மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 28.03.2011 அன்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காரில் வந்த அவருக்கு, மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
களியக்காவிளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜயதரணி, ஜான் ஜேக்கப் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:
தமிழகத்தில் 6வது முறையாக முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய உங்களை நாடி வந்திருக்கிறோம். ஓட்டுக்காக மட்டும் உங்களை தேடி வரவில்லை. எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருந்து பணியாற்றி வருகிறோம் என்ற உணர்வோடு, வந்திருக்கிறோம்.
திமுக தலைவர் கருணாநிதி 2006 தேர்தல் அறிக்கையின் போது என்னென்ன திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தாரோ, அத்தனையையும் 100க்கு 100 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார் என்ற உரிமையோடு வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் எத்தனையோ கட்சி தலைவர்கள் வரலாம். உறுதி மொழிகள் தரலாம். வானத்தை கிழித்து விடுவோம். வைகுண்டத்தை காட்டுவோம் என்றெல்லாம் கூறலாம். ஓய்வுக்கு கொடநாட்டுக்கு செல்லும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
திமுக தலைவர் கருணாநிதி சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி உள்ளார். 2006 தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொன்னது 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது தான். ஆனால் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி மாபெரும் அற்புதத்தை நிகழ்த்தி காட்டினார். கலர் டிவி யார், யாருக்கு இல்லையோ அவர்களுக்கு எல்லாம் வழங்கப்படும் என்று கூறி அதையும் நிறைவேற்றினார்.
திருமண உதவி தொகையாக பெண்களுக்கு, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் திருமண உதவி தொகை வழங்கும் திட்டத்தை 1989ல் ஸீ5 ஆயிரத்துடன் தொடங்கினார். 96ல் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது அதனை ஸீ10 ஆயிரமாக உயர்த்தினார். அதன்பின்னர் வந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்தியது. 2006 தேர்தலின் போது அதிமுக நிறுத்திய இந்த திட்டத்தை திமுக ஆட்சி வந்தால் மீண்டும் தொடரப்படும். உதவி தொகை ஸீ15 ஆயிரமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். ஆனால், உதவித் தொகை உயர்த்தப்பட்டு ஸீ20,000 ஆனது. பின்னர் ஸீ25,000 ஆனது. தேர்தல் நேரத்தில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் செய்து முடித்துள்ளவர் கருணாநிதி. முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் கலைஞர் பெயரால் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 108 அவசர கால ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 21 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலத் திட்டங்கள் தொடர மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதேபோல், தக்கலையில் பத்மநாபபுரம் திமுக வேட்பாளர் புஷ்பலீலா ஆல்பனை ஆதரித்தும், குமரியிலும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment