கலைஞரை 6வது முறையாக முதல் அமைச்சர் ஆக்க என்னென்ன வழி முறைகள், யுக்திகள் என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக சென்னையில் 17.03.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் தேர்தல் களத்தில் ஒன்றாக இருக்க கடந்த காலங்களில் முயற்சி எடுத்தோம். ஆனால் அப்போது முடிவு என் கையில் இல்லை. இப்போது இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த கூட்டணியில் சமய, சமுதாய நல்லிணக்கம் பிரதிபலிக்கும் பா.ம.க. தொண்டர்களும் விடுதலை சிறுத்தை தொண்டர்களும் நீண்ட நாட்களாக எதிர் பார்த்தது போல் இப்போது கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறும். 6 வது முறையாக கலைஞர் முதல் அமைச்சராக பொறுப்பேற்பார். பா.ம.க. போட்டியிடும் 30 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் பலமாக உள்ளனர்.
அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இருவரும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம். கலைஞரை 6 வது முறையாக முதல் அமைச்சர் ஆக்க என்னென்ன வழி முறைகள், யுக்திகள் என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம் என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. எற்கனவே சமூக மொழி, இன உணர்வு தளங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். தமிழர் பாதுகாப்பு தளத்தில் 3 ஆண்டுகள் தீவிரமாக பணி யாற்றி உள்ளோம். இந்த இரு இயக்கங்களும் இணைய முடியாது, இணைய கூடாது என்று நினைத்தவர்களின் கனவு கோட்டை தகர்ந்து விட்டது.
இப்போது நாங்கள் இணைந்திருப்பதால் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவதை உறுதி மொழியாக ஏற்று பிரசாரம் செய்வோம்.
வன்னியர்கள், தலித்துகள் ஒருங்கிணைந்து வாழ டாக்டர் ராமதாஸ் ஏராளமான செயல் திட்டங்களை வகுத்து வந்துள்ளார். எங்களின் 20 ஆண்டு கால கனவு நனவாக இந்த கூட்டணி மூலம் அருமையான சூழல் உருவாகி உள்ளது. பா.ம.க. இந்த கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம். எனவே அவர்கள் விரும்பிய குன்னம், புவனகிரி ஆகிய தொகுதிகளை விட்டுக் கொடுத்தோம்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் குரு போட்டியிட இருந்ததால் குன்னம் தொகுதியை தி.மு.க. கேட்ட படி விட்டு கொடுத்தோம். இப்படி எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நல்லிணக்க உறவை உருவாக்கி இருக்கிறோம். எனவே விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் இணைந்து நல்லிணக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள் என்றார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.
கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதே?
பதில்: இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: தேர்தல் முடிவில் தொங்கு சட்டமன்றம் வந்தால் கூட்டணி ஆட்சி அமைப்பீர்களா?
பதில்: அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment