சுனாமியால் பாதிக்கப்பட்ட 5 கடலோர மாவட்டங்களில் ரூ.63 கோடி செலவில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளன என்று முதல் அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர் கருணாநிதி 17.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டு நிறைவு விழாவையொட்டி அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டு, 25.19 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தஞ்சை நகரில் பல அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பேரூராட்சிகள்'' எனும் உள்ளாட்சி அமைப்பு வகையினை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
பேரூராட்சிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த "அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்'' எனும் ஒரு சிறப்புத் திட்டம் நான்கு ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என 11.4.2007 ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு; 6.7.2007 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டு, 3.9.2007 அன்று மாமல்லபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அது முதல் ரூ.280.50 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனைத்துப் பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புர அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.31.84 கோடி மதிப்பீட்டில் 28 பேரூராட்சிகளில் 479 சாலை மற்றும் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
சுனாமி பாதித்த கடலோர மாவட்டங்கள்
சுனாமி பாதித்த 5 கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 19 பேரூராட்சிகளில் ரூ.63.67 கோடி செலவில் சாலைகள் மறு சீரமைத்தல் மற்றும் கட்டிடங்கள் பழுது பார்த்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் 12.78 கோடி ரூபாய் செலவில் 19 பேரூராட்சிகளில் 60,966 உறுப்பினர்கள் அடங்கிய 3,387 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு குழு உறுப்பினர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு நிலையான சொத்துகளை உருவாக்க பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் 969 மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட ரூ.96.90 லட்சம் மானியம் அளிக்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார உதவி மற்றும் சுழல் நிதி பெற்ற 22,891 பயனாளிகளுக்கு உயிர்க் கூறு அங்க அடையாள அட்டை வழங்குவதற்கு இந்த அரசு ரூ.24.33 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்து, அதில் ரூ.11.42 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கும்பகோணம், ஆலந்தூர், வளசரவாக்கம், மதுரை ஆகிய நகரங்களிலும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், நடப்பு நிதியாண்டில் 23 பாதாள சாக்கடைத் திட்டங்கள் 806.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புர உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 136 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 4 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு; மறைமலைநகர் பாதாள சாக்கடைத் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. அரியலூர், உடுமலைப்பேட்டை 66 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளன. முதற்கட்ட அம்பத்தூர் பாதாள சாக்கடைத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.35.86 கோடி மதிப்பீட்டில் 22.6.2010 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகள் 2012 ஜுலையில் முடிவடையும்.
பாதாள சாக்கடைத் திட்டம்
திருவொற்றிழூர் நகராட்சிப் பகுதியில் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தும் பணி தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்ட நிதி உதவியுடன் 5 சிப்பங்களில் ரூ.87.63 கோடி திருத்திய திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2007 ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இப்பணிகள் 2012 டிசம்பரில் முடிவுறும்.
பல்லவபுரம் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.72.10 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சியில் ரூ.6.08 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.14.48 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை முடிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டங்களின் மூலம் 1,70,477 வீடுகளுக்குப் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேம்பாலங்கள்
சென்னை நகரில் பெருகிவரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ரூ.9.72 கோடி செலவில் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் 30.3.2008 அன்றும்; ரூ.19.80 கோடி செலவில் உஸ்மான் சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் 14.08.2008 அன்றும்; ரூ.16.50 கோடி செலவில் கோபதி நாராயணா சாலை மற்றும் திருமலை சாலை சந்திப்பில் கட்டப்பட்ட கலைவாணர் மேம்பாலம் 29.12.2008 அன்றும்; ரூ.19.93 கோடி செலவில் டர்ன்புல்ஸ் சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் 11.12.2009 அன்றும்; ரூ.6.03 கோடி செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் கட்டப்பட்ட ஆலந்தூர் அபிரகாம் மேம்பாலம் 11.12.2009 அன்றும்; ரூ.4.33 கோடி செலவில் ஜோன்ஸ் சாலையில் கட்டப்பட்ட சி.பி.பவளவண்ணன் வாகனச் சுரங்கப்பாதை 11.12.2009 அன்றும் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
ரூ.15.75 கோடி செலவில் ரங்கராஜபுரம் ரெயில்வே சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம், ரூ.13.39 கோடி செலவில் வில்லிவாக்கம் ரெயில்வே சந்திக்கடவு 2ல் வாகன சுரங்கப்பாதை, ரூ.10.55 கோடி செலவில் மணியக்கார சத்திரத் தெருவில் ரெயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகனச் சுரங்கப்பாதை ஆகிய பணிகள் நடைபெறுகின்றன; இப்பணிகள் விரைவில் முடிவடையும்,
மழைநீர் வடிகால்வாய்
சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மழைநீர்த் தேக்கம் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் துறை மூலம், 158.61 கி.மீ. நீளத்திற்கு ரூ.89.68 கோடியில் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை வாழ் மக்களுக்கு மழைக்காலத்தில் உண்டாகும் வெள்ள பாதிப்பினால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்க்கும் விதமாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் மூலமாக சிறிய மற்றும் பெரிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு ரூ.1447.91 கோடி திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்நாள் வரை சென்னை மாநகராட்சி செயல்படுத்திட அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் இதுவே பெருந்திட்டமாகும்.
மெரினா அழகுபடுத்தும் பணி
மெரினா அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் நடைபாதையைச் சுத்தம் செய்வதற்கு, அழுக்கைத் தேய்த்து சுத்தப்படுத்தும் இயந்திரம், புல்தரையைச் சமப்படுத்துவதற்கான உபகரணம், மெரினா கடற்கரையில் முதன் முதலாக மணற்பரப்பில் மணலை ஜலித்து சுத்தம் செய்வதற்கான இயந்திரம், மெரினா கடற்கரையின் நடைபாதையைச் சுத்தம் செய்வதற்கு அமர்ந்து இயக்கும் சிறிய வகையிலான 2 இயந்திரப் பெருக்கிகள் ஆகியன கொள்முதல் செய்யப்பட்டு மெரினா கடற்கரைப்பகுதி எழிலூட்டும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment