கவிஞர் வைரமுத்து எழுதிய ‘1000 பாடல்கள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 02.01.2011 அன்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திமுக அரசு குரல் கொடுத்ததை காட்டி 1989ம் ஆண்டு திமுக அரசு கலைக்கப்பட்டது. அப்போது வைரமுத்து எழுதிய, ‘அடியே அனார்கலி, உனக்கு பிறகு இந்த நாட்டில் உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம்தானடி’ என்று கவிதை வெளிவந்தது. அந்த கவிதையை படித்த நான், அவருக்கு வாழ்த்து சொன்னேன். அப்போது ஆட்சி கலைக்கப்பட்டது எனக்கு ஆதாயம் தான் என கூறினேன். ஏன் என்று அவர் கேட்டார். இப்படி ஒரு அருமையான கவிதை எனக்கு கிடைத்திருக்காது அல்லவா என்றேன். இனியும் இப்படிப்பட்ட கவிதை எழுதும் நிலை எனக்கு வரக்கூடாது என வைரமுத்து கூறினார். எல்லோரும் ஒன்றாக இருந்தால், இனி அப்படிப்பட்ட நிலை வராது.
தமிழகத்தில் கட்டாயம் இந்தி என்பதை எதிர்த்து போராட்டங்கள் செய்த காலம் அது. அப்போது 13 வயது எனக்கு. கட்டாய இந்தியை எதிர்த்து ஒரு பாடல் எழுதினேன். அப்போது வந்த ஆர்வம் தான் எனக்கு அடித்தள கொள்கை. நான் இன்றும் சொல்கிறேன். நான் நாத்திகன். அந்த கொள்கையின் அடிப்படையில் தான் இளைஞனாக இருக்கும்போதே பாடல்கள் எழுதியுள்ளேன். வைரமுத்து திரைப்படத்திற்கு 1000 பாடல்கள் எழுதியுள்ளார். அதன் மூலம் லாபம் பெற்றவர்கள் வாழ்த்தி மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.
மருதநாட்டு இளவரசி என்ற படத்தை எழுதினேன். எம்ஜிஆர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். மைசூரில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின் கோடம்பாக்கத்தில் உள்ள டப்பிங் தியேட்டரில் போட்டு பார்த்தோம். அப்போது நான் எழுதிய வசனம் எனக்கே புரியாமல் இருந்தது. அடுத்த நாளே படம் வெளியிட வேண்டும். அதனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே விழித்தோம். உடனே எனக்கு ஒரு யோசனை வந்தது. படத்திற்கு போட்ட ரீ&ரிக்கார்டிங்களை எடுத்து விட்டு, போட்டு பார்க்க சொன்னேன். அப்போது வசனம் தெளிவாக புரிந்தது.
எனவே வைரமுத்து எவ்வளவு தான் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதினாலும், எழுதிய வார்த்தைகள் மாற்றப்படுவதால், அது புரியவில்லை என்ற கவலை அவருக்கும், எனக்கும் உள்ளது. எனவே கவிஞர்களை பாதுகாக்கும் பொறுப்பு இசை அமைப்பாளர்களுக்கு உண்டு. பாட்டு புரியும்படி இசை அமைத்தால் அது பாட்டுக்கும் பெருமை, இசை அமைத்தவர்களுக்கும், எழுதியவர்களுக்கும் பெருமை.
20 ஆண்டு காலமாக காலையில் நான் எழுந்தவுடன் 8 மணிக்கு எனது தொலைபேசியில் அவரது குரல் ஒலிக்கும். அவர் கேட்பதற்கு விடையளிப்பேன். அப்போது ரஜினி, கமலை பற்றி எல்லாம் பேசுவோம். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருப்பவர் வைரமுத்து. தமிழகத்தில் முதல்வராக இருக்கும் நான், இன்று வரும் பிரதமரை வரவேற்பது தான் மரபு. ஆனால் நான் அங்கு செல்லாமல் இங்கு வந்துள்ளேன்.
சேரலாதன் இரும்பொறை என்ற மன்னன் அரண்மனையில் போர்முரசு, மங்கல முரசு வைக்கப்பட்டு இருந்தது. அந்த முரசுகளை தவறாக கையாண்டால் அவர்களின் தலை வெட்டி எறியப்படும். அப்போது மன்னனை காண புலவர் ஒருவர் அங்கு சென்றார். அதனால் அங்கு சென்ற அசதியில் முரசு மீது கால் வைத்து படுத்து தூங்கிவிட்டார். காவலர்கள் மன்னனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மன்னன் வாளுடன் வந்தான். ஆனால் படுத்திருந்தது புலவர் என்று தெரிந்ததும், அவரது தூக்கம் கலைந்துவிடாமல் இருக்க விசிறி எடுத்து விசிறினான். இதை பார்த்த புலவர் எழுந்து நின்று, ‘ஏன் இப்படி செய்தீர்கள்’ என்று கேட்டதற்கு ‘இது தமிழுக்கு செய்யும் தொண்டு’ என்று மன்னன் சொன்னான்.
அதுபோல் தான் இந்த நிகழ்வும். பிரதமரை வரவேற்பது முக்கியமானதாக இருந்தாலும், தமிழுக்கு செய்யும் தொண்டு அதைவிட முக்கியமானது எனக் கருதி இங்கு வந்தேன். வைரமுத்து இன்னும் பல பாடல்கள் எழுத வேண்டுமென எல்லோரும் கேட்டனர். நானும் அதையே வெளிப்படுத்தி பெருமை சேர்க்க விரும்புகிறேன். தமிழை வளர்ப்பதற்கு என்றும் நான் துணையாக இருப்பேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
கவிஞர் வைரமுத்து நினைவு பரிசு வழங்கி, ஏற்புரை ஆற்றினார். விழாவில் இயக்குநர் கே.பாலசந்தர், கவிஞர் வாலி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் மணிரத்னம், சங்கர், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், முதல்வர் துணைவி ராஜாத்தியம்மாள், கலைஞர் டி.வி. இயக்குநர் அமிர்தம், அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி உட்பட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment