உதய சூரியன் பட்டனை அழுத்தினால், உங்கள் வீட்டில் கிரைண்டனர், மிக்சி ஓடும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை ஆதரித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் 27.03.2011 அன்று செனாய் நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.
தயாநிதி மாறன் பேசியதாவது:
எழும்பூர் தொகுதியில் 6வது முறையாக பரிதி இளம்வழுதியை முதல்வர் கருணாநிதி நிறுத்தியிருக்கிறார் என்றால் என்றென்றும் அவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவராக உள்ளார். தனி ஒருவராக சட்டப்பேரவைக்கு சென்ற போது கூட அதிமுகவுக்கு பாடம் புகட்டியவர். இதனால் அடிக்கடி ஜெயலலிதாவால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சற்றும் தயங்காமல் உங்கள் வாக்குகளை அளித்து அவரை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி எத்தனையோ நலத்திட்டங்களை செய்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை தடுக்கி விழுந்தால் கூட மேம்பாலங்கள் தான் உள்ளது. நாம் கட்டியதை கூட நோண்டி பார்த்து குற்றம் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார் ஜெயலலிதா. ஆனால் முடியவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் பல பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோன்று சென்னையில் இட நெருக்கடியை குறைக்க புதிய நகரை உருவாக்குவோம் என்று முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அண்ணாநகர், கே.கே.நகர், அயன்புரம், மறைமலை நகர், எம்ஜிஆர் நகரை உருவாக்கியவர் முதல்வர் கருணாநிதி. சென்னையை பற்றி கவலைப்படுபவர் அவர். மீண்டும் பெரிய நகர் உருவாக்கப்படும். அதில் குறைந்த செலவில் நீங்கள் சொந்த வீடுகள் கட்டும் நிலை வரும்.
மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தோம். அதை தொடங்கி வைக்க போவதும் முதல்வர் கருணாநிதி தான். அவர் தந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு உங்கள் வீட்டில் உள்ளது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை உங்கள் வீட்டில் யாராவது ஒருவராவது பயன்பெற்றிருப்பார்கள். மே. 14 முதல் மாதத்துக்கு ஒரு முறை 35கிலோ அரிசி இலவசமாக தருவார். டிவி கொடுத்த முதல்வர் கருணாநிதி மிக்சி, கிரைண்டரும் தருவார். இன்னும் அதிகமாக கேட்பீர்களானால் பிரிட்ஜ், வாஷிங் மெஷினும் தருவார். ஒரு தந்தை தான் பெற்ற மகளுக்கு செய்ய வேண்டிய சீதனத்தை முதல்வர் கருணாநிதி வாரி வழங்குவார். இதை எல்லாம் பெற ஏப்ரல் 13ம்தேதி வாக்குப்பதிவு எந்திரத்தில் நீலநிற பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வீட்டில் மிக்சி, கிரைண்டர் எல்லாம் ஓடும். மாணவர்கள் கையில் லேப் டாப் இருக்கும்.
இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.
அவருடன் வேட்பாளர் பரிதி இளம்வழுதி, பகுதிச் செயலாளர் ஏகப்பன், கவுன்சிலர் கோவிந்தன், வட்டச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் அப்பன்துரை, எம்.மணி, காங்கிரஸ் வட்டத் தலைவர் பக்தவச்சலம், ஏழுமலை, அசோக், சுரேந்திரன், டி.தயாநிதி ஆகியோர் உடன் சென்றனர்.
அவருடன் வேட்பாளர் பரிதி இளம்வழுதி, பகுதிச் செயலாளர் ஏகப்பன், கவுன்சிலர் கோவிந்தன், வட்டச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் அப்பன்துரை, எம்.மணி, காங்கிரஸ் வட்டத் தலைவர் பக்தவச்சலம், ஏழுமலை, அசோக், சுரேந்திரன், டி.தயாநிதி ஆகியோர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment