.மு.கழகம், உறுதியாக ஆதரித்துச் செயல்பட்டது.தமிழக சட்டமன்றத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து முழுமனதோடு இணைந்து செயல்பட்டது.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் வெற்றி பெற்று இருந்த தொகுதி என்றபோதும், அண்ணா தி.மு.கழகம் தானே போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனை ஏற்றுக் கொண்டது. கம்பம், தொண்டாமுத்துடர் ஆகிய தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், தேர்தலைப் புறக்கணிப்பது என்ற அண்ணா தி.மு.க.வின் முடிவை, மறுமலர்ச்சி தி.மு.கழகமும் ஏற்றுக் கொண்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையில், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் உள்ளிட்ட, முக்கியமான கொள்கைகளை,மறுமலர்ச்சி தி.மு.கழகம், கூட்டணிக்காக ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது இல்லை. இதனை, அண்ணா தி.மு.க. தலைமை நன்றாகவே அறியும். ஏனெனில், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ஈழத்தமிழர் பிரச்சினையில், ம.தி.மு.க.வின் நிலைப்பாடு, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கூட்டணி பிரித்து கொள்வதில் நடந்தது என்ன ? :

நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து, அண்ணா தி.மு.க. குழுவினருடன் ம.தி.மு.க. குழு, நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை போட்டியிட்ட 35 இடங்களை மீண்டும் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டது.இரண்டாவது சுற்றுப் பேச்சுகளின்போது, 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரியது.மார்ச் 8 ஆம் நாள் நடைபெற்ற, நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போதுதான், ம.தி.மு.க.வுக்கு ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.குறைந்தபட்சம், 23 தொகுதிகளாவது ஒதுக்குமாறு கழகத்தின் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டபோதும், மார்ச் 12 ஆம் தேதியன்று, மேலும் ஒரு தொகுதி என ஏழு தொகுதிகள் ஒதுக்குவதாகக் கூறப்பட்டது. மறுநாள், 13 ஆம் தேதி, அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் ஒரு தொகுதியைச் சேர்த்து, 8 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி அளவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, அவரது இல்லத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் சந்தித்த, திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், மார்ச் 13 ஆம் தேதி அன்று, அ.தி.மு.க. தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளைக் கொடுக்க இயலாது என்றும், ஒரு தொகுதியைக் குறைத்து, ஏழு தொகுதிகளே தர முடியும் என்றும், தங்கள் கட்சித் தலைமை தெரிவிக்கச் சொன்னதாகக் கூறி விட்டுச் சென்றார்கள்.

இதன்மூலம், ம.தி.மு.க.வைப் புண்படச் செய்து, தாங்களாகவே கூட்டணியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று, அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டதை உணர முடிந்தது. அதன்பின்னர், அதே நாளில், மாலை நான்கு மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதல் நாள் கூறியபடி, 8 தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக, அ.தி.மு.க.தலைமையின் சார்பில் கூறினார்கள்.

15 ஆம் தேதி இரவு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள், வைகோ அவர்களைச் சந்தித்து, அதிகபட்சமாக 9 இடங்கள்தான் தர முடியும் என்று தெரிவிக்கச் சொன்னதாகக் கூறினார்கள்.மறுநாள், 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மீண்டும் அதே பிரநிதிகள், முதல் நாள் இரவில் கூறியதையே திரும்பவும் உறுதிப்படுத்தி, இதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து இட வருமாறு, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அழைத்ததாகக் கூறினார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 23 இடங்கள் என்பதில் இரண்டு இடங்களைக் குறைத்துக் கொள்கிறோம்; நாங்கள் கேட்கும் 21 இடங்களைத் தருவதாக இருந்தால், உடன்பாடு குறித்துப் பேசுவோம்; அதைத் தவிர்த்து இனி பேசிப் பயன் இல்லை’ என்று கூறி விட்டார்.

அன்று மாலையிலேயே, ஏற்கனவே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 74 இடங்கள் போக, மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம், கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை என்பதை, அ.தி.மு.க. தலைமை அறிவித்தே விட்டது. 2006 ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்கு உரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திட வேண்டிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், திட்டமிட்டே உதாசீனப்படுத்தி விட்டது. மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால், 19 ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், திரு செங்கோட்டையன் அவர்களும், ம.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை, தாயகத்தில் சந்தித்து, 12 தொகுதிகளைத் தருவதாக, அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவித்தார்கள். ஏற்கனவே கூறியபடி, ம.தி.மு.க. கேட்கும் 21 தொகுதிகளைத் தருவதாக இருந்தால், தொகுதி உடன்பாட்டுக்கு இசைவு அளிக்க முடியும் என்று ம.தி.மு.க. தரப்பில், அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.தொகுதிப் பங்கீட்டில், அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைமை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தி விட்டது.

ஜெ., போக்கில் மாற்றமில்லை :

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களுடைய நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற, துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தலைமைக் கழகம் ,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,

சென்னை - 8

தாயகம்,

20.03.2011.

No comments:

Post a Comment