சிறுவியாபாரிகளிடம் பணம், பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
தமிழக சட்டபேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, கமிஷனர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 14.03.2011 அன்று சென்னை வந்தனர். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை மீனம்பாக்கம் டிரைடன்ட் ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் குரேஷி ஆலோசனை நடத்தினார். காலை 11 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 1.30 மணி வரை நடந்தது.
திமுக சார்பில் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் கல்யாண சுந்தரம், கிரிராஜன் பங்கேற்றனர். அதிமுக சார்பில், எம்பிக்கள் பாலகங்கா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில், முன்னாள் பொதுச்செயலாளர் சேலம் பாலு என்ற பாலசுப்பிரமணியன், மக்பூல் ஜான், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, சைதை சிவா, பாஜ சார்பில், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், சுகுமாரன் நம்பியார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில், முன்னாள் எம்எல்ஏ சி.பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில், ஆறுமுக நயினார், ரமணி, பகுஜன் சமாஜ் சார்பில், கல்யாண சுந்தரம், ராஜப்பா, தேசியவாத காங்கிரஸ் சார்பில், காமாட்சி, முத்துராமன் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து மதியம் 3 மணி முதல் 5 மணி வரை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு தலைமை செயலாளர் எஸ்.மாலதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகன், போலீஸ் டிஜிபி லத்திகா சரண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், தேர்தல் பிரிவு ஐஜி சுந்தரமூர்த்தி மற்றும் பார்வையாளர்களாக வந்துள்ள 5 ஐஜிக்கள் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குரேஷி கேட்டறிந்தார். மாலை 6 மணிக்கு தேர்தல் விளம்பரம், செய்திகள் வெளியிடுவது தொடர்பாக அனைத்து பத்திரிக்கை துறை நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் வெளியே வந்த அரசியல் கட்சியினர் அளித்த பேட்டி.
டிஆர்.பாலு (திமுக):
சிறுவியாபாரிகள், பொருட்களை வாங்க செல்லும் வியாபாரிகள், குடிசைத் தொழிலான பெட்ஷீட் விற்பனைக்காக கொண்டு செல்வோரிடம் போலீசார் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல் காங்கேயத்தில் இருந்து கோவைக்கு தேங்காய் வாங்க சென்ற வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 10 நாட்கள் அல்லது 1 வாரதத்திற்கு முன்னதாக பூத் சிலிப்பை தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
பாலு (காங்கிரஸ்):
பாலு (காங்கிரஸ்):
தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷன் எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. எந்தவித குழப்பத்திற்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆணையம் விதித்துள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேர்தலை சந்திப்போம். புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை குளறுபடியை களைய வேண்டும்.
வேலு (பாமக):
தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் செலவின மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வேட்பாளர்கள் சார்பில் ஏஜென்டுகளை நியமிக்க வேண்டும். செலவு கணக்குகளை சரிபார்க்கும்போது இவர்களுடன் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். வாக்காளர்கள் ஓட்டளிக்கும் வகையில் பந்தல், தண்ணீர் வசதி, வயதானவர்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. அதை ஏஜென்டுகள் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment