எஸ்மா, டெஸ்மா சட்டங்களால் அரசு ஊழியர்களை துன்புறுத்திய ஜெயலலிதா இப்போது தேர்தல் வந்ததும் அரசு ஊழியர்களின் பாதுகாவலர் என்று கூறி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
குமரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 28.03.2011 அன்று பிரசாரம் செய்தார். நாகர்கோவில் வடசேரியில் திமுக வேட்பாளர் மகேஷை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுபவர் கருணாநிதி. திமுகவின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2 முறை முதல்வராக இருந்தார். 2 முறை ஆட்சியில் இருந்த போதும் அவர் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கும் தகுதியும், தெம்பும் அவர்களுக்கு உண்டா? திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து தனது தேர்தல் அறிக்கையாக ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று பிரசாரத்தில் கூறுகிறார். அரசு ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்ததே அவர்தான். அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் உரிமைகளை, கோரிக்கைகளை எடுத்து சொல்ல கூடாது. வீதிக்கு வந்து போராடக்கூடாது. கோரிக்கை மனுக்களை கோட்டையில் வந்து தரக்கூடாது. போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தவர்களைக்கூட இரவோடு இரவாக கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்தவர். இதனால் ஏற்பட்ட அவமானத்தில் எத்தனையோ பேர் நெஞ்சு வலி வந்து உயிரை மாய்த்த நிலை அந்த ஆட்சியில் இருந்தது.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதற்காக சாலை பணியாளர்கள் 10 ஆயிரம் பேரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியவர். மக்கள் நல பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதால் சுமார் 80 பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டதும் ஜெயலலிதா ஆட்சியில்தான். தேர்தல் வந்துவிட்டதால், ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிப்பது போல், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 28.03.2011 அன்று மாலை முதல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று ஸ்டாலின் பேச்சை கேட்டனர். திறந்த வேனில் குடை பிடித்தபடியே ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment