கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின், 21.03.2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திமுக பொருளாளரும் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் 21.03.2011 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி 4&வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் டெபாசிட் தொகையை செலுத்தினார். உறுதிமொழி வாசித்த பின்னர் படிவத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அவருடன் மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்எல்ஏ, முன்னாள் எம்.பி, சண்முகசுந்தரம், காங்கிரஸ் சார்பில் கோவிந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் கபிலன் ஆகியோர் சென்றனர்.
பின்னர் நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:
உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
திமுக கூட்டணியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த தேர்தலில் எனக்கு அமோக வெற்றி கிடைக்கும் அளவுக்கு வரவேற்பு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்து 6&வது முறையாக கருணாநிதி முதல்வராவார்.
ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுவிட்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறியது ஏன்?
தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் விரும்பி வலியுறுத்தினர். என்னை முதல்வரும், பொதுச் செயலாளரும் இங்கே நிறுத்தியுள்ளனர். தலைமையின் கட்டளையை ஏற்று இங்கு போட்டியிடுகிறேன்.
திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?
2006&ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். சொன்னதை முதல்வர் செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
எதிரணி கூட்டணியில் சிக்கல் உருவாகி உள்ளதே?
அதை தீர்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பு.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஏராளமான திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித் தனர்.
No comments:
Post a Comment