மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் 18.03.2011 அன்று வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் தேர்தல் பணி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் சுறுசுறுப்புடன் தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் துவங்கி விட்டனர்.
திமுக போட்டியிடும் 119 தொகுதிகளுக்கான பட்டியலை முதல்வர் கருணாநிதி 17.03.2011 அன்று மாலை வெளியிட்டார். பாமகவும் வேட்பாளர்களை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகளிலும் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிடும் என தெரிகிறது.
திமுக பட்டியல் வெளியானதை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்கள் சென்னையிலிருந்து தொகுதிகளுக்கு திரும்பியுள்ளனர். தொகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை துவக்கி விட்டனர். மேலும் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அலுவலகம் திறப்பது, வேட்பு மனுதாக்கலுக்கு தயாராவது உள்ளிட்ட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஐந்து ஆண்டுகால அரசின் சாதனைகள், தொகுதி வாரியாக நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மேலும் தேவைகள் குறித்த பட்டியலை பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வகையில் தயாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னையிலிருந்து 18.03.2011 அன்று காலை மதுரை வந்தார். அவரை வேட்பாளர்களும் அமைச்சர்களுமான பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அரசு தலைமை கொறடா சக்கரபாணி, மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, கவுஸ் பாட்சா உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் தேர்தல் பணி குறித்து அமைச்சர் மு.க.அழகிரி தீவிர ஆலோசனை நடத்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment