முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், வாணியர் முன்னேற்ற பேரவையினர் சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் ஏ.சி.கணேசன், பொதுச் செயலாளர் இளஞ்செழியன், பொருளாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் 28.03.2011 அன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உடனிருந்தார்.
தமிழ்நாடு வாணியர் முன்னேற்ற பேரவை தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகளும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கிறிஸ்தவ அமைப்புகள் அறிவிப்பு :
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் கிறிஸ்தவர் கட்சி மற்றும் தமிழ்நாடு கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ் கிறிஸ்தவர் கட்சியின் தலைவர் ஜான் சுவார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1994 முதல் எங்கள் கட்சி திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கே எங்கள் ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களில் சிறுபான்மையினருக்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். சட்ட மேலவையில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும். கல்லறையில்லா ஊர்களில் அரசு இடம் ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் பி.டி.ஆப்ரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக கிறிஸ்துவ போதகர்கள் ஐக்கியம் பிரசாரத்தில் ஈடுபடும் என்று எங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கிறிஸ்தவ மக்கள் கட்சியின் நிறுவனர் ஆர்.கே.ஜெயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலித் கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெற வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவோம் போன்ற ஏராளமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையை கிறிஸ்தவ கட்சி வரவேற்கிறது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்துள்ளோம். மீண்டும் கருணாநிதியை முதல்வராக்க பாடுபடுவோம். இதற்காக கிறிஸ்தவ மக்கள் கட்சி ஒத்துழைப்பு வழங்கும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகி எழுதிய நூல் ‘தொடரட்டும் நல்லாட்சி’ - முதல்வர் வெளியிட்டார் :
காங்கிரஸ் நிர்வாகி கோபண்ணா எழுதிய நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா, ‘தொடரட்டும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் பேச்சாளர்களுக்கு தேவையான குறிப்புகள் கொண்ட நூல் எழுதியுள்ளார். அதை முதல்வர் கருணாநிதி 28.03.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். நிதியமைச்சர் அன்பழகன் உடன் இருந்தார்.
பின்னர் கோபண்ணா கூறுகையில், “2006 தேர்தலின்போது இதேபோல ‘அராஜக ஆட்சியை வெளியேற்றுவோம்’ என்று நான் எழுதிய நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் ‘வெல்லட்டும் சாதனை கூட்டணி’ என்ற நூல் எழுதினேன். இப்போது இந்த நூல் எழுதி உள்ளேன்” என்றார்.
No comments:
Post a Comment