எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை ஆதரித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் 22.03.2011 அன்று நடந்தது. பகுதிச் செயலாளர் ஏகப்பன் தலைமை வகித்தார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை அறிவித்தவுடன் நமக்கெல்லாம் தனித் தெம்பு வந்துவிட்டது. பெரிய ஆயுதத்தை நம்மிடம் கொடுத்துள்ளார். முதல்வர் கருணாநிதி சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்.
அவர் சொன்னபடி 70 சதவீத இலவச கலர் டிவிக்கள் கொடுத்தாகி விட்டது. இனி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த போது ஏழைகளுக்கு இலவச கிரைண்டர், மிக்சி தருவதாக அறிவித்துள்ளார். இது தாய்மார்கள் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துள்ளது.
ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தர முடியாது என்று பேசியவர்கள் முன் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை கொடுத்தார். இப்போது 35 கிலோ அரிசியை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார்.
மூத்த குடிமக்கள் எல்லாரும் எப்போது மே 13 வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 60 வயது தாண்டியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்ற அறிவிப்பு தான் அதற்கு காரணம். ஒவ்வொரு வீடுகளிலும் வயதானவர்கள் இருப்பார்கள். அவர்கள் நோய்வாய் படும்போது மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வார்கள். அதற்கு வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைக் கூறி தட்டிக் கழிப்பதை பார்த்திருப்போம். அதுபோன்ற சமயத்தில் உதவுவதற்காகவும் ஒரு பிள்ளை, தந்தைக்கு ஆற்றும் கடமையை போன்று, மருத்துவர் ஒருவர் இல்லம் தேடிச் சென்று சிகிச்சை அளிப்பார் என்பதையும் அறிவித்துள்ளார்.
அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அவர் சொல்லாததையும் செய்வது தான். இலவச காஸ் அடுப்பு, கலர் டிவி தந்தவர், இனி வாஷிங் மிஷின், பிரிட்ஜையும் வைத்துக் கொள்ளுங்கள் என்பார். இந்த வேலைகளை எல்லாம் ஆண்கள் தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படுவது தெரிகிறது. முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் தான் நிற்கிறார் என நினைக்க வேண்டாம். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை “கதாநாயகி” 234 தொகுதிகளிலும் நிற்கிறது.
தேர்தல் அறிக்கை தான் நமது வேட்பாளர். அதை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சென்றாலே நமது வேட்பாளர் வெற்றி பெறுவார். ஒரு முறை அல்ல இருமுறை அல்ல 3 முறை நாம் அதை தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். மீண்டும் முதல்வராக கருணாநிதி வந்தால் தான் இலவச கலர் டிவி கிடைக்கும். அந்த அம்மா வந்தால் கிடைக்காது.
இவ்வாறு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசினார்.
No comments:
Post a Comment